குழந்தைகள் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலோர் ‘எனக்கு மன அழுத்தம் உள்ளது’ எனச் சொல்வதை அவ்வப்போது கேட்க முடிகிறது. மன அழுத்தப் பிரச்சினையால் ஒருவர் பாதிக்கப் பட்டிருக்கிறாரா இல்லையா என்பதை மருத்துவர் உறுதிப்படுத்துவதற்கு முன்பே‘மன அழுத்தம்’தான் எனப் பலரும் முன்தீர்மானித்து விடுகிறார்கள். பிரச்சினையின் போது மட்டுமல்லாமல் ‘மன அழுத்தம்’ என்பது விளையாட்டாகவும் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தக்கூடிய வார்த்தையாக மாறிவிட்டது.
பெண்களின் மனநலம்: பெண்கள் எதிர்கொள்ளும் மனநலன் சார்ந்த சவால்கள் அதிகம் கவனம் பெறுவதில்லை. குழந்தைப் பருவம் முதல் பள்ளி, கல்லூரி படிக்கும்போது, வேலைக்குச் செல்லும்போது, முதுமையில் எனப் பெண்கள் தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் யாரையாவது சார்ந்திருக்கும்படி இச்சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் பெரும்பாலான பெண்கள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி இருக்கின்றனர். முதுமைக் காலத்தில் ஆதரவற்ற நிலையை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலை மாற கல்விதான் ஒரே ஆயுதம். கல்வி கற்று வேலைக்குச் சென்று பொருளாதாரச் சுதந்திரத்தை அடையப் பெண்கள் இன்றைக்கும் போராடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் பெண்கள் கல்வி கற்கவும், மேற்படிப்பு படிக்கவும், விளையாட்டில் சிறந்து விளங்கவும் ‘அனுமதி’ மறுக்கப்படுவது தடைக்கற்களாக இருக்கின்றன.
கல்வி கற்கும் இடங்களில், பணியிடங்களில் ஆண்களின் மனநலம் பாதிக்கும்படியான நிகழ்வுகளை அவர்கள் சந்திக்க நேர்வது உண்மைதான். ஆனால், பெண்களோ கல்வி கற்க வருவதும், வேலைக்குச் செல்வதுமே சவாலாக இருக்கிறது. இதுவே அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குடும்ப, சமூகப் பிரச்சினைகள் போன்ற தடைகளைத் தாண்டி கல்வி கற்கவும், பணியாற்றவும் பெண்கள் செல்லும்போது வேறு சில பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இளம் பருவத்தினர் காதல் வயப்பட்டால் ஒரு ஆணாக இருந்தால் அவருக்கு ஒரு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்படும்.
பெண்ணாக இருக்கும்பட்சத்தில் அவரது கல்வி தடைப்படும் அளவு எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டும். எப்போதுமே கட்டுக்குள் வைத்திருப்பது போன்றதொரு மனநிலைக்கு ஒருவரைத் தள்ளுவதால் மன அழுத்தம் உண்டாகிறது. ஆண்-பெண் இருவரும் சந்திக்கும் மனநல பிரச்சினைகளில் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே.
இதைத் தவிர பாலியல் துன்புறுத்தல்கள், பணியிட அதிகாரத்தில் சமத்துவமின்மை, சமூகத்தில் பெண்களின் நிலை, பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பொறுப்புகள் ஆகியவை பெண்களின் மனநலத்தில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. பாலின ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக விதிமுறைகள் பெண்களின் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டையும், தங்களைப் பார்த்துக்கொள்ளும் திறனையும், சமாளிக்கும் திறனையும் மேலும் சிக்கலாக்கு கின்றன.
பாலினச் சமத்துவமின்மை: இவ்வகையான வாழ்க்கைச் சூழலில், பெண்கள் ஆண்களைவிட அதிக அளவிலான மனச்சோர்வை அனுபவிப்பதும் வாழ்நாள் முழுவதும் அதிக பாதிப்பு விளைவிக்கக்கூடிய அளவுக்கு மனச்சோர்வு அடைகின்றனர் என்பதும் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. பாலினச் சமத்துவமின்மை உள்ள சமூகத்தில் ஓர் ஆணுக்கு வரக்கூடிய மனக் கவலையும் பெண்ணுக்கு வரக்கூடிய மனக் கவலையும் ஒரே மாதிரியானவை அல்ல என்கிற புரிதல் வேண்டும். இந்தப் புரிதல் கல்வி கற்பிக்கும் இடங்களிலும், பணியிடங்களில் நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர்களிடமும் இருப்பது அவசியம்.
பெண்களின் தனித்துவமான பிரச்சினைகளில் (மாதவிடாய் தொடர்பாக) கவனம் செலுத்தினாலும், இந்தக் குறுகிய கண்ணோட்டம் பெண்களின் ஒட்டுமொத்த மனநல பிரச்சினைகளை சரிசெய்வதற்கான வழிமுறையாகப் போதுமான அளவில் இல்லை. பெண்களுக்கான மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உளவியல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பெண்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.
சமூக, கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல் காரணிகள், சமூக ஆதரவு, பாலினச் சமத்துவமின்மை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொண்டு, தடைகளை அகற்றி ஒவ்வொரு பெண்ணும் உள நலத்தோடும், உடல் நலத்தோடும், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செழித்து வளர்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டியது சமூகக் கடமை. இரு பாலினருக்கும் பொதுவான மனநலப் பிரச்சினைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கலையும் கையாளும் வழிமுறைகளையும் பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com