விஞ்ஞானிகள் - 16
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய்களை வரவிடாமல் தடுப்பதே சிறந்தது. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றான பெரியம்மையை ஒழித்தவர் எட்வர்டு ஜென்னர்.
1749, மே 17 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் ஜென்னர். 14 வயதில் டேனியல் லுட்லோ என்கிற அறுவை சிகிச்சை நிபுணரிடம் பயிற்சிக்காகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அறுவை சிகிச்சை நிபுணராவதற்குத் தேவையான அனுபவத்தைப் பெற்றார். 1770இல் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்ந்தார். 1792இல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
ஜென்னர் சிறு வயதிலிருந்தே எதையும் கூர்ந்து கவனிப்பார். ’கௌபாக்ஸ்’ என்பது மாடுகளின் மடிகளில் ஏற்படக்கூடிய கொப்புளம். பால் கறக்கும் பெண்களுக்கு அந்த நோய் பரவும். ஆனால், அவ்வளவாகத் தொந்தரவு செய்யாது. கௌபாக்ஸ் வந்தால் பெரியம்மை நோய் வராது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. எனவே பெரியம்மை வராமலிருக்க கௌபாக்ஸை வலிந்து ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்தக் கருத்தை மருத்துவர்கள் பாமரத்தனம் என ஏற்க மறுத்தனர். ஆனால், சிறு வயதிலிருந்து இந்த நம்பிக்கையை அறிந்த ஜென்னர், அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். கிராம மக்களின் நம்பிக்கை உண்மை என்று கண்டறிந்தார்.
ஆனால், அதை நிரூபித்தாக வேண்டும். 1796, மே 16 இல் ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்கிற 8 வயது சிறுவன் மீது சோதனை செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணின் கௌபாக்ஸ் கொப்புளத்திலிருந்து எடுத்த நீர்மத்தை ஜேம்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போல் அந்தச் சிறுவனுக்கு கௌபாக்ஸ் வந்தது. ஒரு வாரத்தில் குணமானார். சில வாரங்கள் கழித்து அதே சிறுவனின் உடலில் பெரியம்மை நீர்மத்தை ஊசி மூலம் செலுத்தினார்.
உயிரோடு விளையாடுவதாக மற்ற மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அந்தச் சிறுவனுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை. உலகத்துக்குப் பெரியம்மைக்கான தடுப்பூசி கிடைத்தது. பரவலாக இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை. எதிர்ப்புகள் கிளம்பின.
பசுக்களிடமிருந்து வந்த கிருமிகள் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர். விலங்கு பொருள்களால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றனர். மத அடிப்படையில் பெரியம்மைக்கான தடுப்பூசியை எதிர்த்தனர். ஆனால், இதுதான் பாதுகாப்பான முறை என்று அரசு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அங்கீகரித்தது.
ராணுவத்திலும் கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதன் பிறகுதான் அம்மை குத்தும் முறை விரைவாகப் பரவியது. தனது கண்டுபிடிப்புக்கு ஜென்னர் காப்புரிமை பெறவில்லை. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார். ஒவ்வொரு நாளும் அவர் வீட்டின் முன் 300 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தச் சேவையைப் பாராட்டி அரசு ஜென்னருக்கு 1802இல் பத்தாயிரம் பவுண்டு பரிசு கொடுத்தது. நான்காண்டுகள் இடைவெளியில் மீண்டும் இருபதாயிரம் பவுண்டு சன்மானம் அளித்தது. இதை வைத்து 1808இல் தேசியத் தடுப்பூசிக் கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர்.
தன் ஆராய்ச்சிகளை ’அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும்’ என்கிற நூலாக வெளியிட்டார். லத்தீன் மொழியில் பசுவுக்கு ’வக்கா’ என்று பெயர். வக்காவிலிருந்து தடுப்பூசி வந்ததால் ’வக்காசீன்.’ அதுவே பின்னர் ’வாக்சீன்’ ஆக மாறியது.
அம்மையை ஒழித்தவர் என உலகம் பாராட்டியது. பிரான்ஸ் உள்பட அடுத்தடுத்த நாடுகளில் இம்முறை பரவியது. இந்தக் கண்டுபிடிப்பால் மாவீரன் நெப்போலியன் ஜென்னர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். இதை வைத்து ஜென்னர் தன் நாட்டுக் கைதிகள் சிலரை நெப்போலியனிடமிருந்து விடுவித்தார்.
1823, ஜனவரி 26 அன்று 73 வயதில் ஜென்னர் காலமானார். 1980இல் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ஜென்னரின் கூர்ந்து கவனிக்கும் பண்பு, எடுத்துக் கொண்ட செயலுக்காகச் செய்யும் முயற்சி, சமகால மருத்துவர்கள் எச்சரித்தும் தளராத நம்பிக்கை போன்றவற்றால் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டது. இன்று ’நோய் எதிர்ப்பு அறிவியலின் தந்தை’ என்று எட்வர்டு ஜென்னர் நினைவுகூரப்படுகிறார்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago