ஸ்விஸ் எனும் சொர்க்கம் 20: தூண் இல்லாத பாலம்!

By ஜி.எஸ்.எஸ்

சுவிட்சர்லாந்தில் நாங்கள் தங்கியிருந்த நகரம் லொசான் (Lausanne) என்று குறிப்பிட்டிருந்தோம் இல்லையா? கிட்டத்தட்ட அதே பெயர் கொண்ட வேறோர் இடத்துக்குப் புறப்பட்டோம். லூசர்ன் (Lucerne) என்கிற பெயர் கொண்ட சுவிட்சர்லாந்து கான்டனின் அதே பெயர் கொண்ட தலைநகர் இது. இதன் மக்கள் தொகை ஒரு லட்சம்கூட இல்லை. (மக்கள் தொகையைப் பார்த்து இவ்வளவு குறைவா என்று வியப்பதும், பொருள்களின் விலையைப் பார்த்து இவ்வளவு அதிகமா என்று மலைப்பதும் ஸ்விஸ் பயணத்தில் அடிக்கடி நடக்கிறதுதான்.)

ரியஸ் (Reuss) நதியின் காரணமாக உருவான அற்புதமான லூஸர்ன் ஏரி இங்கு காணப்படுகிறது. ஏரியில் உலகப் புகழ்பெற்ற ஒரு மரப்பாலம் இருக்கிறது. இது லூஸர்ன் நகரைக் கிட்டத்தட்ட குறுக்குவாட்டில் பிரிக்கிறது. இது லூஸர்ன் நகரின் பழைய பகுதியையும் நவீனப் பகுதியையும் இணைக்கிறது. இந்தப் பாலத்தின் இப்போதைய நீளம் 205 மீட்டர். அருகில் உள்ள தூய பீட்டர் தேவாலயத்தின் ஜெர்மன் பெயரைத் தாங்கி ’கபெல்ப்ருக்’ என்று இந்தப் பாலம் அழைக்கப்படுகிறது.

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஓவியங்கள் இந்த மரப் பாலத்தின் உள்ளே காணப்படுகின்றன. 1993இல் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த ஓவியங்களில் பலவும் (கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு) தீக்கிரையாகி விட்டன என்பது சோகம். இந்த ஓவியங்கள் சுவிட்சர்லாந்து சரித்திரத்தை விளக்குவதாக உள்ளன. உலகின் மிகப் பழைய 'ட்ரஸ்’ பாலங்களில் ஒன்று இது. (அதாவது எந்தத் தூணும் இதைத் தாங்கி நிற்பதில்லை.) அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் பாலத்துக்கு ஓர் அதிகப்படி அழகு கிடைக்கிறது. பாலத்தின் உள்பகுதியில் ஒரு கடை உள்ளது. பொம்மைகள், பசுக்கள், அவற்றின் கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

டிட்லிஸ் செல்பவர்கள் இங்கும் சென்று வருவது வழக்கம். ஏனென்றால் இரண்டும் சற்று அருகாமையில் அமைந்துள்ளன.
​​லூசர்ன் நகரில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றைக் கண்டு ரசிக்க நேரம் இல்லாதவர்கள்கூட அங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 45 நிமிட ரயில் பயணத்தைத் தவறவிடக் கூடாது. (நம்மைப் பொருத்தவரை அது ’ட்ராம்’ என்றாலும் இதை அங்கு ரயில் என்கிறார்கள்.) இது இடையில் எங்கும் நிற்பதில்லை. மூன்று கோச்கள் கொண்ட இந்த ரயில் பயணத்தில் ‘ஆடியோ கைடு’ உண்டு. ‘ஹெட்ஃபோ’னைக் காதுகளில் மாட்டிக் கொண்டால் ரயில் எந்த இடத்தைக் கடக்கிறதோ அந்த இடம் குறித்துத் தகவல்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

இந்த ரயிலை அடைய ​லூசர்ன் ஸ்டேஷனிலிருந்து பத்து நிமிட நடை. மரப்பாலத்திலிருந்து ஐந்து நிமிட நடை. அவ்வளவுதான். டிக்கெட்டை ரயில் ஓட்டுநரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இது கிளம்பி அதே இடத்துக்கு மீண்டும் வருகிறது. பதினைந்து ஸ்விஸ் ஃப்ராங்க் கட்டணம். லூசர்ன் நகரில் பார்க்க வேண்டிய மற்றொன்று கிளேசியர் மியூசியம். சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்பில் இயல்பாக அமைந்துள்ளவை பனிக் கட்டிகள். இவை காலப்போக்கில் உருகிக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அதிகமாகவே உருக ஆரம்பித்துவிட்டன. இந்த அருங்காட்சியகத்தின் தனித்துவத்தை விரைவிலேயே அறிய முடிந்தது.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 19: சுத்திகரிக்கப்படாத கலை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்