செயல்களை ரகசியமாக்குவோம் | சக்ஸஸ் ஃபார்முலா - 25

By நஸீமா ரஸாக்

இன்று மாலை சச்சுவுக்கு அவர் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவர் எப்போது அழைத்தாலும் சச்சுவின் முகம் பிரகாசமாகிவிடும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தது.

“சரிம்மா… ஒகே சொன்னேன்ல, விடுங்க. இப்ப அப்பாகிட்ட போன் கொடுக்காதீங்க. நாளைக்குப் பேசறேன்” என்று அழைப்பைத் துண்டித்தார்.

“என்ன ஆச்சு சச்சு?”

“எங்க வீட்ல ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் பில்டப் கொடுப்பாங்க. நல்லா திட்டு கிடச்சுது.”

“ஏன்?”
“பேஸ்புக்ல, ’நாளைக்கு என் வாழ்க்கையின் முக்கிய நாள். அமெரிக்கா எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கும்’னு போஸ்ட் பண்ணேன். அதை எங்க அப்பா பார்த்துட்டு, கத்தி இருக்கார். இன்னும் ஒண்ணும் நல்லது நடக்கல அதுக்குள்ளே எதுக்கு இந்த வீண் போஸ்ட்னு நல்லா திட்டி இருக்கார்.”

“சரியாதான் சொல்லிருக்கார்.”

“கண்ணுபடும்னு எல்லாம் நீயுமா நம்பறா?”

“அது இல்ல சச்சு. மேலோட்டமா எல்லாத்தையும் பார்க்காத. சொல்றதைக் கேள். அப்புறம் நீயே யோசி.”

நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில், தகவல் பகிர்வு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அனைத்தையும் பகிர்வது அவசியமா என்று நாம் யோசிப்பதில்லை. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போதே அதைப் பெரிதாகப் பேசிவிடுகிறோம்.
உளவியல் ரீதியாக இலக்குகளை, கனவுகளை நாம் பகிரும்போது, நமது மூளை அதை ஓரளவு சாதித்ததாக எடுத்துக் கொள்கிறது. இது நம் உந்துதலைக் குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2009இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்கள் இலக்குகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், அதை அடைவதற்கான முயற்சியில் ஆர்வம் செலுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது.

அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். திருவள்ளுவர்கூட இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு நடந்தாலே பாதிக் கிணற்றைத் தாண்டி விடலாம்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

அதாவது, ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை வெளிப்படுத்தாமலிருப்பதே நல்லது. அதுதான் செயலாற்றும் உறுதியைக் கொடுக்கும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அந்தச் செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

லைக்குகளுக்காகவும் அப்போதைய மகிழ்ச்சிக்காகவும் இலக்குகளை வெளியே சொல்லும்போது, நாமே நம் காரியங்களைச் செய்து முடிப்பதற்குத் தடையாகிப் போகிறோம்.

அதுமட்டுமன்றி சில உளவியல் தாக்கங்களும் ஏற்படுகின்ற. 2018இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தொடர்ந்து சமூக ஊடகங்களில் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து வரும் மக்களிடம் பதற்றம், மன அழுத்தம், பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பேச இடம் இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. சமூக ஊடகங்களில் உங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் பகிர்வதைவிட உங்கள் வெற்றியைப் பகிர்ந்து மகிழுங்கள். அதுவரை சத்தமில்லாமல் உங்கள் செயலில் கவனம் செலுத்துங்கள்.

சுலபமாகத் தெரியும் எதுவும் எளிதில் செய்யக் கூடியதாக இருப்பதில்லை.

பத்து வழிகளை விழிப்புணர்வோடு முயற்சி செய்து பாருங்கள்.

1. 'மெளன விதி’யைப் பின்பற்றுங்கள். அதாவது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன முன்னேற்றங்களையும் வெளியே சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வெற்றி கிடைக்கும் போது மட்டுமே அதைக் கொண்டாடுங்கள்; பகிருங்கள்.

2. நம்பகமான ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது குடும்பத்தாராகவோ நெருங்கிய நண்பர்களாகவோ இருக்கட்டும். அவர்களிடம் மட்டுமே பகிர்தல் இருக்கட்டும்.

3. ரகசிய நாள்குறிப்பை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சின்ன சின்ன செயல்களையும் பதிவு செய்து வருவது, நீங்கள் வெகு தூரம் பயணிக்க உதவும். அதுமட்டுமன்றி வெற்றி பெற்ற பின் எழுதியவற்றைப் பார்க்கும் போது , உங்கள் உழைப்பு, திட்டம் பற்றி ஒரு புரிதல் ஏற்படும்.

4. சலசலப்பில்லாமல் இருப்பது உங்கள் வெற்றிக்கு மிக அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

5. சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல மற்றவர்களிடமும் தேவைக்கு அதிகமாகப் பகிரும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களது சிறிய வட்டத்தில் மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6. தேவையின் அடிப்படையில் தகவல்களை அவசியமானவர்களுக்குச் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

7. சிலர் நமக்கு முக்கியமான ஆனால் அவர்களுக்குத் தேவையற்ற விஷயங்களைப் பேசிப் பேசி பெற்றுக் கொள்வார்கள். அவர்களிடம் திட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்.

8. உணர்வுகளைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். அதீத உற்சாகம் ஆர்வக்கோளாறாக மாறி உங்கள் செயல்களைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. திட்டங்களைப் பகிராமல் ஒரு செயலைச் செய்யும் போது, தவறு ஏற்பட்டாலும் அதிலிருந்து கற்று மீண்டும் செயலில் இறங்கும் மனம் நமக்கு வாய்க்கும்.

10. ஒரு நாள் மட்டும் பிரபலமாக இருப்பது முக்கியமல்ல, வாழ்நாள் சாதனையாளராவது இருப்பது உங்கள் இலக்காக இருக்கட்டும்.

எனவே நமது கனவுகளை, செயல்களை, திட்டங்களை அமைதியாகப் பாதுகாத்து, விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியே உங்கள் வந்து சேரும்!

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

முந்தைய அத்தியாயம்: சரியான எண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள் | சக்ஸஸ் ஃபார்முலா - 24

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்