‘உடலுக்கு ஒன்பது வாசல் - மனதுக்கு எண்பது வாசல்’ என்று பாடுகிறார் கவிஞர் கண்ணதாசன். மனித உடலில் கண்ணுக்குத் தெரிந்து ஒன்பது துவாரங்கள் உள்ளன. ஒன்பது துவாரங்கள் இருந்தும் உள்ளே உயிர் பிராணன் என்ற வடிவில் வாயுவாக வெளியேறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது எப்படி என்பது அறிவியலே வியக்கும் உண்மை.
திருவண்ணாமலையை வந்து அடைய ஒன்பது சாலைகள் உள்ளன. திருவண்ணாமலையின் மையமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலிலும் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இதனால், திருவண்ணாமலை மனித உடலின் ஜடத்துவ வடிவம் என்று ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர். அண்ணாமலையார் ஆலயமே ஜீவாத்மாவின் குறியீடு என்பது சித்தர்கள் கருத்து. இதன் காரணமாகவே இத்தளத்துக்கு ‘நவ துவாரபுரி’ என்ற பெயர் உண்டு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோயிலை அணுகும் போதே வாயிற்புறம் நம்மை வரவேற்பது ராஜகோபுரம். கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 217 அடிகள்.
கோயில் கல்வெட்டுகள் கூறும் தகவல்களின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கியவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர். இவர் காலத்தில் 1512-ம் ஆண்டு இப்பணி தொடங்கப்பட்டது. இவரது மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்த அவரின் தம்பி அச்சுதராயர் சக்கரவர்த்தியாகிய பிறகு, இப்பணியை தொடர்ந்தார். ஆனால், அவர் காலத்திலும் இப்பணி முடியவில்லை. அதன் பின் விஜயநகர பேரரசின் சார்பில் சித்தூர் - வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்து ஆட்சி செய்த சேவப்ப நாயக்கர் என்ற விஜயநகர படைத்தலைவர் இப்பணியை தொடர்ந்தார்.
1590-ம் ஆண்டில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சேவப்ப நாயக்கர் மிகுந்த இறை பக்தி கொண்டவர். அவர் காலத்தில் சிவநேச சுவாமிகள், உலகநாத சுவாமிகள் என இரு தவயோகியர் வாழ்ந்தனர். இவர்களை சேவப்ப நாயக்கர் நேரில் சென்று வணங்கிய போது, கட்டி முடியாமல் அரைகுறையாக இருக்கும் திருவண்ணாமலை ராஜகோபுரம் பணிகளை முடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, இப்பணிகளை சேவப்ப நாயக்கர் நிறைவு செய்ததாக வரலாறு கூறுகிறது.
ராஜகோபுரம் கிருஷ்ணதேவராயர் பெயரால் ராயர் கோபுரம் என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பின் இது ராயகோபுரம் என்றும், ராஜகோபுரம் என்றும் ஆனது. இது, 11 நிலைகள் கொண்ட பெரிய கோபுரம் ஆகும். இதுகுறித்து பல கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. கோபுரத்தை கட்டியதுடன் கோயிலுக்கு என ஏராளமான கிராமங்களையும் தானமாக வழங்கினார் சேவப்ப நாயக்கர்.
ராஜகோபுரம் வாயில் வழியே உள்ளே நுழைந்து மேலே பார்த்தால் அதன் பிரம்மாண்டம் தெரியும். இவ்வளவு பெரிய நிலைவாயில் ஒற்றைக் கல்லால் ஆனது என்பதை காணும் போது, நமது முன்னோர்களின் சிற்ப கட்டுமான திறமை நம்மை சிலர்க்க வைக்கும். ராஜகோபுரத்தின் உயரம் 217 அடி என்பதை பார்த்தோம். இதன் கீழ்ப்பகுதி 135 அடி நீளமும் 98 அடி அகலமும் கொண்டது. இதன் பரப்பளவை எண்ணி பார்த்தால் பிரமிப்பு ஏற்படும்.
பிற கோபுரங்களில் உள்ள நிலை மாடங்களுக்கு ஏறி செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் ராஜகோபுரத்தில் மட்டும் முதல் சில நிலைகளுக்கு ஏறி செல்ல படிகள் கிடையாது. ஏறுபவர் ஏணி கொண்டு வந்து போட்டுத்தான் ஏற முடியும். அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சில அங்கணங்களுக்கு ஏன் படிகள் கிடையாது? என்பதன் பின்னணி சுவையானது. அருணகிரிநாதர் வரலாறு நாடறிந்தது.
