புத்தகம் வாசிப்பதால் என்ன ஆகப்போகிறது?

By வி.கவிச்சரண்

நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கியதற்குப் பிறகு என்னிடம் 30 ரூபாய் மீதம் இருந்தது. அதில் ஏதாவது வாங்கலாம் எனத் தோன்றியபோது, ஒரு புத்தகத்தை வாங்கினேன். அது பெரியாரைப் பற்றியது.

வாசிப்புப் பயணம்

அந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தேன். அதைப் படித்ததற்குப் பிறகு பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஏன் இந்தச் சமூகத்தில் மேல்சாதி - கீழ்சாதி,தீண்டப்படுபவன் - தீண்டப்படாதவன் ஆகிய பிரிவினைகள் இருக்கின்றன, ஆண் ஆணாதிக்க மனப்பான்மையோடும், பெண் அடங்கிப் போகிறவராகவும் இருக்கிறார்கள்? ஏன் இந்தச் சமூகம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கிறது? ஏன் ஒரு மனிதனது பிறப்பை வைத்து அவனை மதிப்பீடு செய்கிறார்கள் என நிறைய கேள்விகள் எழுந்தன. ஏன் என்கிற அந்தக் கேள்விகள் என் புத்தகப் பயணத்தைத் தொடங்கிவைத்தன. என் கேள்விக்கு விடை தேடுவதற்காகப் பல்வேறு புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.

முதலில் வாசிப்பதற்குக் கடினமாக இருந்தாலும் என் கேள்விகளுக்கான விடைகளை அறியத் தொடர்ந்து வாசித்தேன். ஆரம்பத்தில் இரண்டு புத்தகங்கள் படித்ததற்குப் பிறகு, என்னை நானே ‘அறிவு ஜீவி’ என்று கருதிக்கொண்டேன். இன்னும் சில புத்தகங்களைப் படித்தபோதுதான், நான் வாசித்த புத்தகங்கள் பெரும் பாலைவனத்தில் உள்ள ஒரு மணல்துகளின் அளவே என்பதைப் புரிந்துகொண்டேன்.

இலக்கிய அறிமுகம்

இந்தச் சமூகத்தைப் பற்றி அறிந்துகொள்ள புத்தகங்கள் எனக்கு உதவின. யாரைக் கொண்டாட வேண்டும், எது அரசியல், எதற்கு அரசியல் என்பதெல்லாம் மெல்ல வாசிப்பின்வழி புரிந்தது. எனது தமிழ் ஆசிரியர் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

நான் முதலில் படித்த இலக்கியப் புத்தகம் ‘ஏழு தலைமுறைகள்’ - கறுப்பின மக்களின் வலிகளைக் கூறும் புத்தகம். வெள்ளையர்களின் குரூரத்தால் கறுப்பினம் எப்படிச் சிதைக்கப்பட்டது என்கிற வரலாறு, கதையாகக் கூறப்பட்டுள்ளது. கறுப்பினத்தவர் மீது விழுந்த ஒவ்வொரு கசை அடியும் என் மனதைக் கீறி ரணமாக்கியது.

சாதத் ஹசன் மண்டோவின் ‘திற’ என்கிற கதையில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவாள். தனக்கு நிகழ்ந்த அந்தப் பேரவல நிகழ்வை ‘திற’ என்கிற ஒரு வார்த்தையின் மூலம் அந்தப் பெண் கடத்தியிருப்பார். அதிலிருந்து ‘திற’ என்கிற வார்த்தை, வலிகளைச் சுமந்துகொண்டு வரும் வார்த்தையாக எனக்கு மாறிவிட்டது.

ஜெயமோகனின் ‘நூறு நாற்காலிகள்’ என்கிற கதையில் அடித்தட்டு மக்களில் இருந்து ஒருவன் வேலைக்கு வருகிறான். அவனை அதிகாரத்தன்மை நிறைந்தவர்கள் அடக்கி ஒடுக்கிச் செயலற்றவனாக மாற்றுகிறார்கள். அந்தக் கதை மனித மனத்தின் குரூரத்தையும் மிருகத்தன்மையையும் காட்டியது.

என்ன பயன்?

சரி, இப்படியெல்லாம் புத்தகங்கள் வாசிப்பதால் என்ன ஆகப் போகிறது? இதெல்லாம் படிப்புக்கு உதவுமா என்று ஒருவர் கேட்கலாம். மனித மனங்களையும் மனித மேன்மையையும் அறிய, ஒரு மனிதன் அறம் நிறைந்தவனாக வாழப் புத்தகம் கற்றுத்தரும். ஒரு மனிதர் மீது அன்பு செலுத்த, அவரது வலிகளை உணர, அவருக்கு நிகழ்ந்த அநீதிகளைக் கண்டு ரௌத்திரம் பழக, அவருக்காகக் கண்ணீர் சிந்தப் புத்தகமே கற்றுத் தந்தது.

எஸ்.ராமகிருஷ்ணன் எனக்குப் பயணிக்கக் கற்றுக் கொடுத்தார். ஏன் பயணிக்க வேண்டும், பயணம் என்றால் என்ன, பயணத்தின் வழியாக இவ்வுலகை எப்படி அறிவது என்று கற்றுத்தந்தார். ‘தேசாந்திரி’ என்கிற புத்தகத்தை வாசித்ததற்குப் பிறகு நானும் பயணிக்க ஆரம்பித்தேன்.

வயல்வெளிகளையும் பறவைகளின் ‘கீச்சு’ ஒலிகளையும் மேனியில் உரசிக்கொண்டு போகும் காற்றையும் நான் ரசிக்கத் தொடங்கினேன். ஒரு காலத்தில் சுத்தமாகவும் பணக்காரர்களாகவும் இருப்பவர்கள்தான் நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த எனக்குப் புத்தகம் மற்றொரு கண்ணோட்டத்தைத் தந்தது.

புதிய பார்வை

அடித்தட்டு மக்களிடம் இருக்கும் அன்பும் அவர்கள் மனதில் இருக்கும் புனிதமும் எனக்குப் புரியத் தொடங்கின. இச்சமூகத்தின் இருண்ட பக்கங்களை எனக்கு எடுத்துக்கூறியவர் ஜி.நாகராஜன். அவரது ‘குறத்தி முடுக்கு’ நாவலில் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைக் கூறியிருப்பார். அதுவரை அவர்கள் மீது நான் வைத்திருந்த கண்ணோட்டம் மாறி, அவர்களும் மனிதர்கள்தான் என்பது புரிந்தது. அவர்களை இந்தச் சமூகம் இச்சைப் பொருளாக மட்டுமே பார்க்கிறது. ஆனால், அவர்களுக்கும் அன்பு, காதல், துன்பம், இன்பம், வலி, மானம் போன்றவை இருக்கின்றன என்பதை அந்தப் புத்தகம் உணர்த்தியது. ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும் அவர்களும் சக மனிதர்கள்தான் என்பதையும் அந்தப் புத்தகம் கற்றுத்தந்தது. ஒரு மனிதன் புத்தகம் படிப்பதால் இச்சமூகத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள முடியும். என்.சொக்கன், மருதன், குகன் போன்றவர்கள் எனக்கு உலக அரசியலை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

ஆக, புத்தகங்களைக் கையில் எடுத்தால் அவையும் அதன் ஆசிரியர்களும் நம்மை இட்டுச்செல்லும் பயணங்கள் எல்லையற்றவை என்பதில் இருவேறு கருத்தில்லை.

- கட்டுரையாளர்,

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்