வெற்றியின் முதல் படி

By நஸீமா ரஸாக்

சக்ஸஸ் ஃபார்முலா – 30

சச்சு புதிய வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்களாகி இருந்தன. டீம் அவுட்டிங் என்கிற பெயரில் ஒவ்வொரு வார இறுதியும் உடன் வேலை செய்பவர்களோடு கழிந்தது. புது இடம் , புது நண்பர்கள், புது வேலை என்று எல்லாம் சரியாகப் போயிருக்க வேண்டும். ஆனால் வார இறுதியை நெருங்கும் போது முன்பைவிட அவர் அதிக சோர்வுடன் இருந்தார்.

“சச்சு இன்னைக்கு என்ன பிளான்?”

“கிண்டல் பண்ணாத நஸீ, நானே கடுப்புல இருக்கேன்”.

‘ஜாலி பண்ண என்ன கடுப்பு? நீ எஞ்சாய் பண்றதானே?”

“நஸீ, ஒவ்வொரு வாரமும் வெளியே போறது எனக்குப் பிடிக்கல. நான் எஞ்சாய் பண்ணல. டீம்ல எல்லாம் சின்ன பசங்க. வரலைனு சொன்னா, பூமர்னு சொல்லிடுவாங்க. எல்லாம் என் தலை எழுத்து“ என்று எரிச்சலடைந்தார்.

“இவ்வளவுதானா மேட்டர்?”

“ம்… சொல்ல ஈஸிதான், எங்கே ஒரு வழி சொல்லுப் பார்க்கலாம்.”

நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையாக இருந்தால், பாதிப் பிரச்சினை அல்ல முக்கால் வாசி பிரச்சினை தீர்ந்துவிடும். நான் சொல்வது போல் அது சுலபம் அல்ல. ஆனால் முடியும். நாம் உண்மையாக இருப்பதற்கு எது தடுக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நம் உணர்வுகளை மறைத்து இருப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று சிந்திக்க வேண்டும்.

சச்சு விஷயத்திற்கு வருவோம். பிடிக்கவில்லை, வரவில்லை என்றுகூடச் சொல்ல வேண்டாம். வேறு வேலை இருக்கிறது என்று சொல்லியாவது பிடிக்காத ஒன்றிலிருந்து தன்னை விடுவித்து இருக்கலாம்.

நாம் மற்றவர்களுக்காக, சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக என்று வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொள்கிறோம். இந்த விளையாட்டில் நம் உண்மையான முகத்தை நாமே மறந்துவிடும் சூழல் வந்துவிடுகிறது. இதனால் சுய அடையாளம் தொலைந்து பொம்மலாட்டமாக வாழ்க்கை மாறிவிடுகிறது.

சுயத்தைத் தொலைத்த யாரும் வெற்றியாளர்கள் பட்டியலில் சேருவதில்லை. நான் சொல்லும் வெற்றியைப் பணம், புகழ் என்று சுருக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையின் அர்த்தமாகப் பாருங்கள், தோல்வியின் ஆழம் புரியும்.
நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கும் போது ஒரு தன்னம்பிக்கை இருக்கும். தன்னம்பிக்கை இருந்தால் புதிய சூழல்களைச் சமாளிக்கும் சூட்சுமம் தெரிந்துவிடும்.

இன்று நம்மில் பலர் இதைப் பற்றி யோசிக்காமல் வாழ்க்கையை வீண் செய்கிறோம். இன்று மேற்கத்திய நூல்கள் இதைப் பரவலாகப் பேசி வருகின்றன. ஆனால் திருமூலரும் வள்ளுவரும் நமக்கு உபதேசம் செய்த அனைவரும் ’தன்னை அறிதல்’ பற்றி அவரவர் பாணியில் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

’தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே’

என்று திருமூலர் சொல்கிறார். எவன் ஒருவன் தன்னை அறியாமல் இருக்கின்றானோ, அல்லது தெரிந்து கொள்ள முயற்சி ஏதும் இன்றி திரிகிறானோ அவன் மாய்ந்து போகிறான் என்கிறார். எவன் தன்னைப் பற்றி அறிகிறானோ அவனுக்கு எல்லாம் வசப்படும் என்கிறார்.

தன்னைப் பற்றி அறிதல் என்பது, நம் பலம், பலவீனம் பற்றித் தெரிந்துகொள்வது. குறைகளை ஏற்றுக்கொண்டு அதைச் சரி செய்ய வழிகளைப் பார்ப்பது. பொய்யான எதற்கும் வாழ்க்கையில் இடம் கொடுக்காமல் இருப்பது. மனத்திற்கு ஒவ்வாத ஒன்றை எக்காரணம் கொண்டும் செய்யாமல் இருப்பது. இவை அனைத்தும் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பதற்குச் சாட்சியாக இருக்கும். போலி அற்றவர்களின் வெற்றிகள் ஒரு முறை பூக்கும் பூப்போல இல்லாமல், ஆலமரம் போல் வேரூன்றி நிற்கும்.

ஒரே நாளில் மாற்றங்களைக் கொண்டுவருவது நீண்ட காலம் பயன் தராது. சொல்லப் போகும் பத்து வழிகளைத் தொடர்ந்து வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.

1. தேவையற்ற விஷயங்களிலிருந்து ஒதுங்கி இருப்பது அவசியம். அதற்காக எத்தனை முறை வேண்டுமென்றாலும் இல்லை என்று சொல்லப் பழக வேண்டும்.

2. மற்றவர்களுடைய எதிர்பார்ப்புக்கு அதிகம் கவனம் தருவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நலன் விரும்பிகள் சொல்வதைத் தவிர, மற்ற சொற்களைக் களைத்துவிடுங்கள்.

3. உங்கள் குறை நிறைகளை ஒளிவு மறைவில்லாமல் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் உடனே சரி செய்ய வேண்டியது எது என்று பார்த்து அதற்கான செயல்களில் இறங்க வேண்டும்.

4. தோல்விகளை அசிங்கம் என்றோ மரியாதை குறைவாகவோ நினைக்காமல் கற்றுக் கொள்கின்ற தளமாகப் பார்க்கப் பழகுங்கள்.

5. அவ்வப்போது உங்கள் எண்ணங்களை, அனுபவங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

6. வாழ்க்கையின் பாதையில் எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் அதில் பயணிக்கப் போவது நீங்கள் மட்டும்தான் என்பதை ஏற்றுக் கொண்டு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

7. தேவையான இடத்தில், சரியான நபர்களிடம் உதவி கேட்டுத் தெளிவு பெறுவது அவசியம். அது மரியாதை குறைவு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

8. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் சவால்களைக் கடந்து செல்ல அந்தச் சூழலில் எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

9. உங்கள் வெற்றி, தோல்விகளை எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். போட்டியை உங்களோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நேர்மையாக இருங்கள்.

10. உங்கள் செயல்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்பகமானவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சச்சு ஒவ்வொரு வார்த்தையையும் சேமித்துக் கொண்டார். சில நிமிடங்கள் கழித்து உடன் வேலை செய்பவர்களை அழைத்து, “வேறு முக்கியமான வேலை இருக்கிறது, நான் வரவில்லை என்று இணைப்பைத் துண்டித்தார்.

(முற்றும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.

தொடர்புக்கு: writernaseeema@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

மேலும்