மனதில் நின்ற படைப்புகள்: சிறந்த 10 படங்கள் | தமிழ் சினிமா 2024

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டுப் புலம்பும் திரை ஆர்வலர்கள் இந்த ஆண்டு வாயை மூடிக்கொண்டார்கள்! ஏனென்றால், தமிழ் சினிமா இந்த ஆண்டில் அதிகமான, தரமான ஆக்கங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. குறிப்பாக, மனித உணர்வுகள் மிக நுணுக்கமாக மோதி, விலகி, இணையும் தருணங்களை எதிர்கொள்ளும் சாமானியக் கதை மாந்தர்களைப் பார்வையாளர்கள் அதிகமும் சந்தித்தனர்.

அவை புழங்கிய கதைக் களன்களும் அதற்குள் படைப்பாளிகள் கையாண்ட உள்ளடக்கமும் அவர்களின் மனதுக்கு நெருக்கமான, நிறைவான திரை அனுபவத்தைத் தந்தன. ரசிகர்கள் வெகுவாகக் கொண்டாடிய, கொண்டாடத் தவறிய 2024இன் சிறந்த 10 திரைப்படங்கள், வகைமை சார்ந்து சிறந்து விளங்கிய படங்களின் பட்டியல் ஆகியவற்றைப் பார்ப்போம்.

லப்பர் பந்து: கிரிக்கெட்டை ஒரு மதம்போல் கொண்டாடும் இந்தியாவில் அந்த விளையாட்டின் பின்னணியில் துலங்கும் கிராமிய வாழ்க்கையைக் கதைக் களமாக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் தமிழரன் பச்சைமுத்து. அதற்குள் தனிமனித தன்முனைப்பு (ஈகோ), சாதிக்கு எதிரான அரசியல் எனச் சிக்கல்கள் முட்டி மோதும் இடங்களில் பொங்கும் உறவுகளின் உணர்வுத் தோரணங்களில் பார்வையாளர்கள் உருகிப்போனார்கள்.

திரைக்கதை நெடுகிலும் சூழ்நிலை நகைச்சுவை தெறித்து விழுந்தது. முதன்மை மற்றும் துணைக் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் பெண் கதாபாத்திரங்களுக்குத் தந்திருந்த முக்கியத்துவமும் இயக்குநரை ஒரு தேர்ந்த திரைசொல்லியாக அடையாளம் காட்டின. கதைக்குள் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகள் படமாக்கப்பட்ட விதமும் அவை தந்த அழுத்தமும் அசலான சிக்ஸர்கள்!

ஜமா: தொடர்ந்து பெண் கதாபாத் திரம் ஏற்று நடிக் கும் ஒரு கூத்துக் கலைஞனின் தொழில் வாழ்க்கை, தனி வாழ்க்கை இரண்டி லும் அவன் எதிர்கொள்ளும் புற, அகச் சிக்கல்களை அசலான தன்மையுடன் படமாக்கியிருந்தார் இயக்குநர் பாரி இளவழகன். அசல் தன்மையைக் கொண்டுவருவதற்கான மெனக் கெடல், படத்தின் உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதிக்காட்சிவரை பதிவாகியிருந்தது.

இயக்குநரே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, தொழில்முறைக் கூத்தினை முறை யாகப் பயின்று ‘கல்யாணம்’ என்கிற கதாபாத்திரமாகக் கரைந்துபோயிருந் தார். படத்தில் வரும் கிராமிய வழிபாடும் அதில் ஊடாடும் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் சித்தரிப்பதில் காட்டியிருக்கும் அக்கறை, அக்கலையை ஏளனமாகவோ, தரக்குறைவாகவோ காண முடியாதபடி செய்துவிட்டது இம்முயற்சியின் படைப்புச் செயல்பாடு.

மகாராஜா: ஒரு திரைக்கதையின் நிகழ்வு களைக் கலைத்துப்போட்டுக் கதை சொல்லும் ‘நான் - லீனியர்’ திரைக்கதையாக்கமே இப்படத்தை மகத்தான திரை அனுபவமாக மாற்றியது. அகிரா குரோசாவாவின் ‘ரஷோமான்’, இனாரிட்டுவின் ‘அமோரெஸ் பெரோஸ்’ தொடங்கி தமிழில் எஸ்.பாலசந்தர், கமல்ஹாசன் எனப் பலர் இதில் முயன்றிருந்தாலும் ‘மகாராஜா’ படத்தில் நித்திலன் சுவாமிநாதனின் எழுத்து, அவர் எடுத்தாண்ட கதைக் கருவுக்கும் கதாபாத்திர வார்ப்புக்கும் மிகப் பொருத்தமாக அமைந்துபோனது.

தன் மகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளியைக் கண்டறிய முயலும் ஒரு சாமானியன், சாணக்கியத் தனமான முயற்சியால் எவ்வாறு வெற்றியடைகிறான் என்பதை, திரைக்கதையின் திடீர் விலகல்களை மீறிப் படபடப்புடன் பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். பார்வையாளர்கள் பலரும் மனம் பதைபதைத்தனர். கலவையான எதிர் விமர்சனங்களை ஆகிருதியுடன் எதிர்கொண்டு நின்ற படம்.

மெய்யழகன்: விட்டுத்தர மனமில்லாத ரத்த உறவுகளால், பிறந்து வளர்ந்த பூர்விக வீட்டை விட்டு, மாநகரத்துக்குக் குடிபெயர்ந்து போன அருள்மொழி, அந்த உறவுகளின் மீதான தார்மிகக் கோபத்தால் சிரிக்கவும் மறந்து போகிறான். உண்மையில் அவன் அந்த உறவுகளையும் நேசிப்பவன்தான். ஆனால், அவர்களை மன்னித்துக் கடந்து போய்விட வேண்டும் என்பதை, அருள்மொழியின் தூரத்து உறவினனான மெய்யழகன் அவனுக்குத் தனது நன்றியுணர்வின் வழியாக உணர்த்துகிறான்.

“அந்த நாலு பேர எனக்காக மன்னிச்சுருங்க அத்தான்” என அவன் அருள்மொழியிடம் கேட்கும் இடம், உறவுகளையும் நண்பர்களையும் விட்டு விலகி வாழ்வதல்ல இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கை என்பதைத் தத்துவார்த்தமாக உணர்த்திய ‘மெய்யழகன்’, ஒரு நவீன ‘கிளாசிக்’.

அமரன்: மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணம் உருவாக்கிய அதிர்வுகள் செய்திகளோடு முடிந்துபோய்விட வில்லை என்பதை உணர்த்தியது ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை ஆக்கம். முகுந்தின் தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கை, அவரது ராணுவ வாழ்க்கை ஆகிய இரண்டு அடுக்குகளில் அமைந்த அத்தியாயங்களுக்குள், ஷிவ் அரூர் - ராகுல் சிங் இணைந்து எழுதிய ‘India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்கிற நூலின் வீரம் செறிந்த நிகழ்வுகளைக் காட்சிகளாக உருமாற்றிப் பொருத்திய விதம் அபாரம்! ராணுவத் தாக்குதல்கள், பிரச்சினைக்குரிய நிலத்தின் பதற்றமான வாழ்க்கை ஆகியன காட்சியாக்கப்பட்ட விதம், முதன்மைத் துணை நடிகர்களின் உயிர்ப்புமிக்க நடிப்பு ஆகிய அம்சங்கள், தமிழுக்கு ஓர் அசலான ராணுவ சினிமாவைக் கொண்டுவந்து சேர்த்தன.

ரசவாதி: நிதானமாகவும் அகலமாகவும் விரியும் ‘ரசவாதி’ படத்தின் ‘நிலப்பரப்பு’ ஒரு கதாபாத்திரமாக அடையாளம் பெறும் கதைக் களம். குளிர் நிறைந்த நிலப்பகுதியில் மனச்சூட்டுடன் உலவும் முதன்மைக் கதாபாத்திரங்களின் உள்முரண்கள், சமகாலத்தின் சமூக, அரசியல், அதிகார மையத்தின் அவல யதார்த்தச் சித்திரங்களாக மாறி நிற்பதை மிகையின்றிச் சித்தரித்த படம்.

தமிழர்கள் எந்த அளவுக்குச் சொந்த நிலத்தில் வெட்டப்படும் ‘கறிக்கோழிகளாக’களாக இருக்கிறார்கள், தாங்கள் வாழும் நிலத்தையும் வளத் தையும் காக்க முன்வரும் எவர் மீதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பூசும் அவதூறு எத்தகையது, நாம் தொலைத்துவிட்ட சித்த மருத்துவம், வர்மம் என நமது பண்பாட்டின் சிதைவு என மிகக் கவலையுடன் ஆனால், மௌனமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். கதையும் களமும் எதைக் கோரியதோ அதையே காட்சிகளுக்கும் கதாபாத்திர எழுத்துக்கும் கொடுத்திருப்பது திரை அனுபவத்தை ஒரு ரசவாதமாக்குகிறது.

நந்தன்: ‘நம்ம நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் குடி யரசுத் தலைவராக வரலாம்; ஆனால் நம்ம ஊருக்கு நம்ம ஜாதிக்காரர் தான் பஞ்சாயத்துத் தலைவரா வரணும்’ என்கிற இப்படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் இரண்டு வரி வசனம், 2 மணிநேரப் படமாக விரிந்தது.

பட்டியலின மக்கள் அவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் அரசியல் அதிகாரம் பெறுவதற்கு ஆதிக்க சாதி யினர் எவ்வாறெல்லாம் முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள் என்கிற கசப்பான கள உண்மைகளைத் துணிந்து பட்டவர்த்தனப்படுத்தியது. ஒடுக்கப் பட்ட மக்களை ரப்பர் ஸ்டாம்புகளாக வைத்துக்கொண்டு, சாதி ரீதியாக அச்சுறுத்தி, கட்டற்ற வன்முறையைப் பிரயோகித்துப் பணிய வைப்பதன் மூலம் அவர்களை நசுக்குவதை ஆவணத்தன்மையுடன் எடுத்துக்காட்டியது.

வாழை: கடல்போல் விரிந்துகிடக்கும் வாழைத் தோட்டங்கள். விளைந்த தார்களை மிகக் குறைவானக் கூலிக்கு வலியுடன் சுமந்தபடி, நீண்ட தூரம் வரப்புகளில் நடந்து கரை நோக்கி வந்தும் வாழ்க்கையில் கரையேற முடியாத கூலித் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையை ரசனையான திரைமொழியில் பந்தி வைத்தது வாழை. அனைவருக்குமான பள்ளிப் பருவப் பால்யத்தை நினைவூட்டும் சிறுவன் சிவனைந்தன், வயதுக்கு மீறிய சுமையாகத் தார் சுமக்கும் அவனது ஏழ்மையும் தனது கொடும்பசிக்கு ஒற்றை வாழைப்பழத்தைப் பறித்து உண்ண உரிமையில்லாமல் அவன் அடிபடும் அவலமும் அதற்காக வெட்கித் தலைகுனியும்படியான குற்றவுணர்வில் பார்வையாளர்களை ஆழ்த்தியதும் இயக்குநரின் படைப்பாளுமைக்குக் கிடைத்த வெற்றி.

போட்: 1940களில், சென்னை நகரின் மீது ஜப்பான் குண்டுவீச ஆயத்தமாகும் நேரம். அதிலிருந்து உயிர்பிழைக்கக் கடலுக்குள் ஒரு படகு மூலம் தப்பிக்கும் மீனவன் மற்றும் அவனுடைய குடும்பத்தினர். அவர்களிடம் அபயம் பெற்று அப்படகில் ஏறிக்கொண்ட மக்கள் பலரும் முரண்களின் மூட்டை.

இம்மனிதர்களின் சுயநலம், முகமூடி ஆகியன எல்லாருடைய இருத்தலியல் போராட்டம் வழியே வெளிப்படுகிறது. இதற்கு மாறாக, எளிய மனிதர்களின் வெள்ளந்தியான வாழ்க்கையில் இருக்கும் எளிமையை, அக்கறையை, அன்பை, சமூக, அரசியல் விமர்சனமாகத் தரமான நகைச்சுவையுடன் முன்வைத்த இப்படம் தமிழில் ஓர் அசலான முயற்சி.

போகுமிடம் வெகு தூரமில்லை: தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை களுக்கு நடுவே, சக மனிதனின் பிரச்சினைக்குத் தம்மால் தீர்வளிக்க முடியும் என்றால் அதைச் செய்யத் துணிவதுதான் மனிதம்.

அது ஒரு சிறு துரும்பை நகர்த்தும் செயலாகக்கூட இருக்கலாம். அதை, அவல நகைச்சுவை, உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டம், காதலின் உன்னதம், கிராமியக் கலையின் அந்திமம் எனப் பல இழை களைத் தொட்டுச்செல்லும் தர்க்கப் பிழைகள் இல்லாத திரைக்கதையாக உருவாக்கி, நிலப்பரப்புகளின் வழியே கதை சொன்ன நேர்த்தியும் மானுட மீட்சிக்கான கலையாக சினிமாவை அணுகிய விதமும் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவுக்கு நல்வரவு கூற வைத்தன.

மனதில் நின்ற இந்த 10 படைப்புகள் தவிர, கருத்தாக்கம், உருவாக்கம், படைப்பாளுமை ஆகியவற்றின் அடிப்படையில் ரசிகர்களின் ஆதரவையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற படங்கள் என ‘புளு ஸ்டார்’, ‘தங்கலான்’, ‘ஜே பேபி’,, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘அஞ்சாமை’, ‘பராரி’, ’கன்னி’, ‘வெப்பம் குளிர் மழை’, ‘சாலா’, ‘தோனிமா’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ‘ஹாட் ஸ்பாட்’, ‘அதர்மக் கதைகள்’ ஆகியன கவனிக்க வைத்த ஆந்தாலஜி படங்கள்.

நிறைவான பொழுதுபோக்குப் படங்கள் என்கிற தகுதியில் ‘அயலான்’, ‘ஹிட்லர்’, ‘வேட்டையன்’ ஆகியவற்றைக் கூறலாம். திரைக்கதையால் சிறந்த படங்களின் பட்டியலில் ‘பயமறியா பிரம்மை’, ‘பேச்சி’, ‘பிளாக்’ ஆகியன இடம் பிடிக்கின்றன. இந்த ஆண்டு விளையாட்டுத் திரைப்படங்களின் எண்ணிக்கையும் கூடியிருந்த நிலையில் ‘சிங்கப் பெண்ணே’ சிறப்புக் கவனம் ஈர்த்தது. சிறார் மற்றும் டீன் உலகைச் சிறப்பாகச் சித்தரித்த வகையில் ‘குரங்குப் பெடல்’, ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’, ‘செவப்பி’, ‘மின்மினி’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘டீன்ஸ்’ ஆகிய படங்கள் தேர்வு பெறுகின்றன. 2024இன் சோதனை முயற்சித் திரைப்படங்கள் என்கிற அளவில் ‘கொட்டுக்காளி’, ‘கடைசி உலகப் போர்’ ‘ராக்கெட் டிரைவர்’ ஆகியன சிந்திக்க வைத்தன.

- jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்