1,000 ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரிய கோயில்!

By இ.மணிகண்டன்

சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. தண் + செய் என்பதே தஞ்சையாயிற்று. குளிர்ந்த நிலப்பரப்பு என்பதே இதன் பொருள். இவ்வூரில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் நாவுக்கரசர் காலத்தில் தளிக்குளத்தார் கோயில் என்ற சிவாலயம் இருந்து சோழர் காலத்துக்குப் பிறகு அழிந்துள்ளது. ஏறத்தாழ கி.பி.850-ல் விஜயாலயா சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று, தஞ்சையைக் கைப்பற்றி சோழ நாட்டின் தலைநகரமாக்கினான்.

கி.பி. 985-ல் மதுராந்தக உத்தமசோழன் மறைந்த பிறகு, சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூட்டினான். முடிசூட்டு விழாவின்போது, ராஜராஜன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொண்டான். காஞ்சி மாநகரில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாசநாதன் கோயிலின் அழகில் ராஜராஜன் மயங்கினான். அதன் விளைவாக, தஞ்சையில் ராஜராஜீச்சம் எனும் பெருங்கோயிலைக் கட்டினான். பெரியகோயிலை உருவாக்கிய கட்டடக் கலைஞரின் பெயர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.

ராஜராஜசோழனால் 1010-ல் கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தஞ்சை பெரியகோயில் வழிபாட்டு ஸ்தலமாக இருப்பதோடு மட்டுமின்றி, தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியற்றை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. கடந்த 2010-ல் தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரம் பேர் பங்கேற்று பரதநாட்டியம் ஆடியதும், மத்திய அரசு தஞ்சை பெரியகோயில் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிட்டதும் சிறப்பாக அமைந்தது. 2020 பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பூஜை, வழிபாடு போன்ற அனைத்தும் அரண்மனை தேவஸ்தானத்தால் செய்யப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் தற்போது தனது 1014-ம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

பெருவுடையார்.

தஞ்சை பெரியகோயிலில் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரியதாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்டு விளங்கும் ஆவுடையார், 13 அடி உயரமும் இருபத்தி மூன்றரை அடி சுற்றளவும் உள்ள ரிங்கம் என தனித்தனி கருங்கல்லினால் வடிக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இச்சிவலிங்கத்தைச் சுற்றிவர இடமும் உள்ளது. பொதுவாக நமது பார்வையில் படுவது சிவலிங்கத்தின் 3-ல் ஒரு பகுதி மட்டுமே. இக்கோயிலில் தினமும் காலை சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவலிங்கம் என்பது 9 பாகங்களைக் கொண்டதாகும்.

ஆவுடையாருக்குள் மறைந்திருக்கும் அடிப்பாகம் 4 முகப்பட்டைகளுடைய பிரம்ம பாகமாகவும், அதற்கடுத்து 8 முகப்பட்டைகளைக்கொண்ட பகுதி விஷ்ணு பாகமாவும் உள்ளது. ஆவுடையாருக்கு மேலுள்ள வட்டத்தூண் பாகம், ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம் என ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக எட்டாவதாக சக்தி பாகம் என்ற உச்சி முகடு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் பிரம்மாந்திரக் கல்லும் கீழ் விமானத்தின் உட்கூடாக அமைந்துள்ள பிரபஞ்சமான வெற்றிடம்தான் 9-வது பாகமான சிவம் எனப்படுகிறது. கருவறை அருகேயுள்ள மாடத்தில் செப்புத் திருவுருவில் போக சக்தி அம்மன் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. சோழர்கால உலோக வார்ப்புக் கலைக்கு சிறந்த உதாரணமாக இச்செப்புத் திருமேனி விளங்குகிறது.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திகேஸ்வரர் ஒரே கல்லில் செய்யப்பட்டு, இந்தியாவில் திகழ்கின்ற மிகப்பெரிய நந்திகளில் ஒன்றாகும். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடையுடன், 19.5 அடி நீளம், எட்டே முக்கால் அடி அகலம், 12 அடி உயரத்துடன் அமைந்துள்ளது. விஜய நகர கலைப்பாணியில் அழகும் கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்நந்தி, தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்