ஸ்விஸ் எனும் சொர்க்கம் 15: அசத்தலான நாடளுமன்றக் கட்டிடம்

By ஜி.எஸ்.எஸ்

சுவிட்சர்லாந்தின் தலைநகர் எது எனக் கேட்டால் பலரும் யோசிப்பார்கள். சிலர் ‘ஜெனிவா’ என்றுகூடச் சொல்வார்கள். ஆனால், சுவிட்சர்லாந்தின் தலைநகரம் ‘பெர்ன்.’ மிக அகலமான தெருக்களும் சிவப்பு வண்ண ‘ட்ராம்’களும் அந்த நகருக்குத் தனி அழகைத் தருகின்றன. அதன் நாடாளுமன்றக் கட்டிடம் ’ஃபெடரல் பேலஸ்’ என்றழைக்கப்படுகிறது. ஓர் அரண்மனைக்குரிய கம்பீரம் இதில் முழுமையாக உள்ளது. ஏதோ நேற்று கட்டியதைப் போல பளிச்சென்றும் இருக்கிறது இந்தக் கட்டிடம்.

உண்மையில் இது மூன்று கட்டிடங்களின் இணைப்பு. பச்சை கலந்த சாம்பல் வண்ணக் கற்களில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கான 95 சதவீதக் கற்கள் சுவிட்சர்லாந்திலேயே கண்டெடுக்கப்பட்டவை. இந்தக் கட்டிடத்தை எழுப்ப 73 நிறுவனங்கள் உழைத்திருக்கின்றன. 33 சுவிட்சர்லாந்து கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றக் காவலர்களில் பெரும்பாலானோர் கடுமையானவர்களாக இருந்தனர். நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறாத நாள்களில் மட்டும் பார்வையாளர்களுக்கு உள்ளே அனுமதி உண்டு. ஆனால் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான். இணையத்தின் மூலமே முன்பதிவு செய்ய முடியும். நாடாளுமன்றக் கட்டிடம் ஒரு கலை அருங்காட்சியகம் போல் காட்சியளித்தது. ஆனால் ஒளிப்படம் எடுக்கத் தடை. சிற்பங்கள், மேற்கூரைகளில் ஓவியங்கள், பிரம்மாண்ட சரவிளக்குகள் எனக் கண்களைக் கவர்ந்தன. கைகளில் செங்கோல் போல ஒன்றை வைத்துக்கொண்டு நான்கு உருவங்கள் தென்பட்டன. இவை ஒவ்வொன்றும் சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு தேசிய மொழியின் உருவகங்கள். சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ரோமான்ஷ். இவற்றில் முதல் மூன்றும் சமமான அதிகார மொழிகள்.

நான்கு பிரம்மாண்டமான வளைவு கொண்ட ஜன்னல்கள் மேற்புறக் கூரைக்குக் கீழே உள்ளன. இவற்றின் கண்ணாடிகளில் சுவிட்சர்லாந்தின் நான்கு முக்கியத் தொழில்களின் பிம்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஜன்னலில் ஆடைத் தொழில், வடக்கு ஜன்னலில் வணிகம், போக்குவரத்து, மேற்கு ஜன்னலில் தொழில்கள், தெற்கு ஜன்னலில் விவசாயம், கால்நடைப் பண்ணை.

நாடாளுமன்றத்தைப் பார்த்துவிட்டு, அதற்கு முன்புறம் உள்ள பகுதியில் கீழே செல்லும் பாதையில் நடந்தால் பழைய நகரம் வருகிறது. பார்வைக்கு வெகு அழகாக உள்ள இது ‘யுனெஸ்கோ’ அமைப்பின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து சென்றால், அகலமான ஆக்ரோஷமான ‘டர்கோய்ஸ்’ நதி. இந்த அகலமான, பச்சை நீராகக் காட்சி அளிக்கும் நதிக்கரையோரமாக நடந்து சென்றது ரம்மியமாக இருந்தது. சில பூங்காக்களில் இளைப்பாறலாம்.

மீண்டும் நாடாளுமன்றப் பகுதியை அடைய (நல்ல வேளையாக) செங்குத்தான ‘லிஃப்ட்’ ஒன்று இருந்தது. அடுத்து நாம் சென்றது பிரபலமான விஞ்ஞானி ஒருவர் வசித்த வீடு. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வீடு. அந்த வீடு சிறியதுதான், ஆனால் அது அமைந்துள்ள சாலை மனதை வசீகரிக்கிறது. அவ்வளவு அகலம். நடுநடுவே நீரூற்றுகள். அவற்றைச் சுற்றிலும் பூக்கள் அணிவகுத்தன.

அது பெர்ன் நகரின் முக்கியக் கடைத்தெருவும்கூட. ஆனாலும் கூட்டம் அதிகமில்லை. சாலைகளின் இரு புறமும் கடைகள் இருப்பது போதாது என்று அடித்தளங்களிலும் கடைகள். அதாவது சாலையிலேயே கதவுகள் திறந்திருக்க, படிக்கட்டுகள் வழியாகச் சுரங்கப்பாதை போலக் கீழிறங்க வேண்டும். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 14: எந்த ராணுவத்துக்கும் பங்களிக்காத ‘செர்ன்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்