ஆனந்த ஜோதி

ஸ்ரீ சிவன் சார் யோக சபை மகா கும்பாபிஷேகம்

கே.சுந்தரராமன்

ஆத்மஞானி ஸ்ரீ சிவன் சார், காஞ்சி மகாஸ்வாமியின் பூர்வாஸ்ரம சகோதரர். அவருக்கு சென்னை நங்கநல் லூரில் ஸ்ரீ சிவன் சார் யோக சபை என்ற பெயரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற கர்ஜுராபுரி திருத்தலத்தில் (ஈச்சங்குடி கிராமம்) ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கும் மகாலட்சுமி அம்மையாருக்கும் நான்காவது மகனாக குரோதி ஆண்டில் புரட்டாசி மாதம் புஷ்ய நட்சத்திரத்தில் (1904-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3-ம் நாள்) ஸ்ரீ சிவன் சார் அவதரித்தார்.

பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள், குடும்பத்தினரால் சாச்சு என்று அழைக்கப்பட்டார். அவரது பக்தர்கள் சிவன் சார் என்றே அழைத்தனர். (SAR – Sivan Always Remain) சிவன் சாரின் அவதாரம் குறித்து, ‘சுடர்ஜோதி ஸ்வயம் பிரகாசமான ஆனபிரான் அருட் போராள் இவண் அகிலம் வந்தோன்’ என்று ஒரு பழந்தமிழ் ஓலைச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எங்கும் பிரகாசமாக இருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் ஓர்ஒளிரும் ஜோதியாக அவர் இவ்வுலகில் அவதரித்தார் என்று அவரது அவதார நோக்கம் விளக்கப் பட்டுள்ளது). காஞ்சி மகாஸ்வாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிவன் சார் உலக சரித்திரங்கள், சம்பவங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ என்ற தத்துவ நூலை இயற்றினார். சிவன் சார் தனது சத்சங்க நிகழ்ச்சிகளில் ‘எது எப்படி’ என்பதை விட ‘அது அப்படி அல்ல’ என்பதை நாம் முக்கியமாக உணர வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவார்.

கந்தன்சாவடி (ஓஎம்ஆர்) ஜெயேந்திரா காலனியில் 16 ஆண்டுகளுக்கும் மேல் ஸ்ரீ சிவன் சார் பூஜைகளை நிர்வகித்து வந்த சிவ சாகரம் டிரஸ்ட் (SST) நங்கநல்லூர் 10-வது தெருவில் (ஆஞ்சநேயர் கோயில் அருகே) ஸ்ரீ சிவன் சார் யோக சபை என்ற கோயில் பணியில் ஈடுபட்டனர். உலகிலேயே முதன்முதலாக ஸ்ரீ சிவன் சாரின் மூல விக்கிரகம், பாணக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

தெய்வத்திரு குவளைக்கால் சுவாமிகள், தண்டபாணி ஸ்தபதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இப்பணி நிறைவடைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2-ம் தேதி காலை 9.20 முதல் 10 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.இந்த வைபவத்தை ஒட்டி தற்போது இவ்விடத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேர்மை, எளிமை ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு இக்கோயில் தெய்வீக உறைவிடமாகத் திகழும். கூடுதல் விவரங்களுக்கு 9630015230 (சிவராமன்), 9791181323 (ஸ்ரீதர்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT