ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 23 | முன்பு இந்தியாவின் முதுகெலும்பு என்று வேளாண் துறையை சொல்லிக் கொண்டிருந்தோம். இன்று நாட்டின் முதுகெலும்பு என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சொல்ல ஆரம்பித்து இருக்கிறோம். அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இன்ஜினாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இ-காமர்ஸ், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, நிதி சேவை என பல தளங்களில் உருவாகி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நம்முன் இருக்கும் பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறை மூலம் தீர்வு வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தக் கூடியவையாக செயல்படுகின்றன. எனினும், அமெரிக்கா, சீனாவுக்கு நிகரான ஸ்டார்ட்அப் கட்டமைப்பை உருவாக்க சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்கிறார் முதலீட்டாளரும் ஸ்டார்ட்அப் வழிகாட்டுநருமான செந்தில்குமார் இராஜேந்திரன்.
கோடக் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர் செந்தில்குமார். பெங்களூரு ஐஐஎம், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிலையங்களில் நிதி நிர்வாகம், திட்டமிடல் சார்ந்து பட்டம் பெற்றுள்ள அவர், ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வழிகாட்டுநராகவும் உள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து...
தமிழ்நாட்டில் தற்போதைய ஸ்டார்ட்அப் சூழல் எப்படி இருக்கிறது? - தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் மேம்பட்டு வருகிறது. குறிப்பாக, டீப் டெக், சாஸ் சார்ந்து வலுவான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஸ்டார்ட்அப் சார்ந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு சென்னை மட்டுமல்லாது மாநிலத்தின் வெவ்வேறு பிராந்தியங்களில் நடத்துகிறது. ஆரோக்கியமான போக்கு இது. துறைவாரியாகப் பார்த்தால், தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி ஹெல்த்கேர், லாஜிஸ்டிக்ஸ், வேளாண், கல்வி ஆகிய துறைகளில் அதிக எண்ணிக்கையில் ஸ்டார்ட்அப் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? - குருகிராம், மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுக் கட்டமைப்பு மேம்பட வேண்டிய இடத்தில் இருக்கிறது. நிறைய முதலீட்டு வாய்ப்புகளை இங்கு உருவாக்குவது அவசியம். பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அமெரிக்கா உட்பட வெளிநாட்டு நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர்.
அவர்கள் மூலம் பெங்களூரு ஸ்டார்ட்அப் சூழல்குறித்த அறிமுகம் அமெரிக்க முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கிறது. இதனால், அவர்கள் பெங்களூருவில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். இதுபோன்று தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
அதற்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நாம் சர்வதேச அளவில் முதன்மைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு என்று சொன்னால் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பெயர் நினைவுக்கு வர வேண்டும். இன்று சோஹோ நிறுவனம் சர்வதேச அளவில் அறியப்படுகிறது. அதுபோல் இன்னும் பல நிறுவனங்கள் இங்கிருந்து உருவாக வேண்டும்.
தற்போது நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் 2 ஆண்டுகளைக்கூட தாண்டுவதில்லை. என்ன பிரச்சினை? - பெரும்பாலான நிறுவனர்கள் சந்தைத் தேவை குறித்து ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல் களத்தில் குதித்து விடுகின்றனர். அதனால் அவர்களால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதேபோல், தவறான பிசினஸ் மாடல், தயாரிப்பில் புதுமையின்மை, தொலைநோக்கு சிந்தனையற்ற அணி, மோசமான நிர்வாகம், நிதி கிடைக்காமல் போவது ஆகியவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான முக்கியமான காரணங்களாக உள்ளன.
இன்னொரு பிரச்சினை உண்டு. நிதி திரட்டிவிட்டால், தங்கள் ஸ்டார்ட்அப் வெற்றி அடைந்துவிட்டதாக பலர் கருதுகின்றனர். அப்படி கிடையாது. டன்சோவை எடுத்துக் கொள்வோம். ரிலையன்ஸ் ரீடெய்ல், கூகுள் ஆகிய பெரிய நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெற்றது டன்சோ. ஆனால், தவறான திட்டமிடல் காரணமாக தற்போது டன்சோ, கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு திசை தெரியாமல் தடுமாறுகிறது. முதலீடு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து நீடித்து நிற்கும் வகையில் நிறுவனத்தை உருவாக்குவது முக்கியம்.
ஸ்டார்ட்அப் உலகத்துக்குள் காலடி வைத்திருக்கும் இளம் தொழில்முனைவோருக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன? - முதலாவது தெளிவு. சிலர் நிறைய ஐடியாவுடன் இருப்பார்கள். ஆனால், சந்தை குறித்து சிந்திக்க மாட்டார்கள். உங்கள் ஐடியா எவ்வளவு முக்கியமானதாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதை சந்தை வாய்ப்புள்ளதாக நீங்கள் மாற்றாவிட்டால் உங்கள் ஐடியாவால் எந்தப் பலனும் இல்லை. நாம் என்ன செய்யப்போகிறோம், அதை ஏன் செய்கிறோம், நம்முடைய தயாரிப்புக்கு சந்தையில் தேவை இருக்கிறதா என்பன குறித்த தெளிவு மிக அவசியம். இரண்டாவது துணிவு. ரிஸ்க் இல்லாமல் தொழில்முனைவு இல்லை.
ரிஸ்க் எடுக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ரிஸ்க் எடுக்கும் மனநிலை அதிகம். இதனால், அங்கு புதிய விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. ரிஸ்க் எடுக்காமல் முன்னகர்ந்து செல்ல முடியாது.மூன்றாவது தாக்குப்பிடித்தல். ஸ்டார்ட்அப் செயல்பாட்டில் நாம் எதிர்பாராத பின்னடைவு நிகழ வாய்ப்பு உண்டு. அத்தகைய சூழலில், மனம் தளர்ந்து விடக்கூடாது. நம் செயல்பாட்டில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
இன்று இந்தியாவில் 1.4 லட்சத்துக்கு மேல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. எனினும், ஸ்டார்ட் அப் கட்டமைப்பில் அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று கூறுகிறீர்கள். என்ன மாற்றம் தேவை? - ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கும் நாட்டின் கல்விக் கட்டமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்று தொழில்முனைவில் அமெரிக்கா உலகின் முன்னணி நாடாக உள்ளது. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அந்நாட்டில் கல்வி நிறுவனங்களும் தொழில் துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. அங்கு ஆராய்ச்சிமேற்கொள்ளும் மாணவர்களுக்கு நிறுவனங்கள் நிதி வழங்குவது உண்டு.
அதேபோல், சீனாவிலும் ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் அப்படியான சூழல் இல்லை. நம் கல்வி அமைப்பில் படிப்புக்கும் வேலைவாய்ப்பு சந்தைக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும். எந்தத் துறைகளில் எல்லாம் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அந்தத் துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் செயல்பாட்டில் ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் போன்று இன்னும் வலுவான கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதேபோல், நம் இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றம் தேவை. படித்து முடித்ததும் எந்த நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறேன் என்று யோசிக்கும் மனநிலையில் இருந்து, என்னுடைய திறனைக் கொண்டு என்ன பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என்று யோசிக்கும் மனநிலைக்கு மாற வேண்டும்!
- riyas.ma@hindutamil.co.in
முந்தைய அத்தியாயம்: நம்மை பற்றி நாம் சொல்லும் கதை முக்கியம்! - மார்க்கெட்டிங் நிபுணர் சாய்ராம் கிருஷ்ணன் பேட்டி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago