இந்து டாக்கீஸ்

விஜய் காட்டிய அக்கறை! | ப்ரியமுடன் விஜய் - 12

Guest Author

‘இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு உருவமில்லை’ என்கிற பாடல், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நான்கு முறை வரும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உணர்வுகள் வழிந்தோடும் சூழ்நிலைகள் இடம்பெற்றுச் சாகாவரம் பெற்றது. இளைய ராஜா இருந்தால்தான் ‘மியூசிக்கல் ஃபிலிம்’ என்கிற நிலையை எஸ்.ஏ.ராஜ்குமாரை வைத்துச் சாதித்துக் காட்டினார் இயக்குநர் எஸ்.எழில். சிறந்த கதைப் படங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்த அவர், இன்று காதல் - நகைச்சுவை கதைக் களங்களில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து
வருகிறார். அவர், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ பட நாள்களின் மனப்பதிவுகளை இந்த வாரமும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்:

“அறிமுக இயக்குநர்களின் கதைகளைக் கேட்டு, அதிலிருந்து தனக்கான கதைகளைத் தேர்வு செய்து நடித்த அனுபவம் விஜய்க்கு நிறையவே உண்டு. ஒரு ஸ்டார் ஆன பிறகும் அறிமுக இயக்குநர்களின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். அவர்தான் ஓர் அறிமுக இயக்குநரை ஓகே செய்கிறார். அதனால், அந்த இயக்குநரின் வெற்றியில் தனக்குச் சமமான பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படும் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’யை அவர் எடுத்துக்கொள்கிறார். ‘இவர் படத்தைச் சரியாகச் செய்துவிட வேண்டுமே’ என்கிற பயம், தான் தேர்வு செய்த அறிமுக இயக்குநரைவிட விஜய்க்குதான் அதிகமாக இருக்கும். அதனால், அறிமுக இயக்குநர் களை மிகவும் பக்குவமாக ‘ஹேண்டில்’ பண்ணுவார். அவர்களை ‘எக்ஸ்ட்ரா கேர்’ எடுத்துப் பார்த்துக்கொள்வார்.

அவரின் இந்தப் பொறுப்பான குணத்தைத் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படப்பிடிப்பில் கடைசிவரை நான் கண்டு வியந்திருக்கிறேன். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். நான் ‘ஷாட்’ கம்போஸ் செய்துவிட்டு, அந்த ஷாட் டில் இடம்பெறும் ஒவ்வொரு கேரக்டரையும் நடித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். விஜய் சற்று தூரமாக அமர்ந்துகொண்டு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கண்டும் காணாததுபோல் கவனிப்பார். நான் எதிர்பாராத நேரத்தில் என்னிடம் வந்து ‘இப்போது நடித்ததை இன்னொரு முறை செய்து காட்ட முடியுமா?’ என்று கேட்பார். நான் செய்து காட்டியதும், ‘இதையே நான் செய்துவிடுகிறேன்.. ரொம்பப் பக்காவா இருக்கு’ என்று சொல்லி மனதில் ஏற்றிக் கொள்வார். நம்மைப் பாராட்டுவதற்காகச் சொல்கிறார் என்று பார்த்தால், நான் என்ன எதிர்பார்த் தேனோ அதையே ஷாட்டின் போது கொடுத்து விடுவார். ஷாட்டில் அவர் செய்வது எப்போதாவது தவறாக இருந்து விட்டால், நான் அதைச் சொல்லத் தயங்கிய படி நிற்பேன். அதைப் பளிச்
சென்று கண்டுபிடித்து, ‘என்ன யோசிக்கிறீங்க? நான் சரியா பண்ண லைன்னு நினைக்கி றேன்.. எங்க.. நீங்க நினைக்கிறதைப் பண்ணிக் காட்டுங்க?’ என்பார். நான் எனக்கு என்ன வேண்டும் என்பதைச் செய்து காட்டுவேன். ‘இதைச் சொல்ல வேண்டியது தானே..’ என்று நான் கேட்டதை 2வது டேக்கிலேயே கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் கற்பூரம்! என் மனசாரச் சொல்கிறேன்; முதல் பட இயக்குநருக்கு விஜய் மட்டும் கிடைத்து விட்டால் அது பெரிய ‘கிஃப்ட்’தான்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ கதையில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டு, வேலைகளைத் தொடங்கியதும் தயாரிப்பாளர் சௌத்ரி சார், ‘யாருப்பா ஹீரோயின்?’ என்று கேட்டார். நான் ‘சிம்ரன்’ என்றேன். அவர் ஷாக் ஆகி விட்டார். ‘யோவ்! இவ்வளவு நல்ல கதையை பண்ணிட்டு.. கிளாமர் ஹீரோயின்னு பேர் வாங்கியிருக்க சிம்ரனைத் தேர்வு பண்ணி யிருக்கேன்னு சொல்ற?’ என்றார். ‘சிம்ரனுக் குப் பாந்தமாகச் சேலை கட்டி, லுக்கை மாற்றி விடலாம் சார்’ என்றேன். எனது நம்பிக்கையை மதித்து, சிம்ரனிடம் கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தார். அப்போது சிம்ரன் செம்ம பிஸி. கதையைக் கேட்கக் கேட்க கூஸ் பம்ஸ்.. கண்ணீர் என்று ரியாக்‌ஷன் காட்டிக்கொண்டே வந்த சிம்ரன், கிளை மாக்ஸைக் கேட்டு முடித்ததும் செம்ம ஹேப்பி ஆகிவிட்டார். அவர் நல்ல கதை அறிவு உள்ள பெண். ‘இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்காதான்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இதுதான் எனக்கு சரியான சேஞ்ச்ஓவர். ரொம்ப நன்றி’ என்று சிம்ரன் நெகிழ்ந்துபோனார். அவர் கதையைக் கேட்டபோது எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அதே ஆர்வத்தைத் தனது கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடிப்பதிலும் காட்டினார்.

படத்தொகுப்பு முடிந்து ரீரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்த சமயம். அப்போதெல்லாம் ஒவ்வொரு ரீலாகத்தான் பின்னணி இசைக்கோப்பு நடக்கும். முதல் ரீலுக்கு 10 இசைக் கலைஞர்களை வைத்து பின்னணி இசையைச் சேர்த்துக்கொண்டிருந்தார் எஸ்.ஏ. ராஜ்குமார். இரண்டாவது ரீலுக்கு 20 பேர், மூன்றாவது ரீலுக்கு 30 பேர் என்று எண்ணிக்கை ஏற்றிக் கொண்டு போய்.. ரெக்கார்டிங் தியேட்டரில் இசைக்கலைஞர்கள் உட்காரவே இடமில்லாத அளவுக்கு ஒரு ‘சிம்பொனி ஹால்’ போல் ஆக்கி விட்டார். காரணம் வேறொன்றும் அல்ல; கதையின் போக்கும் அதில் கதா பாத்திரங்களின் நிலையும் அவற்றின் உணர்வுகளும்தான். கிளைமாக்ஸ் எப்படி அமைந்திருக்கிறது என்பதை விரைந்து பார்க்க வேண்டும் என்று லைவ் வாசித்த இசைக் கலைஞர்கள் எல்லாம் உணர்வு மேலிட பதற்றமோடு வாசித்துக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு இசைக் கலைஞர்கள் கூட்டம் ஒரு படத்தின் ரீரெக்கார் டிங்குக்கு கூடியதைப் பற்றிக் கேள்விப்பட்டு, பிரபல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதை வேடிக்கைப் பார்க்கக் கூடி விட்டார்கள். இப்படி, பின்னணி இசைச் சேர்ப்பின்போதே இப்படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக அமைந்து போனது.

பின்னணி இசைக்கே இப்படியென்றால், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசைக் கற்பனையும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளும் படத்தை இசைக் காவியமாக மாற்றிவிட்டன. எஸ்.ஏ.ராஜ்குமார் சார் 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருப்பார். அவற்றில் 80 படங்களுக்குமேல் வெள்ளி விழா, 100 நாள் படங்கள்தான். அந்த அளவுக்குப் பாடல்களைக் கேட்டவுடன் மனதில் தங்கித் தாலாட்டும் மெல்லிசையாகவும் அதில் இடம்
பெறும் வரிகளை இனிய, எளிய கவிதை வரிகளாகவும் இடம்பெறச் செய்துவிடுவார். இதில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய வைரமுத்துவையே அவர் வியக்க வைத்தார். நான் பணியாற்றிய ராபர்ட் - ராஜசேகரன் இயக்குநர்கள்தான் எஸ்.ஏ.ராஜ்குமார் சாரை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது முதலே அவர் எவ்வளவு அன்பானவர், இசை ஊற்று என்பதை அறிந்தவன் நான். அப்போது, அவர் சூப்பர் குட் பிலிம்ஸின் ஆஸ்தான
இசையமைப்பாளர் போல் அக்கம்பெனியின் 3 படங்களுக்கு இசையமைத்துக்கொண்டி ருந்தார். நானோ, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்கு ஒரு புது இசையமைப்பாளரைத் தேர்வு செய்து விட்டேன். கம்போஸிங் தொடங்க இருந்த சமயம். ஆர்.பி.சௌத்ரி சாரின் கம்போஸிங் கெஸ்ட் அவுஸுக்கு அவரைச் சந்திக்க வந்த எஸ்.ஏ.ராஜ்குமார் தற்செயலாக என்னைப் பார்த்துவிட்டார். ‘ஹேய்.. எழில்..! என்னப்பா இந்தப் பக்கம்?’ என்றார். ‘சார்..

சூப்பர்குட்லதான் படம் பண்றேன். விஜய் ஹீரோ’ என்றேன். ‘என்ன கதை? எனக்குச் சொல்லு’ என்றார். சொன்னேன். அவ்வளவு தான்..! சௌத்ரி சாரிடம் உடனே போய் ‘இதுவரை நான் தேடிப் போய் வாய்ப்புக் கேட்டதில்லை; இந்தப் படம் 250 நாள் ஓடும்.. இந்தப் படத்தின் வாய்ப்பை எனக்கு நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும்’ என்று உரிமையுடன் கேட்டு வாங்கி விட்டார். கேசட் சந்தையில் செய்த விற்பனைச் சாதனையை அப்போது எந்தப் படமும் முறியடிக்கவில்லை.

பட வேலைகள் எல்லாம் முடிந்து, முதல் காட்சியைப் பார்த்து முடித்த விஜய் எழுந்துவந்து என்னைக் கட்டிப்
பிடித்துக்கொண்டார். கடந்த 2023இல் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் வெளியான வெள்ளி விழா ஆண்டு. அப்போது விஜயைச் சந்தித்தேன். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நான் இப்போது நகைச்சுவை களங்களில் படமெடுத்து வருவதைப் பற்றிச் சிலாகித்து என்னுடன் உரையாடினார். நகைச்சுவையின் அலாதி யான காதலர் விஜய். ஆனால், செயல் என்று வந்து விட்டால் அவர் ஒரு சீரியஸ் கலைஞன்.

(ப்ரியம் பெருகும்)

- எஸ்.எழில்

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT