இளமை புதுமை

அக்காவை அக்குவேறாக்கும் 2கே கிட்ஸ்! | ஈராயிரத்தில் ஒருவன்

ப. சூரியராஜ்

முதியவர் ஒருவர் எனக்கு முன்னே மெதுவாகச் சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலை திருப்பத்தில் அந்த முதியவர் திரும்புகையில், எதிர்த் திசையிலிருந்து பைக்கில் பறந்துவந்த ஈராயிரக் குழவி ஒருவன், சடாரென பிரேக் அடித்து, `புரோ, ஓரமா போங்க புரோ' என உச்சுக் கொட்டிவிட்டு மீண்டும் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். `நாம என்னடா பண்ணோம்' என ஒரு விநாடி எனக்குள் ஒரு குழப்பம். அந்த ஈராயிரக் குழவி `புரோ' என விளித்ததே தாத்தாவைப் பார்த்துதான் என விளங்கியதும் குழப்பம் விலகியது.

எத்தனை அக்காக்கள்? - இவர்களால் எப்படி ஒரு தாத்தாவை `புரோ' என அழைக்க முடிகிறது என வேறொரு குழப்பம் அடுத்த விநாடியே தொற்றிக்கொண்டது. தம்பி, அண்ணே, தாத்தா, மாமா, மச்சான், பங்காளி, பெரியப்பா, சித்தப்பா, சார், பாஸ் என வெவ்வேறு உறவு பெயர்கள், வெவ்வெறு வயதினரை, நெருக்கத்தின் அளவுகோலைக் கொண்டு அழைத்தது முந்தைய தலைமுறை. ஆறிலிருந்து அறுபது, எழுபது வரை எதிரில் நிற்கும் எல்லாரையும் `புரோ' எனும் ஒரே வார்த்தையைக் கொண்டு எப்படி இவர்களால் விளிக்க முடிகிறது எனத் தலைசுற்றிவிட்டது. சரி, ஆண்கள் என்றால் `புரோ', பெண்கள் என்றால்? அதுதான், அக்கா.

இப்போது இன்ஸ்டகிராமில் இவர்களது அக்காக்கள் தான் டிரெண்ட்! இன்ஸ்டகிராமில் தையல் குறிப்பு கொடுக்கும் பெண்ணை டெய்லர் அக்கா, உடற்பயிற்சி குறிப்புகள் எடுக்கும் பெண்ணை ஜிம் அக்கா, யூடியூபில் கணினி மென்பொருள் பற்றிய தகவல்களைக் கற்றுகொடுக்கிற பெண்ணை ‘கோடிங்’ அக்கா என்று விளிக்கிறார்கள்.

முகத்தில் விதவிதமான திலகங்கள் வரைந்து பக்திப் பாடல்களுக்கு முக அசைவுகளை செய்யும் பெண்ணுக்கு ஆன்மிக அக்கா / டிவோஷனல் அக்கா எனத் திருநாமம் சூட்டியிருக்கிறார்கள். இதேபோல் யோகா கற்றுத்தரும் பெண்ணுக்கு யோகா அக்கா என அவரவர் துறை சார்ந்து பெயர் சூட்டி மகிழ்கிறார்கள் இந்த 2கே கிட்ஸ்.

இப்படியெல்லாம் சிந்திக்கலாமா? - ‘றெக்க’ என்கிற படத்தில் வரும் மாலா அக்கா கதாபாத்திரத்தையும் `மாலா அக்கா ஐ லவ் யூ' என்கிற வசனத்தையும் இந்த இணைய சமூகம் உள்வாங்கிக் கொண்ட விதமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன் நீட்சியாகவே இந்த `அக்கா' எனும் வார்த்தையை 2கே கிட்ஸ் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

அண்மைக் காலமாக, இவர்கள் சில பெண்களுக்கு சூட்டியிருக்கும் பலூன் அக்கா, பீரோ அக்கா எனும் பெயர்கள் எல்லாம் அருவருப்பின் உச்சம். அவர்களைப் பின்தொடரும் இளைஞர்கள் பலர், கமெண்ட் டப்பியில் எழுதுகிற வாக்கியங்கள் அச்சில் ஏற்ற முடியாதவை.

‘அக்கா’ எனும் வார்த்தையுடன் எப்படி இவர்களால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது? அக்கா, மேடம் எனும் மதிப்புமிக்க வார்த்தைகளுக்குத் தவறான வேறோர் அர்த்தத்தை உருவாக்குகிறார்களே, இது எங்கு சென்று முடியப்போகிறதோ? இதில் சம்பந்தப்பட்ட பெண்களே இவற்றைக் கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் அதை வரவேற்பதைப் போலவே நடந்துகொள்வதும் இன்னும் கொடூரம்.

இவற்றைத் தட்டிக்கேட்கும் நிலையில் இருப்பவர்களோ இப்பெண்களை அழைத்துப் பேட்டி எடுக்கிறேன் எனும் பெயரில் யூடியூபில் இரட்டை அர்த்தங்களாகப் பேசி, `பார்டர் லைன் போர்னகிராஃபி'களை தம்ப் நெய்ல்களோடு வெளியிடுகிறார்கள். `அண்ணா - பாப்பா லவ்' டிரெண்டையும் `அக்கா' டிரெண்டையும் இணையத்தின் அடர் நகைச்சுவை என நினைத்து கடந்துபோகவே முடியாது. ஏனெனில், இது வக்கிரம்! சமூகத்திற்கே பெருங்கேடு மக்களே.

- iamsuriyaraj@gmail.com

SCROLL FOR NEXT