ஆரம்பத்தில் போகங்களில் திளைத்த அருணகிரி பின்னர் சொத்துக்களை இழந்து உடல் நோய் உற்று வாழ்க்கையை வெறுத்து அப்போதைய கோயிலின் முதல் கோபுரமாக விளங்கிய வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கீழே குதித்தார். அப்போது முருகரே சிவனடியாராக வந்து அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவர்.
16-ம் நூற்றாண்டில் ராஜகோபுரம் கட்டுகையில், இது மாதிரி எவரும் வாழ்க்கையில் மனம் உடைந்து இக்கோபுரத்தில் தற்கொலை செய்து கொண்டு விடக் கூடாது என்பதற்காகவே இங்கு படிகள் அமைக்கப்படவில்லை. மேலும் 16-ம் நூற்றாண்டு போர்கள் நிரம்பிய கொந்தளிப்பான காலம். போர் என்று வந்தால் கோயிலே கோட்டையாக மாறும். எனவே கோபுரத்தின் மீது இருந்து தாக்கும் படைகளை, எதிரிகள் நெருங்கினாலும் மேலே இருந்து போரிடுபவர்களுக்கு தொல்லை வரக்கூடாது என்பதாலும், ராஜகோபுரத்தின் முதல் சில நிலைகளுக்கு படிகள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முந்தைய காலங்களில் குடும்பத்தில் யாராவது பெரியவர்கள் மறைந்தால் அவர்கள் பெயரால் கோயிலில் எண்ணெய் மற்றும் கட்டணம் செலுத்துவார்கள். இறந்தவருக்காக பத்தாம் நாள் அல்லது 13-ம் நாள் ராஜகோபுரத்தின் மேல் உச்சியில் வரிசையாக விளக்குகள் ஏற்றப்படும். இதற்கு மோட்ச தீபம் என்று பெயர். இறந்தவரின் குடும்பத்தார் இந்த மோட்ச விளக்கை பயபக்தியுடன் வழிபடுவர். இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்து மேல் உலகம் செல்ல இந்த தீபம் வழிகாட்டும் என்பது ஐதீகம்.
ராஜகோபுரத்தை அடுத்து உட்புறம் இருப்பது வல்லாள மகாராஜா கோபுரம். ராஜகோபுரம் கட்டப்படுவதற்கு முன்பு இதுதான் கோயிலின் பெரிய கோபுரமாக இருந்தது. அருணகிரி நாதர் உயிரை மாய்த்துக்கொள்ள இந்த கோபுரத்தின் மேல் ஏறி நின்று தான் கீழே குதித்தார். அதனால் பாமர மக்கள் இதனை அருணகிரிநாதர் கோபுரம் என்றும் குறிப்பிடுவர். இக்கோபுரத்தை கட்டியவர் திருவண்ணாமலையை ஆண்ட மன்னர் வீர வல்லாள தேவர். இவர் கன்னட நாட்டை ஆண்ட ஹொய்சல மன்னர்களின் வம்சத்தில் வந்தவர்.
திருவண்ணாமலைக்கு ஏகப்பட்ட நற்பணிகள் செய்தது மூன்றே மன்னர்கள் தான். அதில், முதலிடம் இந்த வல்லாள தேவருக்குரியது. இவரது வம்சத்தில் மூன்று மன்னர்களுக்கு வல்லாளன் என்ற பெயர் உண்டு. ஆனால் இவர் ஒருவர் தான் மிக முக்கியமானவர். இவரது முன்னோர்கள் கர்நாடகத்தில் துவாரசமுத்திரம் நகரை தலைநகராக கொண்டவர்கள். இவர், அண்ணா மலையார் மீது கொண்ட பக்தியால் திருவண்ணாமலையிலேயே தங்கி, இந்நகரை தனது தலைநகர் என்று அறிவித்தார்.
இவர் காலத்தில் திருவண்ணாமலை, அருணசமுத்திரம் எனப்பட்டது. மக்கள் இதை வீரவல்லாள பட்டணம் என்றும் அழைத்தனர். வல்லாள மகாராஜா கோபுரம் 170 அடி உயரம் கொண்டது. இதன் வாயிலில் உட்புகுந்தால் மண்டபம் போல் குடையப்பட்டு அதில் வல்லாள தேவரும், அவர் மனைவியும் சிலை வடிவில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.
