தமிழ் சினிமாவில் 25 ஆண்டு களை நிறைவு செய்துள்ள பாலா இயக்கத்தில், 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருண் விஜய் நடிப்பில் பொங்கல் திருநாள் ரிலீஸ் ஆக வெளியாகிறது ‘வணங்கான்’ திரைப்படம். அந்த மகிழ்ச்சியில் இருந்த அருண் விஜய், இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
சூர்யாவை மனதில் வைத்து பாலா எழுதிய கதையில் நீங்கள் பொருந்திய பின்னணி பற்றிக் கூறுங்கள்.. கடந்த பொங்கலுக்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நான் நடித்த ‘மிஷன்: சேப்டர் 1’ படம் வெளியானது. இந்தப் பொங்கலுக்கு ‘வணங்கான்’. ‘மிஷன்: சேப்டர் 1’ இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தபோதுதான், ‘வணங்கான்’ படத்தில் பாலா சாரும் சகோதரர் சூர்யாவும் அந்தப் படத்தில் இணைந்து பணி செய்வதில்லை என்று சுமுகமாக, ஒருமனதாக விலகிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதுபற்றி நான் இயக்குநர் விஜயிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ‘சூர்யா விலகிய நிலையில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். பாலா சாரிடம் எனக்காகப் பேசமுடியுமா?’ என்றேன். விஜய் சாரும் உடனே பாலா சாரிடம் எனது விருப்பத்தைச் சொல்ல; அவர் ஒரு நாள் டைம் எடுத்துக்கொண்டு என்னை அழைத்துக் கதை சொன்னார்.
‘நான் கடவுள்’ பட வேலைகள் தொடங்கியிருந்த நேரத்தில் பாலா சாரைச் சந்தித்து ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்றேன். அவரும் ‘நிச்சயமாக இணைந்து வேலை செய்வோம், ஆனால், இப்போது ஆர்யாவை ‘பிக்ஸ்’ செய்துவிட்டேன் அருண்’ என்றார். இப்போது ‘வணங்கான்’ கதை எங்களை இணைத்துவிட்டது.
உங்கள் கதாபாத்திரம் பற்றிக் கூறுங்கள்? ஹீரோக்களைத் தலை கீழாகப் புரட்டிப் போடுவதுபோல் இயக்குநர் பாலா உங்களையும் மாற்றினாரா? - கோட்டி என்கிற குமரி மாவட்ட இளைஞனாக வருகிறேன். எனக்கு ஒரு பாசமான தங்கை. எனக்கொரு காதல் எல்லாமே உண்டு. ஒரு சாமானிய இளைஞன்தான், ஆனால், அவன் எப்படிப் பல டைமன்ஷன்களுக்கு மாறுகிறான், சாமானியன் அப்படி மாற வேண்டிய நிலையை உருவாக்கிய சம்பவங்கள் என்ன என்பதுதான் எனது கேரக்டர். இந்தக் கேரக்டருக்காக ‘நீங்கள் ஜிம்முக்குச் செல்வதை ஒரு வருடத்துக்கு விட்டுவிடுங்கள்.
எனக்கு ஸ்டிஃப்பான உடல்மொழி வேண்டாம்’ என்று பாலா சார் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டதால், எனக்கு வயிற்றின் பக்கவாட்டுப் பகுதிகளில் வயிறு துருத்திக்கொண்டு வெயிட் போட்டுவிட்டது. அந்த உடலமைப்பு எதற்குத் தேவைப்பட்டது என்பதை இப்போது அந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் பார்க்கும்போதுதான் தெரி கிறது. எல்லாரையும்போல் என்னைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் என்பது உண்மைதான்.
‘வணங்கா’னுக்கு முன்பு வரை, ஒரு கதாபாத்திரத்துக்கான நடிப்பை நான் கொடுத்தது முற்றிலும் இயக்குநர்களின் தேவையைப் பொருத்து இருந்தது. ஆனால், பாலா சார் ஸ்பாட்டில் என்னை, எனது உடல்மொழியைப் படிப்படியாக உருமாற்றிக்கொண்டே வந்தார். படப் பிடிப்புக்கு முன், சில நிராதரவான மனிதர்கள் வாழும் இல்லங்களுக்குப் போய் அவர்களுடன் சில நாள்கள் தங்கி அவர்களைக் கவனித்துவிட்டு வரும்படி சொன்னார்.
