அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் | விஞ்ஞானிகள் - 8

By ஸ்ரீதேவி கண்ணன்

மருத்துவத்தில் பென்சிலின் என்கிற எதிர் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், உலகின் மக்கள்தொகை பாதியாக இருந்திருக்கும். 1881, ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்தில் பிறந்தார் அலெக்சாண்டர் ஃப்ளெமிங். பாலிடெக்னிக் முடித்ததும் கப்பல் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தார். அதன் பிறகு மருத்துவராகும் கனவோடு லண்டனில் உள்ள செயின்ட் மேரிஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

தடுப்பூசி சிகிச்சையின் முன்னோடி சர் ஆம்ரைட் என்கிற பேராசிரியரிடம் படித்தார். படிப்பு முடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்ந்தார். ஆசிரியரைப் போலவே தானும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்தார். நுண்ணுயிரியல் வல்லுநர் ஆனார்.

தான் படித்த செயின்ட் மேரிஸ் பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிரியல் துறை விரிவுரையாளராக இருந்தார். முதல் உலகப் போர் தொடங்கியதும் ராணுவ மருத்துவக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். போரில் லட்சக்கணக்கான வீரர்கள் தாங்கள் பட்ட காயங்களால் இறப்பதைக் கண்டார். கிருமிநாசினிகளே காயத்தை மோசமாக்கி வீரர்களைக் கொல்வதாக நினைத்தார்.

போர் முடிந்து மீண்டும் அதே செயின்ட் மேரிஸுக்குத் திரும்பினார். உயிர்களைக் காக்கும் எதிர் நுண்ணுயிருக்கான ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார். 1921இல் திசுக்களிலும் அதன் சுரப்பிகளிலும் ஒரு முக்கியமான பாக்டீரியோலிடிக் பொருள் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு ’லைசோசைம்’ என்று பெயரிட்டார். பென்சிலினுக்கு முன்பாக உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு நுண்ணுயிரி இருப்பதைக் கண்டறிந்தார்.

1928 இல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸில் பணிபுரிந்தபோது ஆய்வகத்தைப் பூட்டிவிட்டு விடுமுறைக்குச் சென்றுவிட்டார். திரும்பி ​​​​வந்து பார்த்தபோது ஸ்டாஃபிலோகோகஸ் தட்டில் பூஞ்சை உருவாகியிருப்பதைக் கவனித்தார். அது தன்னைச் சுற்றி பாக்டீரியா இல்லாத வட்டத்தை உருவாக்கி இருப்பதையும் கண்டார். ஸ்ட்ரெப்டோகாக்கஸ், மெனிங்கோகோகஸ், டிப்தீரியா பேசிலஸ் போன்ற பலவிதமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் கொண்டதாக அந்தப் பூஞ்சை இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

ஃப்ளெமிங் தன் உதவியாளர்கள் மூலம் தூய பென்சிலினைப் பிரித்தெடுக்கும் கடினமான பணியைச் செய்தார். பென்சிலினைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதில் சிரமங்கள் இருந்தன. கிட்டத்தட்ட பென்சிலின் மறந்து போன நிலையில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இரண்டாவது சர்வதேச நுண்ணுயிரியல் மாநாடு நடந்தது. அதில் பென்சிலினின் முக்கியத்துவம் குறித்து ஃப்ளெமிங் பேசினார்.

பென்சிலின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த பின்னர் அதன் அமிலத்தன்மையை அகற்றிப் பிரித்தெடுக்கும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது. பென்சிலினை முதலில் விலங்குகள் மீது செலுத்திப் பரிசோதனை செய்தனர். பென்சிலின் உற்பத்தியைப் பெருக்கி இரண்டாம் உலகப் போரில் பல லட்சம் வீரர்களைக் காப்பாற்றினர். அதுவரை அறுவை சிகிச்சைக்குப் பயந்தவர்கள், அதன் பிறகு அச்சமின்றி அறுவை சிகிச்சைகளைச் செய்து உயிர்களைக் காப்பாற்றினர்.

எதிர் நுண்ணுயிரி இன்று பல்வேறு மாற்றுரு எடுத்திருந்தாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படை அன்று ஃப்ளெமிங் கண்டறிந்த பென்சிலின்.

பென்சிலியத்துக்குக் காப்புரிமை பெற்று, பணக்காரர் ஆகவில்லை ஃபிளெமிங். அன்றும் இன்றும் என்றும் கோடிக் கணக்கான மக்கள் பென்சிலியம் என்கிற அருமருந்தால் உயிர்பிழைக்கிறார்கள். ஃப்ளெமிங் மனித குலத்திற்குச் செய்த மகத்தான தொண்டிற்காக 1945இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்னும் இருவருடன் இவருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. உலகின் பெரும்பாலான மருத்துவ, அறிவியல் சங்கங்களின் கெளரவ உறுப்பினராக இருந்த ஃப்ளெமிங் 1955, 11 மார்ச் அன்று, 73 வயதில் மறைந்தார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

முந்தைய அத்தியாயம் > மேரி கியூரி | விஞ்ஞானிகள் - 7

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

15 mins ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்