வல்லாள கோபுரத்தை ஒட்டி இருபுறமும் கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் கோபுரத்து இளையனார் சந்நிதிகள் உள்ளன. இவற்றை விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயர் 1421-ம் ஆண்டில் கட்டினார். இந்த கோபுரத்தில் இருந்து ஓதுவார்கள் திருமுறை ஓதுவதால், இதற்கு சிவசிவ ஒலி மண்டபம் என்றும் பெயர். திருப்பனந்தாள் காசி மடம், இம்மண்டபத்தை கட்டியுள்ளது. வல்லாள கோபுரம் 1328- ல் கட்டத் தொடங்கப்பட்டு 1331-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சிலர் இதனை 1340-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
வல்லாள மகாராஜா கோபுரத்தை அடுத்து இருப்பது கிளி கோபுரம். இந்த கிளி கோபுர வாசல் தான் மூலஸ்தானம் உள்ளிட்டவை அடங்கி இருக்கும் பகுதிக்கு செல்லும் வழி. அர்த்த ஜாம பூஜை முடிந்தவுடன் இந்த வாசலின் பெரிய மரக்கதவுகள் சாத்தப்பட்டு, உள்ளே இருப்பவர்கள் வெளியேற ஒரு திட்டிவாசல் கதவை திறந்து வைத்திருப்பார்கள். நடுவாசல் என்று இதற்கு பெயர். இதை காவல் காப்பதற்கு நடுவாசல் முறை என்று பெயர். இதன் காவலர் நடுவாசல் ஜவான் எனப்படுவார்.
கிளிகோபுரத்தின் நுழைவாயிலின் இடதுபுறம் சுவரில் ஏழு வரிகளில் தமிழில் கல்வெட்டு காணப்படுகிறது. 1191-ம் ஆண்டு வெட்டப்பட்ட இக்கல்வெட்டு சம்புவராயர்கள் பற்றியது. இதில் சோழ சம்புவராயர் என்ற வார்த்தை பளிச் சென்று தெரியும். இந்த கிளி கோபுரம் 1061-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை பாஸ்கர மூர்த்தி என்பவர் கட்டியுள்ளார். இவரும், இவர் மனைவியும் இங்கு சிலை வடிவில் உள்ளனர்.
அருணகிரிநாதர், பிரபுட தேவராய மன்னன் கண்பார்வை பெறுவதற்காக தேவலோகத்தில் இருந்து மலர் கொண்டு வர சென்ற போது, கூடுவிட்டு கூடு பாய்ந்து கிளி வடிவில் சென்றார். அவர் உடலை சம்பந்தாண்டான் சிதைத்து விட்டதால் இந்த கோபுரம் மீதுதான் கிளி வடிவில் தங்கினார். இங்குதான் கிளி வடிவத்திலேயே கந்தர் அனுபூதி பாடினார். இதை நினைவூட்டும் வகையில் இந்த கோபுரம் மீது ஒரு அழகிய பச்சைக் கிளியின் சிலை காணப்படும்.
மற்ற கோபுரங்களில் புறாக்கள் காணப்படும் போது, இந்த கோபுரம் மீது மட்டும் நிறைய பச்சைக் கிளிகள் இப்போதும் காணப்படுவது ஒரு ஆச்சரியம். இக்கோபுரத்தில் மொத்தம் 33 கல்வெட்டுகள் உள்ளன. இதில் மிகப் பழமையானது 1063-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு. இந்த கிளி கோபுரத்தில் மிகக் கவர்ச்சியான ஒரு மோகினி சிலை உள்ளது. கோயிலுக்குள்ளே போகும்போது இதை பார்க்கலாம். ஆனால், திரும்ப வரும்போது பார்த்தால் உள்ளே கடவுளிடம் நாம் பெற்ற வரங்களை எல்லாம் இவள் பறித்துக் கொண்டு விடுவாள் என்பது மக்களின் நம்பிக்கை.
இதற்கு, அடுத்தபடியாக தென்திசையில் இருப்பது திருமஞ்சன கோபுரம். இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. இதுவும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் கட்டப்பட்டது. இக்கோபுரத்தில் மற்ற எந்த கோபுரத்திலும் இல்லாத அளவுக்கு ஏராளமான அற்புத சிற்பங்கள் உள்ளன. மணலூர்பேட்டை சாலையில் ஒரு முக்கிய குளம் உள்ளது. பூ அமர்ந்த அம்மன் குளம் என்பது இதன் பெயர். இப்போது மக்கள் இதனை பூமாந்தாகுளம் என்கிறார்கள்.
