ஆனந்த ஜோதி

நல்ஆரோக்கியம் அருளும் பண்ருட்டி தன்வந்திரி பெருமாள்

பொ.பாலாஜிகணேஷ்

மனிதனுக்கு உண்மையான செல்வம், நோய் நொடி இல்லாத வாழ்க்கை தான் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான், வேதங்களின் காவலர், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் இறைவன் என்று போற்றப்படுகிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பண்ருட்டியில் வாழ்ந்த பெருமாள் பக்தர் ஒருவர் பல ஊர்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் நோயால் பாதிக்கப்பட்டதால் வெளியூர் சென்று பெருமாளை தரிசிக்க இயலவில்லை. தாம் இருந்த இடத்தில் இருந்தே ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் கோயிலில் இருக்கும் தன்வந்திரி பகவானிடம், ‘என்னை நோய் நொடியிலிருந்து மீட்டெடுப்பாய் எம்பெருமானே...’ எனவேண்டிக்கொண்டார். அதன்பலனாக அவர் விரைவிலேயே குணமடைந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அவர் கனவில்  தோன்றிய தன்வந்திரி பகவான், ‘நான் எங்கும் இருக்கிறேன். எனவே திருவரங்கம் வரமுடியவில்லையே என கவலை கொள்ளாதே!  உங்கள் ஊரிலே எனக்குக் கோயில் அமைத்து வழிபடவும். நான் அனைவரையும் நோய் நொடியிலிருந்து காக்கிறேன்’ என்று கூற, அதன்படி இக்கோயில் கட்டப்பட்டது.

முகப்பு வாசல் வழியே உள்ளே நுழைந்தால், மூலிகைத் தோட்டத்தின் நடுவில் எம்பெருமானின் கோயிலைக் காணலாம். கோயில் வளாகத்துக்குள் பலவிதமான மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது. அதை சுவாசிக்கும்போது மிகப்பெரிய ஆற்றலும் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுபடு வதைக் காணலாம்.

கருவறையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தி, மார்பில் அமிர்தலட்சுமி தாயாரோடு சேவை சாதிக்கிறார், மூலவர் தன்வந்திரி வைத்திய நாராயணப் பெருமாள். இவரது திருவுருவம் திருமலை திருப்பதி சிற்பக் கல்லூரியில் உருவாக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு. தினசரி சுப்ரபாத பூஜை, கோ பூஜைசெய்யப்படுகிறது. கருடாழ்வாருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு நவ கிரகங்களுக்கு உகந்த மூலிகைகள் நவகிரக சந்நிதியாக அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிரசாதமாக தரப்படும் அமிர்த கஷாயம், ஆயுர்வேத லேகியத்தை உட்கொண்டால் அனைத்து வித நோய்களும் தீரும் என்பது ஐதீகம். தனவந்திரி ஜெயந்திதினத்தில் மட்டுமே பெருமாளுக்கு புளியோதரை நைவேத்யம் செய்யப்படுகிறது. கூடுதல் தகவல்களை 9486390418 (ஸ்ரீராம் பட்டர்) என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பெறலாம்.

அமைவிடம்: பண்ருட்டி பேருந்து நிலையம் சமீபம் 4 முனை சாலை அருகில் உள்ளது இத்தலம்.

SCROLL FOR NEXT