வெற்றி நூலகம்: இந்திய உயர்கல்விக்கு ஆபத்தா?

By ம.சுசித்ரா

சுயசிந்தனையை வளர்ப்பதே உயர்கல்வியின் நோக்கம் என்ற கொள்கையோடு தத்துவப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவர் தலைமையில் 1948-ல் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். அனைவருக்கும் தரமான உயர் கல்வி என்ற இலக்கோடு 1956-ல் பல்கலைக்கழக மானியக் குழுவாக (யு.ஜி.சி.) அது சட்டபூர்வமாக நிலைபெற்றது. மாணவர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முன்வைத்த சி.டி.தேஷ்முக், மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவத் திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் ஊதியத்துக்கு யூ.ஜி.சி.யின் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள்.

இப்படிக் கல்வியாளர்களாலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் யு.ஜி.சி. ஆனால், தற்போது அது கலைக்கப்படவிருக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (Higher Education Commission of India - HEI) என்ற புதிய கல்விக் கழகம் வரப்போகிறது. அப்படியானால் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் தொடர்பில்லாதவர்கள் இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்க உரிமைகொண்டவராவர்.

கோரிக்கையின் தொகுப்பு

இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்த நடவடிக்கையின் முன்னோட்டம் ஜூன் 28 அன்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் அதிலும் ஆங்கில மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது.

கருத்துகேட்கும் முன்வரைவாகத்தான் அது முன்வைக்கப்பட்டாலும் குறுகிய கால அவகாசம் மட்டுமே கருத்து கேட்புக்குத் தரப்பட்டது. அதிலும் ‘மசோதா’ என்பதற்குப் பதிலாக ‘சட்டம்’ என்ற பதத்துடன் ‘இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018’ முன்வரைவாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த முன்வரைவை ஆழமாகப் பரிசீலித்த தமிழகக் கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள் இம்மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்திக் கடிதங்கள், கட்டுரைகள், தீர்மானங்கள் எழுதிவருகிறார்கள்.

தனிநபர்களும் அமைப்புகளும் இவ்வாறு எழுதியவற்றை ‘கல்வி: சந்தைக்கான சரக்கல்ல’ என்ற புத்தகமாகத் தொகுத்துத் தற்போது பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. முனைவர்  ச.சீ. ராஜகோபாலன், வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டவர்கள் எழுதிய கடிதங்கள், தீர்மானங்கள், கட்டுரைகளைக்  (தமிழ் – 9, ஆங்கிலம் - 4) கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொகுத்து இருக்கிறார்.

தகுதி என்னும் பெயரில் பாகுபாடு

‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு' சார்பில் ஜூலை 5 அன்று இந்திய அரசின் மனிதவள மேம்பாடுத் துறை அமைச்சருக்கு பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதிய கடிதத்தோடு புத்தகம் தொடங்குகிறது.

தொடக்கப் பள்ளிக்கான சமமான வாய்ப்புகள்கூட இல்லாத பல கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது ‘தகுதி மட்டுமே’ என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு பாகுபாடுகளை மேலும் ஆழமாக வேரூன்றும் முயற்சியே இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018 என்று விளக்க முயல்கிறது இந்தக் கடிதம்.

குறிப்பாக, ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்குதல், முறைப்படுத்துதல், மூடுதல் உள்ளிட்ட அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உரித்தானது என்ற சட்டத்துக்கு இந்த முன்வரைவின் உள்ளடக்கம் எதிராக உள்ளது. இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கிய இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சட்ட உரிமை பறிபோகும்.

அதுமட்டுமின்றி உலக வர்த்தக அமைப்பின் சேவையில் ஒரு பகுதியான ‘காட்’ ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையும் இந்த முன்வரைவுச் சட்டத்தின் உள்ளடக்கத்தையும் ஒப்பிட்டுப் படிக்கும்போது உயர்கல்வியை முழுமையாகச் சந்தையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைதான் இந்தச் சட்டம் என்பது தெரியவருகிறது. இதுபோன்ற விமர்சனப் புள்ளிகளை முன்வைத்து யு.ஜி.சி.-யை வலுப்படுத்தக் கோரிக்கை விடுத்து முடிவடைகிறது இந்தக் கடிதம்.

வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘யு.ஜி.சி. பழுதுபட்டதா? பழுதுபடுத்தப்பட்டதா?’ என்ற கட்டுரை, பல்கலைக்கழக மானியக் குழுவை உள்ளும் புறமுமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. யு.ஜி.சி.யின் தலையாய கடமைகளை விளக்குவதன் மூலமாக அதன் அவசியத்தையும் பங்களிப்பையும் வாசகர்களுக்கு உணர்த்துகிறார் கல்வியாளர் இராஜகோபாலன்.

புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அமைத்தல், புதிய பாடங்களைத் தொடங்க அனுமதி அளித்தல், மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளும் கடமைகளும் கொண்டது யு.ஜி.சி. ஆசிரியர் ஊதியத்தை நிர்ணயித்தல், ஆசிரியர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்க எம்.ஃபில்., பி.எச்டி. படிக்கப் படிப்புத்தொகை, ஊதியத்துடன் பி.எச்டி. படிக்க விடுப்பு போன்ற திட்டங்களையும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதலையும் சிறப்பாக அறிமுகப்படுத்திக் கடந்த 60 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்திவருகிறது யு.ஜி.சி.

இதன் செயல்பாட்டில் தொய்வு ஏற்படக் காரணம் 1990-களில் இந்திய அரசுகள் வரிந்துகொண்ட தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தாம். உலகமயமாக்கலின் தாக்கத்தால் கல்வி இனி, சேவையாகக் கருதத் தேவை இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டதால் புற்றீசல் போலத் சுயநிதிப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முளைத்தன. இப்படியாக, இந்திய உயர்கல்வி வீழ்ச்சி அடைந்தது. அதற்கு யு.ஜி.சி. பொறுப்பல்ல என்று அறுதியிட்டுக் கூறுகிறார் கல்வியாளர் ராஜகோபாலன்.

vetrijpg

வெறும் 25% கல்வியாளர்கள்

யு.ஜி.சி.யின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளும் அதேவேளையில் திட்டமிடப்பட்டிருக்கும் உயர் கல்வி ஆணையத்தில் தென்படும் சிக்கல்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனேகக் கட்டுரைகளில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. உயர்கல்வியின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் பல திட்டங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

யு.ஜி.சி.யைப் பொறுத்தவரை அந்த அமைப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் கல்வியாளர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், புதிய உயர்கல்வி ஆணையத்தில் 25 சதவீதம் மட்டுமே கல்வியாளர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் புதிய ஆணையத்துக்குத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களை இனிக் கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்க முடியாது. மத்திய அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தேர்வுசெய்யும்.

இதுக்கு ஒரு படி மேலே போய் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இதில் இடம்பெறுவார்களாம். யு.ஜி.சி.யின் உயிர்நாடி பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கல்வியாளர்கள் மானியம் வழங்குதல். அந்த அதிகாரம் கல்வியாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசு அதிகாரிகளிடம் இனி வழங்கப்படும்.

ஆகையால், பேராசிரியர்கள் முதல் துணைவேந்தர்களின் நியமனம்வரை, மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் உள்ளிட்ட அத்தனையும் இனிச் சொற்பமான எண்ணிக்கையில் கல்வியாளர்களையும் பெரும்பான்மையாக அரசு அதிகாரிகளையும் கொண்ட குழு தீர்மானிக்கும்.

சமூகப் பாகுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் நீடிக்கும் சமூகத்தில் யு.ஜி.சி. போன்ற ஜனநாயக அமைப்பைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலமாகத்தான் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கி உள்ள மக்கள் உயர் கல்வி பெற முடியும் என்பதை உரக்கச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

கல்வி: சந்தைக்கான சரக்கல்ல | தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.

தொலைபேசி: 044-24332924

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்