எதற்காக அந்த ஹோம் ஒர்க் கொடுத்தார் என்பதைப் படப்பிடிப்பில் புரிந்துகொண்டேன். ஷூட்டிங்கில் என் ரசிகர்கள் யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ‘ரெட்டத் தல’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன்.
அந்தப் படத்தின் இயக்குநர் திருக்குமரனிடம் ‘கோட்டி’யின் உடல்மொழியோ, முகபாவங்களோ என்னை அறியாமல் வந்தால் அதை எனக்குச் சொல்லிவிடுங்கள்’ என்று வேண்டுகோளாகவே வைத்தேன். படப்பிடிப்பு முடிந்து இரண்டரை மாதங்கள் வரை கோட்டியின் பாதிப்பு என்னிடம் இருந்தது. அந்த அளவுக்குக் கதாபாத்திரத்துக்குள் எப்படி நுழைந்து கொள்வது என்பதை பாலா சார் எனக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார்.
உங்களுக்குச் சவாலாக அமைந்த காட்சி, அல்லது காட்சிகள்? - படத்தின் கிளைமாக்ஸைச் சொல் வேன். அதில் நான் வெளிப்படுத்த வேண்டிய ‘எமோஷ’னை பாலா சார் எதிர் பார்த்தபடி ‘டெலி வர்’ செய்ய கொஞ்சம் கஷ்டப் பட்டேன். எனக்கும் தங்கைக்குமான காட்சிகள், ஆக்ஷன் காட்சி கள் என படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அந்தச் சவால் தன்மை இருந்தது எனக்கான ஒரு பெரும் வாய்ப்பு. அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டேன்.
மலையாளத்திலிருந்து ரிது என்கிற பெண் எனக்குத் தங்கை யாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் எதிலும் ‘டூப்’போ, ‘பாடி டபு’ளோ கிடையாது. சண்டை இயக்குநர் சில்வாவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருந்ததால், எனது ‘கேபபிலிட்டி’ தெரியும். அதனால், பாலா சார் எதிர்பார்த்த அத்தனையையும் என்னை வைத்து அவர் சாதித்துக்கொண்டார். அதில், அடி, காயம், பூமித்தாய்க்கு ரத்ததானம் என்பதையெல்லாம் வரலாறு என்று பெருமிதமாகக் கூற மாட்டேன். அவை கதாபாத்திரத்தின் கோபத்துக்கான உண்மைத் தன் மைக்கு விட்னெஸ்போல் ஆகிவிட்டன.
பாலா தவிர சமுத்திரக்கனி, மிஷ்கின் என்று இரண்டு இயக்கு நர்கள் படத்தில் முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்திருக்கி றார்களே.. அவர்களை எப்படி பாலா வேலை வாங்கினார்?
எனக்கு ரொம்பவே ‘சர்பிரைசிங்’ ஆக இருந்தது. பாலா சாரருக்குக் கடுமையான குளிர் காய்ச்சல். பல போர்வைகளைப் போட்டுப் போர்த்திக்கொண்டு மிஷ்கின் சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கும் காட்சியை டைரக்ட் செய்துகொண்டி ருந்தார். அவருக்கு காய்ச்சல் கொதித்து மயங்கிவிடுவார் என்கிற நிலை இருந்தபோது, மிஷ்கின் சார் ‘இன்னைக்கு மீதம் இருக்கும் நாலு ஷாட்டையும் நான் பார்த்துக்கிறேன் அண்ணே நீங்க போய் ஓய்வெடுங்க..’ என்று பாலாவை அனுப்பினார்.
ஆனால், மிஷ்கின் தனது ஷாட்களை இயக்குவதை வாஞ்சையுடன் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இன்னொரு நாள் சமுத்திரக்கனி சாரை ஒரு பெரிய ‘கிரவுட்’ காட்சியை இயக்கச் சொன் னார். ஏ.எல்.விஜய் சாரும் ஒரு நாள் இயக்கினார். இந்தப் பிணைப்பு என்னால் நம்ப முடியாததாக இருந்தது.