இந்த குளத்திலிருந்து தான் தினமும் கலசத்தில் நீர் எடுத்து, அக்கலசத்தை யானை மீது ஏற்றி வைத்து கோயிலுக்கு கொண்டு வந்து கோயில் திருப்படியை சுத்தம் செய்து, அதன் பின்னரே கோயில் நடை திறப்பார்கள். அதிகாலையில் கோயிலில் நீர் தெளித்து நடை திறக்கப்படுவதற்கு திருமஞ்சனம் என்று பெயர். கோயில் யானை சென்று திருமஞ்சனத்துக்கு இந்த கோபுர வாசல் வழியாக நீர்கொண்டு வருவதால் இதற்கு திருமஞ்சன கோபுரம் என்றே பெயர்.
திருமஞ்சன நீர் கொண்டுவர வெள்ளி குடம் ஒன்றையும் கிருஷ்ணதேவராயரே செய்து கொடுத்துள்ளார். இந்த திருமஞ்சன கோபுரத்தை கடந்த 1935-ம் ஆண்டு சூரிய நாராயண செட்டியார் என்பவர் திருப்பணி செய்து புதுப்பித்தார். இதில் உள்ள ஓதுவார் திருக்கூட்ட சுதை சிற்ப வேலைப்பாடுகள் செய்வதற்கு, மாடலாக நின்று போஸ் கொடுத்தவர் டேனிஷ் மிஷன் பள்ளியில் தமிழாசிரியராகவும், ஆன்மீக உரைகள் செய்து, ‘அருள் நிறை அண்ணாமலையார்’ போன்ற நூல்களை எழுதியும், தொண்டு செய்து ‘தமிழ்அய்யா’ என பலராலும் போற்றப்பட்ட பாண்டுரங்கனார் தான். திருமஞ்சன கோபுரத்தை புதுப்பித்து திருப்பணி செய்த சூரியநாராயண செட்டியாரின் சமாதி திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூரிய நாராயண செட்டியார் இக்கோபுரத்தின் மேற்கே திருவருள் விலாசம் என்ற கட்டிடத்தையும் கட்டியுள்ளார். அங்கு சிறிது காலம் வள்ளலார் வழிபாடும், அன்னதானமும் கூட நடைபெற்று பின்னர் நின்று போனது. திருமஞ்சன நீர் கொண்டு வரும் வழக்கம் இடையில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு இல்லாமல் போனது.
பின்னர் 16-01-1981 முதல் மீண்டும் திருமஞ்சன நீர் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இதற்குள் பூமாந்தாகுளம் பெரிதும் சீர்கேடு அடைந்து விட்டதால் இம்முறை பூமாந்தா குளத்தில் இருந்து கொண்டு வராமல் சுத்தமாக பராமரிக்கப்படும் குமரக் கோயிலில் உள்ள கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்படுகிறது.
திருமஞ்சன கோபுரத்துக்கு வேறொரு சிறப்பும் உண்டு அண்ணாமலையார் கோயிலில் எல்லா தெய்வங்களும் மாட வீதி பவனி செல்லும்போது ராஜகோபுரம் அடுத்த திட்டி வாசல் வழியாகத்தான் செல்லும். ஆனி திருமஞ்சனம், மார்கழி மாத திருவாதிரை உற்சவம் உள்ளிட்ட நடராஜப் பெருமானுக்குரிய உற்சவங்களின் போது நடராஜர் மட்டும் சந்நிதியில் இருந்து புறப்பட்டு, திருமஞ்சன கோபுரத்தின் வழியாக வெளியே சென்று மாட வீதி பவனி வருவார். திருமஞ்சன கோபுரத்தின் மீது 11 கலசங்கள் இருந்தன. கடந்த 2002 ஆண்டு கும்பாபிஷேக திருப்பணியின் போது இவை ஒன்பதாக குறைக்கப்பட்டு விட்டன.
இதற்கு அடுத்து மேற்கு திசையில் இருப்பது பேகோபுரம். இது 12-ம் நூற்றாண்டு தொடங்கி, 18-ம் நூற்றாண்டு வரை நீடித்த சைவ - வைணவ பூசல்களில் சிக்கியது. சைவர்கள் சிவனை வணங்கிய போது, வைணவர்கள் மூலஸ்தானத்தின் பின்புறம் உள்ள பாமா-ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமியை வணங்குவார்கள். இவர்கள் மேற்கு கோபுரம் வழியாக வந்து வழிபட்டு திரும்பி செல்வார்கள். பின்னர் இந்த வைணவர்கள் மொத்தமாக திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயிலூருக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர்.
மேற்கு கோபுரத்துக்கு இவர்கள் வைத்த பெயர் பேயாழ்வார் கோபுரம் என்பதாகும். இது பின்னர் பேயகோபரம் என்று அழைக்கப்பட்டு இப்போது பேகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பேகோபரம் 144 அடி உயரம் கொண்டது. இதுவும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் கட்டப்பட்டது. முக்கியமான நாட்கள் தவிர மற்ற நாட்களில் இக்கோபுர வாசல் பெரும்பாலும் சாத்தப்பட்டே இருக்கும்.
இதற்கு அடுத்தது வடக்கு கோபுரமான அம்மணி அம்மன் கோபுரம். இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் திருப்பணி தொடங்கி பின்னர் அப்படியே அரைகுறையாக நின்று போனது. அம்மணி அம்மாள் என்ற சிவபக்தை பெருமுயற்சி எடுத்து இதனை கட்டினார். இவர் பெயரால் இது அம்மணி அம்மாள் கோபுரம் என்றும், இதை ஒட்டிய தெருவும் அம்மணி அம்மன் தெரு என்றும் வழங்கப்படுகிறது. 1740-ல் இதற்கான திருப்பணிகள் தொடங்கி மீண்டும் நின்று, அம்மணி அம்மையாரால் முடிக்கப்பட்டது. இதன் உயரம் 171 அடி. கோயிலின் நான்கு மதில்களிலும் வெளிப்புறம் உள்ள நாலு கோபுரங்களையும் ஒட்டி உட்புறம் நான்கு சிறுகோபுரங்கள் உள்ளன. இவற்றை கட்டை கோபுரம் என்பார்கள்.
ராஜகோபுரத்தை அடுத்து இருப்பது கிழக்கு கட்டை கோபுரம். திருமஞ்சனகோபுரத்தை அடுத்து இருப்பது தெற்கு கட்டை கோபுரம். பேகோபுரத்தை அடுத்து இருப்பது மேற்கு கட்டை கோபுரம். அம்மணி அம்மன் கோபுரத்தை அடுத்து இருப்பது வடக்கு கட்டை கோபுரம். இவை நான்குமே 70 அடி உயரம் கொண்டவை. ஒன்பது கோபுரங்கள் கொண்ட அண்ணாமலை யார் கோயிலில் கணக்கில் வராத பத்தாவது கோபுரம் ஒன்றும் உண்டு. கோயிலில் கொடி மரத்தை அடுத்து காணப்படும் இந்த மிகச்சிறு கோபுரத்துக்கு ரிஷி கோபுரம் என்று பெயர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தலவிருட்சமான மகிழமரம் மூலஸ்தானம் அருகே உள்ளது. இதன் பக்கத்தில் நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களையும் ஒரே சமயத்தில் காண முடியும். இதற்கு ‘நவ கோபுர தரிசனம்’ என்றே பெயர்.
திருவண்ணாமலைக்கு அரும் பணிகள் செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை. இதனால், அண்ணாமலையாரே அவருக்கு மகனாக இருந்து, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவண்ணாமலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கொண்டாப்பட்டு என்கிற ஊருக்கு சென்று, அங்குள்ள துரிஞ்சலாற்றில் திதி கொடுப்பார். அன்று மட்டுமே அண்ணாமலையார் ராஜகோபுரம் வழியாக வெளியே சென்று, ராஜகோபுரம் வழியாகவே உள்ளே வருவார். மற்ற எல்லா நாட்களிலுமே அண்ணாமலையார் உட்பட எல்லா உற்சவமூர்த்திகளும் ராஜகோபுரத்தை அடுத்துள்ள திட்டிவாசல் வழியே தான் மாடவீதி பவனி சென்று, திட்டிவாசல் வழியாகவே திரும்பி வருவார்கள்.
வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத படி ஒன்பது கோபுரங்கள் கொண்ட ஒரே கோயில் அண்ணாமலையார் கோயில் தான். ஒன்பது கிரகங்களுமே ஒன்பது கோபுரங்களாக நின்று, பரம்பொருளுக்கு காவல் இருப்பதாக ஐதீகம். இதனால் இந்த கோபுரங்களை தரிசித்தாலே நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பார்கள். ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்ற பழமொழியே இதனால்தான் வந்தது.
- த.ம.பிரகாஷ் | திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago