எது எனக்கான புத்தகம்? | தேன் மிட்டாய் 26

By மருதன்

எனக்குப் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசை. பாடப் புத்தகம் கடந்து இதுவரை எதையும் படித்ததில்லை. நான் எங்கே தொடங்க வேண்டும்? எந்த மாதிரியான புத்தகம் எனக்கு ஏற்றதாக இருக்கும்? கதை படிக்கலாமா அல்லது நல்ல கருத்துகளோடு இருக்கும் பெரிய, பெரிய புத்தகங்களைத்தான் படிக்க வேண்டுமா? அவற்றை எல்லாம் படித்தால் எனக்குப் புரியுமா? பெரிய, பெரிய புத்தகங்களை எல்லாம் பார்த்தால் பயமாக இருக்கிறது.

எனக்குப் பெரிதாக அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம் எல்லாம் தெரியாதே. என்ன செய்யலாம் பிரான்சிஸ் பேகன்? கொஞ்சம் வழிகாட்டுங்களேன். பள்ளி மாணவர்கள் தொடங்கி பலரும் கேட்கும் இந்தக் கேள்விகளுக்குப் புன்னகையோடு நான் அளிக்கும் ஒரே பதில். வாழ்த்துகள்!

உங்கள் தயக்கத்தையும் அச்சத்தையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு முதலில் உங்கள் கையைக் கொடுங்கள். இனிமையாகவும் சுலபமாகவும் பொழுதைக் கழிப்பதற்கு இந்த உலகில் பல்லாயிரம் வழிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டுப் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அல்லவா, அதற்காகவே உங்களை ஒரு கணமாவது அணைத்துக்கொள்ள வேண்டும்.

புத்தகம் பற்றி நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை என்ன தெரியுமா? எப்படி ஒரு மனிதர்போல் இன்னொருவர் இருக்க முடியாதோ அதேபோல் ஒரு புத்தகம்போல் இன்னொன்று இருக்க முடியாது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகை. எனக்குப் பிடித்த ஒரு நூல் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. எல்லா மாணவர்களுக்கும் பிடிக்கும் ஒரு நூல், எல்லாப் பெண்களும் படிக்க வேண்டிய ஒரு நூல், எல்லாரையும் கவரும் ஒரு கதை என்று எதுவும் இல்லை.

நீங்கள் யார், உங்கள் பின்னணி என்ன, உங்கள் விருப்பு வெறுப்புகள் என்ன, நீங்கள் உலகை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதெல்லாம் தெரியாமல் உங்களுக்கு ஒரு நூலைப் பரிந்துரைப்பது எளிதல்ல. இவை எல்லாமே தெரிந்தாலும் உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல நூலை என்னால் உறுதியாகக் கண்டறிந்து சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

உங்கள் காற்றை நீங்களே சுவாசிப்பதுபோல், உங்கள் இதயம் உங்களுக்காகவே துடிப்பதுபோல், உங்கள் கனவுகள் உங்களுக்கு மட்டுமே தோன்றுவதுபோல் உங்களுக்கான நூல்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன. அவை இந்த உலகில் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கின்றன.

நீங்கள் வந்து தீண்ட வேண்டும், நீங்கள் வந்து முகர்ந்து பார்க்க வேண்டும், நீங்கள் எடுத்து மடியில் போட்டுக்கொள்ள வேண்டும், நீங்கள் உயிருக்கும் உயிராக நேசிக்க வேண்டும் என்று அந்தப் புத்தகங்கள் விரும்பிக் காத்திருக்கின்றன. உங்கள் புத்தகங்களை அடைவதற்கான பயணத்தை ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து நீங்கள்தான் ஆரம்பிக்க வேண்டும்.

புத்தகங்கள் எப்படிப்பட்டவை? சில புத்தகங்கள் உங்களை நகர விடாது. எடுத்துக்காட்டுக்கு, அடுத்து என்ன, அடுத்து என்ன எனப் பரபரப்போடு பாய்ந்து ஓடும் ஒரு துப்பறியும் கதையை முடிக்கும்வரை உங்களுக்கு நிம்மதி இல்லை. ஆனால், முடித்த பிறகு, ‘ஓ... இவ்வளவுதானா’ என்று அதிலிருந்து விலக ஆரம்பித்துவிடுவீர்கள். சிறிது காலம் போனால் அப்படி ஒரு கதையைப் படித்த நினைவேகூட உங்களுக்கு இருக்காது.

ஒருகாலத்தில் என்னை உறங்க விடாமல், சாப்பிட விடாமல், வெளியே போக விடாமல் தடுத்து நிறுத்திய கதையை எப்படி இப்போது மறந்தேன் என்று உங்கள் மனம் துப்பறிய ஆரம்பித்துவிடும். இதுவரை நீங்கள் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை என்றால் விறுவிறுப்பான கதைகளில் இருந்து தொடங்குங்கள்.

சில புத்தகங்கள் நீங்கள் எவ்வளவு நகர்த்தினாலும் நகராது. அவற்றைக் கண்டு அஞ்சாதீர்கள். ஒரு நல்ல கதை ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும் வேகவேகமாகப் படித்துவிட முடியும். கதை அல்லாத எழுத்துகளை அதுபோல் படித்துவிட முடியாது. உங்களுக்கு அறிவியலில் பயிற்சி இல்லை என்றால் டார்வினை உங்களால் ஓரளவுக்கு மேல் நெருங்கிச்செல்ல முடியாது. தத்துவத்தில் பயிற்சி இல்லாதவர்களுக்கு பிளேட்டோ ஒரு பூதமாகவே தெரிவார். பரவாயில்லை தெரியட்டும்.

ஒரு புத்தகம் ஏற்படுத்தும் அச்சத்தை இன்னொரு புத்தகத்தைக் கொண்டுதான் தீர்க்க முடியும், முள்ளை முள்ளால் எடுப்பதுபோல். ஆனா ஆவன்னாவில் இருந்து தொடங்கினால் எதையும் முறையாகக் கற்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை. புதிய மொழி முதல் புதிய துறை வரை எதையும் சிறிது சிறிதாகக் கற்க முடியும்.

பிளேட்டோவை நேரடியாக வாசிக்கத் தொடங்குவதற்குப் பதில் அவரை எளிமையாக அறிமுகம் செய்து வைக்கும் சில அடிப்படை நூல்களை வாசித்துவிட்டு, அவரை நெருங்கினால் அதே பிளேட்டோ உங்கள் நண்பராக மாறி இருப்பதைக் காண்பீர்கள். டார்வினின் கோட்பாடுகளுக்குள் செல்வற்கு முன்பு அவர் எவ்வளவு அசாதாரணமான ஒரு மனிதர் என்பதைக் கதைபோல் வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு மனிதராக அவரை உள்வாங்கிக் கொண்ட பிறகு அவருடைய எண்ணங்களுக்குள் செல்லுங்கள். புகை மறைந்து காட்சிகள் புலப்படத் தொடங்கும்.

சில புத்தகங்களைத் தினமும் சில பக்கங்கள் படிக்க வேண்டும். சில புத்தகங்களை ஒரே மூச்சில் படித்துவிடலாம். பல ஆண்டுகளாக முயன்று படிக்க வேண்டிய நூல்களும் உள்ளன. சிலவற்றை ஒருமுறை படித்தால் போதும். சிலவற்றை மீண்டும், மீண்டும் நாட வேண்டும்.

சில புத்தகங்கள் நீங்கள் எங்கே சென்றாலும் ‘நானும் நானும்’ என்று அடம்பிடிக்கும். சில புத்தகங்கள் வரமாட்டேன் போ என்று முரண்டுபிடிக்கும். பின்னாடியே போய் கொஞ்ச வேண்டியிருக்கும். சில புத்தகங்கள் பூனைக்குட்டிபோல் மிருதுவாக இருக்கும். சில ஜல்லிக்கட்டுக் காளைபோல் சீறும். மெல்லமெல்லப் பழக்க வேண்டும்.

சில புத்தகங்களை முகர்ந்தால் போதும். சில புத்தகங்களைச் சுவைத்தால் போதும். சில புத்தகங்களை முழுக்கப் படிக்க வேண்டும். சிலவற்றைப் பகுதி பகுதியாக வாசித்தால் போதும். சில புத்தகங்களை நினைவில் தேக்கிவைத்துப் பிடிக்க வேண்டும். சிலவற்றை வாசித்து மறந்தால் தவறில்லை.

சில புத்தகங்களை உண்டு செரிக்க வேண்டும். சிலவற்றைப் படிக்காமல் விட்டாலும் தவறில்லை. எப்படி உலகிலுள்ள எல்லா இடங்களுக்கும் ஒருவரால் செல்ல முடியாதோ, எல்லாக் கனிகளையும் புசிக்க முடியாதோ, எவ்வளவு தாகம் வந்தாலும் எல்லா நதிகளையும் பருகித் தீர்க்க முடியாதோ அதுபோல் எல்லாப் புத்தகங்களையும் படிக்க இயலாது.

ஏதேனும் ஒன்றில் இருந்து ஆரம்பியுங்கள். உங்களுக்கான நதியை அடையலாம். உங்களுக்கான கனியைச் சுவைக்கலாம். உங்களுக்கான உலகை உருவாக்கிக் கொண்டு அதில் வாழலாம்!

யார் அதிகம் கேள்வி கேட்கிறாரோ அவரே அதிகம் கற்றுக்கொள்கிறார். - பிரான்சிஸ் பேகன், புகழ்பெற்ற தத்துவஞானி, எழுத்தாளர், அறிவியலாளர்.

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்