பரதநாட்டியத்தின் நினைவெல்லாம் நித்யா!

By யுகன்

பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை சிறு வயதிலேயே முறையாக கற்றுக்கொள்ளத் தொடங்கியவர் நித்யா நரசிம்மன். இவர் சுமா மணி, ருக்மிணி விஜயகுமார், வித்யா அரசு, டாக்டர் ஜி.வி. குருபரத்வாஜ், ஸ்வேதா பிரச்சண்டே ஆகிய நாட்டிய குருமார்களிடம் தன்னுடைய பரதநாட்டியத் திறமையை மெருகேற்றிக்கொண்டார். இவரின் நினைவெல்லாம் பரதநாட்டியம்; பரதநாட்டியத்தின் நினைவெல்லாம் நித்யா!

சென்னையிலிருந்து 2017இல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நித்யா, அங்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சன்னிவேல் மாவட்டத்தில் பிரயுக்தி ஆர்ட்ஸ் என்னும் அமைப்பின் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரதநாட்டியப் பயிற்சி அளித்துவருகிறார். அண்மையில், சன்னிவேல் நகர மேயர் லேரிக் க்ளெய்ன் ‘சன்னிவேல் நகரின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் கலைஞர் விரு’தை நித்யா நரசிம்மனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட நித்யா, “பரதநாட்டியத்தின் வழியாக ஓர் அருமையான சமுதாயத்தை உருவாக்குவதில் பெருமை கொள்கிறேன். இந்த நாட்டியச் சமுதாயமே பரதநாட்டியத்தில் நான் கொண்டுவரும் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறது. அதற்கு அங்கீகாரமாக சன்னிவேல் நகரின் மேயர் லேரிக் க்ளெய்ன் அளித்திருக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் கலைஞருக்கான விருதுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி” எனப் பேசியது சன்னிவேல் நகர் மக்களையும் அவரிடம் பரதநாட்டியம் பயிலும் சிறுவர்களையும் பெரியவர்களையும் நெகிழச் செய்தது.

சன்னிவேல் நகர மேயர் லேரிக் க்ளெய்னிடம் இருந்து ‘சன்னிவேல் நகரின்
கலாச்சாரத்தை மேம்படுத்தும் கலைஞர் விரு’தைப் பெறும் நித்யா நரசிம்மன்

பதம் புதிது; தடம் புதிது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் பெருமைக்கு உரியது பரதநாட்டியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் நித்யா நரசிம்மன். அந்த நம்பிக்கை அவரின் நாட்டியங்களிலும் பிரதிபலிக்கும். மாதே, பூஜே, தமிழ், உமா, பால கதைகள், மலர்ந்துவிடும் (Deflowering) உள்ளிட்ட தலைப்புகளில் அமைந்த அவரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நாட்டிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பரதநாட்டியத்தோடு இந்தியப் பண்பாடு, கலாச்சாரத்தின் பெருமைகளை ‘இந்தியக் கலைகளின் சாரம்’ (Essence of Indian Arts) என்னும் தலைப்பில் பர்க்லி, ஸ்டான்ஃபோர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே கருத்துரையும் வழங்கியிருக்கிறார் நித்யா.

பிரயுக்தி அமைப்பின் சார்பாக ‘இன்டர்பிளே ஆர்ட்ஸ்’ திருவிழாவை விமரிசையாக நடத்தியிருக்கிறார். இதில் முதன் முறையாக இந்தியாவில் இருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து, நேரடியாக மேடையில் அவர்களின் இசையோடு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார் நித்யா. இந்த நிகழ்ச்சிகளின் தரம் கலைஞர்களையும் ரசிகர்களையும் பரவசப்படுத்தியது. மேலும், பல துறை சார்ந்த கலைஞர்களையும் வரவழைத்து, பிரயுக்தி அமைப்பிலேயே ‘சேம்பர் கான்ஸர்ட்’கள் பலவற்றையும் நடத்துவதன் மூலம் பல வெளிநாட்டுக் கலைஞர்களோடு உள்நாட்டில் இருக்கும் கலைஞர்களையும் சந்திக்கவைத்து, கலைப் பரிமாற்றத்தும் நித்யா பாலமாக இருக்கிறார்.

வைபவ் ஆரேகர், வித்யா சுப்பிரமணியன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கலைஞர்கள் சன்னிவேலிக்குச் சென்று அங்கிருக்கும் கலைஞர்களோடு இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னதமான பல கலை சங்கமங்கள் சன்னிவேலில் நடைபெறுவதற்கு நித்யா நரசிம்மனின் பிரயுக்தி ஆர்ட்ஸ் அமைப்பு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

அன்பான குடும்பத் தலைவி, பாசமான அன்னை, பரதநாட்டியக் கலைஞர், ஆசிரியர், நாட்டிய நாடகங்களின் ஆசிரியர், இயக்குநர் என நித்யா நரசிம்மனுக்குப் பல முகங்கள். இவற்றோடு இன்னொரு முகம், இவர் வெற்றிபெற்ற தொழில்முனைவோரும்கூட. சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை நவம்பர் மாதத்தில் நியூயார்க் நகரத்தில் பெறவிருக்கிறார். இதன் மூலம், தான் ஒரு சிறந்த நடனமணி மட்டுமல்ல, இந்திய நாட்டின் கலாச்சார விழுமியங்களை பரப்பும் மையசக்தியும் கூட என்பதைச் செயல்பூர்வமாக நிரூபித்துவருகிறார் நித்யா நரசிம்மன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்