டெல்லி கணேஷ்: தன்னைத் தானே வெற்றிகொண்டவர்! | அஞ்சலி

By ஆர்.சி.ஜெயந்தன்

நண்பனோ, எதிரியோ, முகமறிந்த உறவுகளோ, முன்பின் அறிந்திராத முகங்களோ, விதவிதமான மனிதர் களோடு வாழ்வதும் கால ஓட்டத்தில் பலரை மறந்து நகர்வதும்தான் வாழ்க்கை. இப்படி நம் ரத்த உறவுகளையும் மறந்துபோன சக மனிதர்களையும் தன் உடல்மொழியால், பேச்சு மொழியால் உயிரூட்டி, நமக்கு நினைவூட்டும் ஆற்றல் கொண்ட பெரும் கலைஞர் டெல்லி கணேஷ். அகத்தின் உணர்வுகளைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் கண்களை, (அவை அவருக்கு மிகச் சிறியதாக அமைந்தபோதும்) தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த முக்கியக் கருவியாகப் பயன்படுத்தி யவர்.

அவர் சிரித்தால், கண்களோடு மொத்த முகத்திலும் அவரது அகத்தின் அழகு பரவி நிற்கும். திரையில் அவர் மூட்டும் சிரிப்பின் மின்னூட்டம் நமக்குச் சட்டெனப் பரவும். அவர் அழுதால் நம் கண்களும் உடையும். கோபப்பட்டால் நம்மைப் பதற்றம் தொற்றும். கதாபாத்திர நடிப்பில், ஒவ்வொரு உணர்வையும் பார்வை யாளரை நொடியில் உணர வைப்பதில் ஆற்றல் குறையாதவர் மட்டுமல்ல; எந்தவொரு கதாபாத்திரத்தின் உடல் மொழியையும் யாரும் பிரதியெடுக்க முடியாத தனித்துவ நுணுக்கத்துடன் வெளிப்படுத்தி விடுவார்.

மாஸ் படங்களில் முதன்மை நடிகர்களாகத் தொழிற்படும் ஹீரோ, ஹீரோயின்கள் மட்டும்தான் ரசிகர் களுக்கு நெருக்கமானவர்கள் என்கிற ஒரு மாயை இருந்தது. அதைத் தகர்த்த பன்முக கலைஞர்களில் டெல்லி கணேஷ் முன்னோடி. ரசிகர்களின் மனதில் ஒரு வெற்றிபெற்ற கதாபாத்திர மாக ஆழப் பதிந்து விட்டால், அதைத் தனது மற்றொரு கதாபாத்திரத்தால் மறக்கச் செய்து விடும் நடிப்பாற்றல் டெல்லி கணேஷுக்கு மட்டுமே உரியது. அந்த வகையில் படத்துக்குப் படம், தன்னைத் தானே முந்திச் சென்று வெற்றிகொள்வதில் அவருக்கு நிகர் அவர் மட்டும்தான்.

ஒரு படத்தின் காட்சிகளை ‘பிரேக் டவுன்’ முறையில் முன்பின் னாக எவ்வளவு வேண்டுமானாலும் கலைத்துப் போட்டுப் படப்பிடிப்பு நடத்துவார்கள். முன்பு எடுக்கப்பட்ட காட்சியின் தொடர்ச்சியைப் பின்னர் படம் பிடிப்பது உண்டு. அதுபோன்ற தருணங்களில் நடிகர், தனது கதாபாத்திர உணர்ச்சியின் தொடர்ச்சியில் பின்பற்றவேண்டிய அளவு மிக முக்கியமானது.

அதை நினைவில் வைத்திருந்து துளியும் பிசகாமல் நடிப்பில் கொண்டு வரும் ‘எமோஷனல் கன்டினியூட்டி’ எல்லா நடிகர்களுக்கும் வசப்பட்டுவிடு வதில்லை. அதில் விற்பன்னர் என்று கமல் வாயால் பாராட்டப் பட்ட நம் டெல்லி, ஒரே டேக்கில் ஓகே செய்துவிடும் வல்லமைமிக்கவர். காட்சியில் உடன் நடிப்பவர்கள் எவ்வளவு முறை சொதப்பினாலும் அவ்வளவு ரீ டேக்கிலும் அமைதியாக இருந்து அசரடிப்பார்.

‘பெண்மணி அவள் கண்மணி

உண்மையில் ‘நெல்லை கணேஷ்’ ஆக இருந்தவர், ‘டெல்லி கணேஷ்’ ஆக அடையாளம் பெற்ற கதை, பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது. இயல்பை மீறாத ஒரு ஃபீல் குட் சினிமா கொண்டிருக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கு இணையானது அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கலை வாழ்க்கையும். அதை அவர் ‘பிள்ளை யார் சுழி’ என்கிற தலைப்பில் தனது சுயசரிதையாக எழுதியிருக்கிறார்.

சுய எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் நெல்லை பேச்சு வழக்கும் பாலக்காடு மலையாளத் தமிழ் வழக்கும் சங்கமிக்கும் அட்டகாசமான மொழி நடையால் தாமொரு எழுத்தாளரும் என்பதை நிறுவியிருக்கிறார். அவரது வாழ்வின் முதல் பாதியைப் பேசும் அவரது எழுத்தைக் கிழக்குப் பதிப்பகத் தார் 250 பக்க நூலாகப் பதிப்பித்துள்ளனர்.

நெல்லையின் நல் விளைச்சல்: திருநெல்வேலி எவ்வளவோ சிறந்த கலைஞர்களைக் கலை, இலக்கியம், அரசியல் என அத்தனை துறைகளுக்கும் கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷும் நெல்லையின் நல் விளைச்சல்தான். 1944 ஆகஸ்ட் 1ஆம் நாள், மகாதேவன் - பிச்சு தம்பதி யின் மகனாக, தனது தாயாரின் சொந்த ஊரான கீழப்பாவூரில் பிறந்தவர். தந்தையின் சொந்த ஊரான வல்லநாடு எனும் சிறிய கிராமத்தில், நடுத்தர வர்க்கச் சூழலில், தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்தவர்.

தந்தையார் பள்ளி ஆசிரியர். டெல்லி கணேஷ் மூன்று வயது சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்தவர். தாயின் இழப்பை உணர முடியாத பால்யம் கடந்து, 9ஆம் வகுப்பு பள்ளி மாணவனாக இருந்தபோது, வீரபாகு, சிவராமகிருஷ்ணன் என்கிற இரண்டு சக மாணவ நண்பர்களின் அகால மரணம் அவரை நிறையவே பாதித்திருக்கிறது.

குத்தகை விளைச்சலாக வந்து சேரும் நெல் மூட்டைகளை வீட்டின் மொட்டை மாடியில் உலர்த்துவார் தாத்தா. அவருக்குத் தெரியாமல் அதில் கொஞ்சம் அள்ளிக்கொண்டுபோய் நண்பனிடம் கொடுக்க, நண்பன் அதைச் சந்தையில் விற்றுவிட்டு எட்டணா கொண்டு வருவான். அந்தக் காசில் அவனுடன் உள்ளூர் ஸ்ரீ குமரன் டாக்கீஸில் திருட்டுத்தனமாகச் சினிமா பார்க்கத் தொடங்கியபோது டெல்லி கணேஷுக்கு 13 வயது. ஒரு வழியாக எஸ்.எஸ்.எல்.சியில் தேறி மதுரைக்கு வந்து, மூன்று சித்தப்பாக்களின் தயவில் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றினார்.

‘அவ்வை சண்முகி’

அதன்பிறகு, அங்கிருந்தே இந்திய விமானப் படைக்குத் தேர்வாகி 10 ஆண்டுகள் தேச சேவையில் ஈடுபட்டார். விமானப் படையில் இருந்த போது தீபம் நா.பார்த்தசாரதியின் படைப்புகளை வாசித்து, அவரைத் தன்னுடைய ஞான குருவாகவே வரித்துக்கொண்டார் டெல்லி கணேஷ். இந்தியா - பாகிஸ்தான் போரில் கை, கால் இழந்தும், படுகாயமடைந்தும் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர்களின் மனநலனை முன்னேற்றும் விதமாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அப்போது நடத்தப் பட்ட 30 நிமிடத் தமிழ் நாடகத்தில் முதன் முதலாக ஒரு சிறு வேடம் ஏற்று நடித்ததுதான் ‘கார்ப்போரல் கணேஷ்’ என்கிற விமானப் படை வீரரின் முதல் நடிப்பு அனுபவம். அது மெல்ல மெல்ல வேகமெடுத்து, தொழில்முறை நாடக மேடைக்கு அவரை அழைத்துக்கொண்டு வந்தது. டெல்லி வாழ் தமிழர்களால் நடத்தப்பட்ட தட்சிண பாரத நாடக சபாவின் நாடகங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிப்போனார்.

வழிகாட்டிய விசுவும் கேபியும்: டெல்லியில் நடத்தப் பட்ட ‘துக்ளக்’ சோவின் ‘மனம் ஒரு குரங்கு’, மேஜர் சுந்தர் ராஜனின் ‘தீர்ப்பு’, இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்து, வெகு சீக்கிரமே புகழடைந்தார். அத்தை மகளைக் கரம் பிடித்த பின்னர் சென்னையில் குடியேறி சென்னை கணேஷாக மாறிப்போனவரின் நாடக வாழ்க் கையில் ‘காத்தாடி’ ராமமூர்த்தியின் அரவணைப்பு அவரை சென்னையின் சபா நாடகங்களில் பிஸியாக்கியது.

அதன் தொடர்ச்சியாக விசுவின் ‘டௌரி கல்யாண வைபோகமே’ நாடகம் பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. 100 நாள்களைக் கடந்து மேடையேறிய அந்த நாடகம் அவரை தூர்தர்ஷன் கலைஞராகவும் உயர்த்தியது. இதன்பின்னர் விசு எழுதி, இயக்கிய ‘பட்டினப் பிரவேசம்’ நாடகத்தை கே.பாலசந்தர் பார்த்து அதைப் படமாக்க முன்வந்தார்.

அப்போது, அந்த நாடகத்தில் மூத்த மகன் முருகனாக நடித்துவரும் டெல்லி கணேஷையே திரையிலும் அறிமுகம் செய்யும்படி வேண்டுகோள் வைத்தார் விசு. மீண்டும் ஒருமுறை நாடகம் பார்த்தபின் விசுவின் கோரிக்கையை ஏற்ற கே.பி., நெல்லையிலிருந்து மதுரை, டெல்லி, சென்னை எனப் பயணப்பட்ட கணேஷுக்கு ‘டெல்லி கணேஷ்’ எனப் பெயர் சூட்டி அறிமுகம் செய்தார்.

1977இல் வெளியான ‘பட்டினப் பிரவேசம்’ வழியாகத் திரைப் பிரவேசம் செய்த டெல்லி கணேஷ், அறிமுகப் படத்திலேயே தனது கலைப் பசியைக் காட்டினார். 1981இல் வெளியான ‘எங்கம்மா மகாராணி’ படத்தில் நாயகன் ஆனார். அதன்பிறகு அவர் நடித்த 500க்கும் அதிகமான படங்களில் ஏற்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் அவதாரம். அத்தனையிலும் அதுவாக கரைந்துபோன இயல்பின் தரம். காலம் இவரைக் களவாடிச் சென்றிருக்கலாம்; வரலாறு இவரை வரித்துக்கொண்டு வரும் தலைமுறைக்கு விரித்து வைக்கும்.

படங்கள் உதவி: ஞானம்

- jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்