நாங்கள் தங்கியிருந்த லொசான் குறித்துப் பகிர்ந்து கொள்ள பல சுவாரசியங்கள் உண்டு. ரிப்போன் சந்தையில் இருந்த மிக்ரோஸ் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தோம். அங்கு பச்சைப் பசேலென இருந்த காய்கறிகள், எங்களைக் கவர்ந்தன.
வேறோர் இடத்தில் அரை லிட்டர், ஒரு லிட்டர் காலி பாட்டில்களை வைத்திருந்தார்கள். ஆரஞ்சு ஜூஸ் வேண்டுமென்றால் அந்தப் பாட்டிலை ஒரு குழாய்க்குக் கீழ் வைத்துவிட்டு ஒரு பட்டனை அழுத்தினால் போதும். மேலே குவிக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சுப் பழங்கள் தானாகவே குழாய் வழியாக உருண்டோடி நசுக்கப்பட்டு, அதன் சாறு பாட்டிலில் சேகரிக்கப்படுகிறது. அந்தப் பல்பொருள் அங்காடியில் ஒரு காபி வெறும் ஒரு ஸ்விஸ் ஃப்ராங்குக்குக் கிடைக்கிறது. அதாவது 90 ரூபாய்க்கு! (சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் பால் காபி குடிக்க வேண்டுமானால் 400 ரூபாயை வைத்தாக வேண்டும்!).
அந்த அங்காடியின் நுழைவுப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட டின்கள், பாட்டில்களைப் போட்டுவிட ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கும் மக்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.அதுதான் விஷயம்.
ஸ்விஸில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு குப்பைத் தொட்டிகளை வைத்திருப்பார்கள். ஒன்றில் மக்கும் குப்பைகள். மற்றொன்றில் மக்காத குப்பைகள். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே அந்தக் குப்பைகளை நகராட்சியினர் சுத்தம் செய்வார்கள். அந்தக் குப்பைகளை ஒரு குறிப்பிட்ட வகையினாலான அதிக தடிமன் கொண்ட பெரிய பிளாஸ்டிக் பைகளில்தான் போட்டு வைக்க வேண்டும். ஒவ்வொரு பிளாஸ்டிக் பை குப்பைக்கும் இவ்வளவு தொகை என்று வசூலித்து விடுவார்கள். இதனால்தான் அதிக இடம் அடைத்துக் கொள்ளும் பாட்டில்கள், டின்கள் போன்றவற்றை நேரடியாக மிக்ரோஸ் வளாகத்தில் கொண்டு கொடுப்பவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.
ரிப்போன் அங்காடியிலிருந்து சற்றுத் தள்ளி ஏஷியன் ஸ்டோர்ஸ் கடை எங்களுக்கு நெருக்கமானதாக இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவின் தனித்தன்மையான பல பொருள்கள் அங்கே கிடைத்தன. ‘சாம்பார் வெங்காயம் , மாங்காய், பச்சை வேர்க்கடலை, மாரி பிஸ்கட், கசகசா இருக்கிறது’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் என் மனைவி. பொதுவாக அங்கு கடைகளை எல்லாம் மாலை ஆறு மணிக்கு மூடி விடுகிறார்கள் என்றாலும் ஏஷியன் ஸ்டார்ஸ் எட்டு மணிவரை திறந்திருக்கிறது. இது போன்ற கடைகளைப் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள் நடத்துகிறார்கள். கடையை நடத்துபவர்கள் பொருள்களின் பெயரை ஆங்கிலத்தில் கூறினால் முழிக்கிறார்கள். பிரெஞ்சில் அல்லது தமிழில் கூறலாம். ஆனால், சுவிட்சர்லாந்தில் நமக்கு வேறு சிக்கல் உள்ளது.
தலைசுற்றலுக்கு ஒரு குறிப்பிட்ட மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை உண்டானது. ஆனால் அதில் ஒரு பட்டி குறைந்துவிட்டது. அந்த மாத்திரை அங்குள்ள மருந்தகத்தில் இருந்தாலும் அதை வாங்க முடியவில்லை. அந்த மாத்திரைகளை டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் வேண்டும் என்கிறார்கள். நம் இந்திய மருத்துவர்களின் ப்ரிஸ்க்ரிப்ஷனை அவர்கள் ஏற்பதாக இல்லை!
மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றால் அவசர சிகிச்சை தேவைப்படாத நோயாளிகள் மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. என்ன செய்வது என்று யோசித்தோம்.
பயணம் தொடரும்...
முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 28: புகழ்பெற்ற சுவிஸ் கடிகாரங்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago