மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததுபோல், சிவகங்கை அருகே வேம்பத்தூரிலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் நிறைந்திருந்த ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் ஆவுடைநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பெருவழிப்பாதையில் அமைந்துள்ள வேம்பற்றூர் (வேம்பத்தூர்), அரசாண்ட மன்னர்களின் ஆட்சிக்கேற்றவாறு ஊரின் பெயரும் மாற்றம் பெற்றுள்ளது. அவ்வாறு கி.பி.1050-ல் உத்தமசோழ சதுர்வேதிமங்கலம், கிபி.1118-1135-ல் விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம், கிபி.1300-ல் குலசேகர சதுர்வேதிமங்கலம் என்றழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களில் ஒருவர், குழந்தைப்பேறு வேண்டி இங்கு வந்து புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தி சிவபெருமானை வழிபட்டார். அதன்படி, குழந்தைப்பேறு கிடைத்த மன்னன், இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் கற்றளியில் கோயில் எழுப்பி, கோயிலின் எதிரே குளத்தையும் ஏற்படுத்தினார்.
இங்கு கிழக்கு நோக்கி சிவபெருமான் வீற்றிருக்கிறார். பிரதான வாசல், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முகமண்டபத்தில் பலிபீடம், நந்திதேவர் பீடம், வடபுறம் ஆவுடைநாயகி அம்மன் சந்நிதி, காலபைரவர் சந்நிதி அமைந்துள்ளன. அம்பாள் வலக்கரத்தில் நீலோத்பவ மலர் ஏந்தியும், இடக்கையைத் தொங்க விட்டபடியும் கருணாம்பிகையாக திகழ்கிறாள். அம்பாள் சந்நிதி எதிரே தெற்குச் சுவற்றிலும் ஒருவாசல் உள்ளது. மகாமண்டப வாசலில் துவார பாலகர்கள், மகாமண்டப வடபுறம் தில்லைக்கூத்தர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சந்நிதி, தென்புறம் ஒரு வாசலும் உள்ளன.
அர்த்தமண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் மூலவராக கைலாசநாதர் லிங்க ரூபமாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்ட பலர் குழந்தைப்பேறு கிடைக்கப் பெற்றுள்ளனர். இவ்வாறு குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்ற பக்தர் ஒருவர் 1938-ம் ஆண்டு கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
தேவகோட்டத்தில் நர்த்தன தளபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை சந்நிதி, கன்னிமூலை கணபதி, வீரை கவிராஜ பண்டிதர், சுப்பிரமணியர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார தெய்வ சந்நிதிகள் உள்ளன. இங்கு நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டால் அபார அறிவுத்திறன் படைப்பாற்றல் பெருகும்.
இங்கு தினமும் நான்குகால பூஜைகளும் நடைபெறும். சித்திரை பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வீரை கவிராஜ பண்டிதருக்கு பவுர்ணமிதோறும் அபிஷேகம், வைகாசி விசாகம், மார்கழி திருப்பள்ளி எழுச்சி என அனைத்து விசேஷ நாட்களிலும் பூஜைகள் நடைபெறும். ஞாயிறுதோறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம், நன்னெறி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பித்ருதோஷம், கிரகதோஷம் நீங்க கோசாலையில் பரிகார பூஜையும் நடத்தப்படுகிறது. தல விருட்சமாக கூந்தப்பனையும் உள்ளது.
புலவர்கள் நிறைந்த ஊர்: வேம்பத்தூரைச் சேர்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் திருஆலவாயுடையார் திருவிளையாடல் புராணம் என்ற நூலை இயற்றினார். இதனால், வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம் என அழைக்கப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள் முசுண்டை, கண்ணன், குமரனார் போன்றோர் சங்கப் பாடல்களான அகநானூறு, புறநானூறுகளில் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
கிருஷ்ண பாகவதத்தை செவ்வை சூடுவார் என்பவரும், பகவத்கீதையை பட்டர் என்பவரும், ஆதிசங்கரர் எழுதியருளிய சவுந்தர்ய லஹரியை வீரசோழன் கவிராஜ பண்டிதரும் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.
சேதுபதி மன்னர்களின் சமஸ்தானத்தில் அரசவைப் புலவராக முத்துவேங்கடசுப்பு இருந்துள்ளார். இவரைப் போன்று இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள், பதினெண்கீழ்க்கணக்கு, மதுரைக்கோவை, பள்ளு, கலம்பகம், அந்தாதி, உலா, குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் ஆகிய இலக்கிய நூல்களை இயற்றி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர். சங்கப் புலவர்களுக்கும், இவ்வூருக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொணரும் வகையில், கம்பன் வயல், பரணர் வாய்க்கால், ஒளவைத்திடல், காளமேகம்வலம் என்ற பெயரில் நிலங்கள், நீர்நிலைகள் அழைக்கப்படுகின்றன.
மேலும், இவ்வூரைச் சேர்ந்த ஒருவர் விக்கிரமங்கலத்தில் ஒரு குளம் வெட்டியதற்கான சான்று உள்ளது. விக்கிரமங்கலம் மலையிலுள்ள கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டில் ‘வேம்பற்றூர் பேர் அயம் (குளம்)’ என்ற குறிப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago