60 குடவரை கோயில்களை உருவாக்கிய பாண்டியர்கள்!

By என்.சன்னாசி

தமிழகத்தில் கிபி.7-ம் நூற்றாண்டில் இருந்துதான் கோயில் நமக்கு காணக் கிடைக்கின்றன. அதற்கு முன்பு கோயில்கள் இருந்தாலும், அவை எந்த மாதிரியான வடிவ அமைப்பில் இருந்தன என்பது தெரியவில்லை. 7-ம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த கோயில்கள் அனைத்தும் மரம், செங்கல், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களால் கட்டப்பட்டிருக்கும் என்பதால், அவை காலப்போக்கில் மறைந்துவிட்டன. தமிழரின் பண்பாட்டில் இறந்தவர்களையே இறைவனாக வழிபடும் வழக்கமும் இருந்ததால், அவர்களுக்கென நடுகல் வைத்து வழிபட்டனர்.

தமிழகத்தின் வடபகுதியை கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆண்ட பல்லவர்கள் சாளுக்கியரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பால், அவர்கள் நாட்டில் இருந்த குடவரைக் கோயில்களை பார்த்து அதுபோன்று இங்கும் குடவரைக் கோயில்களை அமைத்திருக்கலாம் எனத் தெரிகிறது. இவர்களது சமகாலத்தவரான பாண்டியர்கள் மலையைக் குடைந்து சுமார் 60 குடவரைக் கோயில்களை கட்டியுள்ளனர்.

மதுரை அருகிலுள்ள யானைமலையில் வைணவக் கடவுளான நரசிங்கப் பெருமாளுக்கும், திருப்பரங்குன்றத்தில் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் குடவரைக் கோயில்களை குடைவித்தனர். இன்று வரை பல புதிய கட்டுமானம் மற்றும் பெரிய வளாகத்துடன் கூடிய கோயிலாக மாறி இருக்கின்றன. இருப்பினும், குடவரைக் கோயில்கள் எவ்வித மாற்றமோ, சிதைவோ இன்றிக் காணப்படுகின்றன. இதுபோன்று சுந்தரேசுவரருக்கு கி.பி. 7-ம் நூற்றாண்டில் கோயில் இருந்துள்ளது என, இலக்கியச் சான்றுகளால் அறிய முடிகிறது.

தமிழகத்தில் சங்க இலக்கியங்களில் சிவபெருமான் ‘ஆலமர் செல்வன்’ எனச் சுட்டப்படுகிறார். அக்காலத்தில் நிலங்களை 5 ஆக பிரித்து, முறையே குறிஞ்சி நிலத்தில் - முருகன், முல்லையில் - மாயோன், மருதம் - இந்திரன், நெய்தல் - வருணன், பாலை - கொற்றவை என, அந்தந்த நிலத்துக்குரிய தெய்வங்கள் அந்தந்த நிலங்களில் வழிபடப்பட்டன. ஆனால், சிவபெருமான் நிலங்களுக்கு உரிய தெய்வமாக ஒதுக்கப்படாமல், அனைத்து நிலத்துக்குமான தெய்வமாக விளங்கியுள்ளார்.

சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர்கள் எனும் இனத்தவர், தமிழகத்தை ஆண்டனர். இதனால் இவர்களது காலத்தில் தமிழகத்தில் சமணமும், பெளத்தமும் சிறந்து விளங்கின. இக்காலத்தில் சைவம் சிறப்பான இடத்தை பெறவில்லை. கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு பிறகு சைவ, வைணவ சமயங்கள் வீறுகொண்டு எழுந்தன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி முறையே வைணவ, சைவ சமயங்களை வளர்த்தனர்.

மக்கள் மத்தியில் சமணமும், பெளத்தமும் ஏற்கெனவே செல்வாக்குப் பெற்றிருந்ததால், இவர்கள் ஊர் ஊராகச் சென்று தமது சமயத்தின் சிறப்பை எடுத்து விளக்கி பரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி’ என்பதற்கேற்ப முதலில் இவர்கள் சமண சமயத்தில் இருந்த அரசர்களை சைவ சமயத்துக்கு மாற்றினர்.

இதற்கு உதாரணம், பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கும், ஞானசம்பந்தரால் கூன்பாண்டியன் எனும் பாண்டிய மன்னன் சமணத்திலிருந்து சைவ சமயத்துக்கும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும், பல சமணக் குடவரைகள் கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளில் சைவ , வைணவக் குடவரைகளாக மாற்றப்பட்டு, பாரம்பரியம் காக்கப்பட்டுள்ளன என்பது போன்ற அரிய தகவல்கள், மதுரை பேராசிரியர் அம்பை மணிவண்ணன் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்