உன் உலகம், என் உலகம், நம் உலகம்! | தேன் மிட்டாய் 31

By மருதன்

நியாயப்படி பார்த்தால் கோபமும் எரிச்சலும் தான் வர வேண்டும். எனக்கென்னவோ இந்த ஆண்களைக் கண்டால் பரிதாபம்தான் தோன்றுகிறது. என் முதுகுக்குப் பின்னால் மட்டுமல்ல முகத்துக்கு நேராகவும் இவர்கள் என்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்கும்போது, ‘ஐயோ பாவ’மாகவே அவர்கள் எனக்குக் காட்சி அளிக்கிறார்கள்.

‘என்னது, மேரி கியூரி ரேடியத்தைக் கண்டறிந்திருக்கிறாரா? பொலோனியமும் அவருடைய கண்டறிதலா? கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தவர் அவரா? வாய்ப்பே இல்லை. அவரால் இதைச் செய்திருக்க முடியாது. அவர் கணவர் பியரி கியூரியைத் தெரியும் அல்லவா? பெரிய ஆய்வாளர். புத்திசாலி. நிச்சயம் அவர்தான் இந்தச் சாதனைகளை நிகழ்த்தி இருக்க வேண்டும்.’

‘பியரிதான் ரேடியத்தையும் பொலோனியத்தையும் கண்டறிந்திருக்க வேண்டும். மேரி அவருடைய ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருந்திருப்பார். கூடமாட ஒத்தாசை செய்திருப்பார், மறுப்பதற்கில்லை. பியரியும் போனால் போகட்டும் என்று மனைவிக்காகத் தனது சாதனைகளை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்.

இதுதான் நடந்திருக்கும். என்னவோ மேரியே யோசித்து, மேரியே ஆய்வு செய்து, மேரியே எல்லாவற்றையும் கண்டறிந்ததாகச் சொல்வது எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?’ ‘எவரையும் எதையும் நம்பாதே. அனைவரையும், அனைத்தையும் சந்தேகி’ என்பது அறிவியலின் அடிப்படைப் பாடங்களுள் ஒன்று. எனக்கும் தெரியும். மேரி ஏதோ கண்டறிந்திருக்கிறார் என்றதும் உலகம் அப்படியே நம்பிவிட வேண்டும் என்று நான் எதிர்பார்க்க மாட்டேன்.

சந்தேகத்தோடே என்னை அணுகுங்கள். என் பின்னணி என்ன, நான் எங்கே பயின்றிருக்கிறேன், இதற்கு முன்பு என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று கவனமாக ஆராயுங்கள். என் கண்டறிதல்கள் குறித்து நூறு கேள்விகள், இல்லை இல்லை ஆயிரம் கேள்விகள் கேளுங்கள்.

என் ஆய்வுக் குறிப்புகளை வாங்கிப் படியுங்கள். அதில் ஏதேனும் தவறு செய்திருக்கிறேனா என்று தேடுங்கள். என் பரிசோதனைகளை எல்லாம் ஊன்றிக் கவனியுங்கள். கற்றறிந்த ஆய்வாளர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் என் ஆய்வுகளைப் பார்வையிடட்டும். நடுநிலையோடு என்னை அவர்கள் மதிப்பிடட்டும்.

இவை அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பும். ஆனால், நீங்கள் இவற்றில் ஒன்றைக்கூடச் செய்யவில்லை. என்னிடம் ஒரு சொல்கூடப் பேசவில்லை. என் ஆய்வுகள் குறித்து ஒரு வரிகூடப் படிக்கவில்லை. என் பரிசோதனைச் சாலைக்கு வந்தால் நானே ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டி, ஆர்வத்தோடு விளக்கி இருப்பேன். உங்களில் ஒருவருக்கும் என்னைக் காண வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் முடிவு மட்டும் எடுத்துவிட்டீர்கள். இதை எல்லாம் மேரியால் தனியாகச் செய்திருக்க முடியாது.

உங்களால் பியரியை ஏற்க முடியும். பியரியின் ஆய்வுகளைக் கொண்டாட முடியும். பியரியின் கண்டறிதல்களை முகமலர்ச்சியோடு வரவேற்க முடியும். ஏனென்றால் பியரியை நீங்கள் நம்புகிறீர்கள். அவர் திறமையின்மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறது. அவர் ஒரு சாதனையாளர், அவர் ஒரு கண்டுபிடிப்பாளர் என்பதை உங்களால் ஏற்க முடிகிறது. நான் மேரி. அதனால் உங்களால் என்னை ஏற்க முடியவில்லை.

என் வருத்தம் எல்லாம் இது உங்களுக்கு முரண்பாடாகவே தெரியவில்லை என்பதுதான். நீங்கள் எல்லாரும் அறிவியலை நம்புபவர்கள். ஆனால் உங்கள் ஒருவரிடமும் அறிவியல் பார்வையே இல்லை. உலகை நீங்கள் இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறீர்கள். பியரிகளின் உலகம். மேரிகளின் உலகம். பியரியின் துணையாகவோ பியரியின் நிழலாகவோ மட்டுமே ஒரு மேரியால் இருக்க முடியும்.

என்ன முயன்றாலும் மேரியால் பியரியாக மாற முடியாது என்று நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் பிரச்சினை என்ன தெரியுமா? கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் என்று எல்லாத் துறைகளும் உங்கள் உலகமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படி இருப்பதுதான் இயல்பானது, அதுவே சரியானதும்கூட என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்.

உங்கள் உலகின் இரும்புக் கதவுகளை உடைத்துக்கொண்டு ஒரு மேரி உள்ளே நுழைந்ததை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்கள் அதிர்ச்சி உங்கள் கண்களில் தெரிகிறது. உங்கள் நடுங்கும் உடலில் தெரிகிறது. உங்கள் அர்த்தமற்ற சொற்களில் தெரிகிறது. என்னைக் கண்டு மட்டுமல்ல, மேரிகளைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள்.

எங்கள் பரிசோதனைச் சாலைகளில் மேரிகள் இடம்பெற ஆரம்பித்துவிட்டால் என்ன ஆவது என்று நீங்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டீர்கள். இயற்பியல் உலகில் நாளை மேரிகள் ஊடுருவி விடுவார்களா? கணிதத்தை மேரிகள் கைப்பற்றி விடுவார்களா? மரபியலும் மேரிகளின் உள்ளங்கைக்குள் சென்றுவிடுமா? அதன் பின் பியரிகள் என்ன ஆவார்கள்?
உங்களைப் பார்க்க நிஜமாகவே எனக்குப் பாவமாக இருக்கிறது. ஏனென்றால் உங்கள் உலகம் என்று சொல்லிக்கொள்ள இனி எதுவும் இருக்கப் போவதில்லை.

மூடியிருக்கும் ஒவ்வோர் உலகின் கதவுகளையும் மேரிகள் உடைத்து நொறுக்கப் போகிறார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு நூலகத்திலும், ஒவ்வொரு பரிசோதனைச் சாலையிலும், ஒவ்வோர் ஆய்வு மையத்திலும் மேரிகள் நிறைந்திருக்கப் போகிறார்கள். அவர்களை, அவர்களுடைய பங்களிப்புகளை, அவர்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏற்றுத்தான் தீரவேண்டும்.

நான் அறிவியலை நம்புகிறேன். மேரிகளின் உலகில் வாழ நான் தயாராக இல்லை. அப்படி ஓர் உலகம் வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. எல்லாரும் எல்லா உலகங்களிலும் வாழ வேண்டும். எல்லாரும் எல்லாருடனும் இணைந்து வாழ வேண்டும். நான் அடுத்து கண்டறிய விரும்புவது அப்படி ஓர் உலகைத்தான்! கதவுகளற்ற உலகம். நம் உலகம்!

(இனிக்கும்)

வாழ்க்கையில் எவற்றைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை;
அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- மேரி கியூரி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்