ரயில் விபத்தைத் தடுக்கும் ரோபோட்!

By ம.சுசித்ரா

 

ணக்கார நாடுகளோடு போட்டிபோடவே தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது இந்தியா. தவிர, சாதாரணர்களின் வாழ்க்கையை உயர்த்தும் தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் முனைப்பு காட்டுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப் பட்டுவருகிறது. இதற்குப் பதில் சொல்லும் விதமாக, மலக்குழிக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபோட்டை கேரளத்து இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன்னால் வடிவமைத்திருந்தார்கள்.

அதை அங்கீகரித்து அந்த ரோபோட்டைப் பயன்படுத்த கேரள அரசும் முடிவெடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இத்தகைய உணர்வு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமும் இருக்கிறது என்பதைத் தற்போது வேறொரு ரோபோட் கண்டுபிடிப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார்கள் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள்.

மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள்!

“நாங்கள் மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள், பிரச்சினைக்குத் தீர்வு காண்பவர்கள். அந்த உணர்வுதான் எங்களை ‘ஆர்டிமிஸ்’ ரோபோட்டைக் கண்டுபிடிக்க உந்தித் தள்ளியது” என்றார்கள் சென்னை ஐ.ஐ.டி.யின் ‘சென்டர் ஃபார் இன்னொவேஷன்’ மையத்தைச் சேர்ந்த அக்ஷய், கிருஷ்ணா, கவன் சவ்லா, அனுபவ் அகர்வால், சாஸ்வத் சாஹூ, யாஷ் படேல் ஆகிய மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருப்பது ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பதன் மூலம் ரயில் விபத்துகளைத் தடுத்து நிறுத்த உதவும் ‘ஆர்டிமிஸ்’ ரோபோட்.

கட்டுமானப் பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது பராமரிப்புப் பணியும். அதிலும் ரயில் தண்டவாளங்கள் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டியவை. தண்டவாளத்தில் சிறு விரிசலோ ரயில்பாதையில் சிறிதளவு விலகலோ ஏற்பட்டால்கூட மோசமான விபத்துகள் நேர்ந்துவிடும்.

ரயில் தடம்புரண்டதால் ரயிலில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதே நேரம், மறுபுறம் மறைந்துகிடக்கிறது மற்றொரு செய்தி. அது, இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட ரயில்பாதைப் பராமரிப்புப் பணியாளர்கள் பணியை மேற்கொள்ளும்போது ரயில் விபத்துகளால் உயிரிழக்கிறார்கள் என்பது.

தண்டவாளங்களைச் சோதனையிட்டுப் பராமரிக்கும் பணியை ரயில்பாதைப் பராமரிப்புப் பணியாளர்கள்தாம் இத்தனை காலமாகச் செய்துவருகிறார்கள். அபாயகரமான இந்தப் பணியை மேற்கொள்ளும் டிராக்மென், டிராக்மெயிண்டனர்ஸ், ரயில் பொறியாளர்கள் உள்ளிட்ட ரயில் பணியாளர்களில் பலர் ஆண்டுதோறும் விபத்துகளை எதிர்கொள்கிறார்கள்; சில நேரம் உயிரிழந்துவிடுகிறார்கள். இந்நிலையில் ரயில் பயணிகள், ரயில் பணியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மனத்தில் கொண்டு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது ‘ஆர்டிமிஸ்’ ரோபோட்.

“இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் படித்தோம் உச்சபட்ச சம்பளம் பெறும் வேலையில் சேர்ந்தோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பதல்ல எங்களுடைய இலக்கு. சாதாரணர்களுக்குப் பயனுள்ளவற்றைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறோம். நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் எங்களைக் கலங்கடிக்கின்றன. அதிலும் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படும் போக்குவரத்துச் சாதனங்களில் ஒன்று ரயில். அதில் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பவர்கள் அனேகர். இதற்குக் குறைந்த செலவில் தீர்வு கண்டிருக்கிறோம்” என்றார் ஒடிஷாவில் இருந்து சென்னைக்கு வந்து மூன்றாமாண்டு பையலாஜிக்கல் இன்ஜினீயரிங்க் படித்துக் கொண்டிருக்கும் சாஸ்வத் சாஹூ.

‘ஆர்டிமிஸ்’ எப்படிச் செயல்படும்?

“தற்போதுவரை ‘ultrasonic sensor’ கருவியைக் கொண்டுதான் ரயில் ஊழியர்கள் தண்டவாள விரிசலைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தக் கருவியைக் கையில் பிடித்துக்கொண்டு அவர்கள் தொலைதூரம் நடக்க வேண்டி இருக்கும். அடிக்கடி ரயில்கள் கடந்து செல்லும் தண்டவாளங்களில் அதைப் பயன்படுத்தும் போதுதான் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். நாங்கள் வடிவமைத்திருப்பது 1.5 அடி நீளத்தில் ஆறு சக்கரங்கள் கொண்ட குட்டி ரோபோட்.

ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இது தண்டவாளத்துக்கு இடையில் ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் என்ற வேகத்தில் ஓடியபடியே ‘utlrasonic’, ‘infrared’ சென்சார்கள் மூலமாகத் தகவல் சேகரிக்கும். அந்தத் தகவலை ரோபோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோ சிப்புக்கு அனுப்பிவிடும். இதில் ஜி.பி.எஸ். வசதி இணைக்கப்பட்டுள்ளதால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதை இயக்கலாம். கூடவே சென்று நேரடியாக இயக்க வேண்டியதில்லை” என்றார் மூன்றாமாண்டு சிவில் இன்ஜினீயரிங் மாணவரான யாஷ் படேல்.

26CH_Robot1வேலைக்கு வேட்டுவைக்காது

‘ரயில் விபத்தைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் கைகொடுக்கும் உங்களுடைய ரோபோட் பராமரிப்புப் பணியாளர்களின் வேலையைப் பறித்துவிடாதா?’ என்று கேட்டால், “தானியங்கியாக ஆர்டிமிஸ் இருந்தாலும் இது பிரச்சினை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இதன் மூலமாக நெடுந்தூரம் நடக்க வேண்டிய வேலைப் பளு குறையும்.

மற்றபடி சீர் செய்யும் பணிகளை ரயில்வே ஊழியர்கள்தாம் செய்ய வேண்டும் என்பதால் அவர்களுடைய வேலைக்கு வேட்டுவைக்காது. அதுமட்டுமல்லாமல் ரூ.20 ஆயிரத்திலேயே இதைத் தயாரிக்க முடியும் என்பதால் நிச்சயம் அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் ஒத்துவரும்” என்றார் இந்தக் கூட்டணியின் ஒரே சென்னை மாணவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் மூன்றாமாண்டு படிக்கும் அக்ஷய்.

சோதனை முயற்சிகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டதன் மூலமாகச் சமீபத்தில் நடைபெற்ற ‘இண்டர்-ஐ.ஐ.டி. மீட் 2018’-ல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ‘ஆர்டிமிஸ்’ ரோபோட். கூடிய விரைவில் இந்திய ரயில்வே துறையும் இவர்களுடைய கண்டுபிடிப்பை அங்கீகரித்துப் பயன்படுத்த முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் அலட்டிக்கொள்ளாத ‘அர்டிமிஸ்’ ரோபோட் ராஜாக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்