அங்கீகாரங்கள் லைக்குகளில் இல்லை | சக்ஸஸ் ஃபார்முலா - 22

By நஸீமா ரஸாக்

குடும்ப விழாவுக்காக சச்சு தனது சொந்த ஊரான திருச்சிக்குச் சென்று வந்தார். போகும்போது மகிழ்ச்சியாகச் சென்றார். வரும்போது சோர்ந்து போயிருந்தார். வீட்டிலிருந்து விடுதி வரும் அனைவருக்கும் முகம் அப்படித்தான் இருக்கும். சச்சுவும் அப்படித்தான் இருக்கிறார் என்று நினைத்தேன்.

மாலை மொட்டை மாடிக்குச் சென்ற என்னை, பின்தொடர்ந்து வந்தார்.

“நஸீ, மனசே சரியில்லை. ஊருக்கு ஏன் போனோம்னு ஆயுடுச்சி.”

“ஏன் சச்சு?”

“அழகா புடவை கட்டிட்டு ஃபங்ஷனுக்குப் போனேன். அம்மா, அப்பாவை விடு, வந்த உறவுக்காரர்கள் வாயிலிருந்து அழகா இருக்க சச்சுனு ஒரு வார்த்தை வரல. அதைக்கூட விடு. பார்க்கும் போதே என் உடம்புல எவ்வளவு எலும்பு இருக்குனு தெரியுதாம். இப்படியே அதையும், இதையும் சொல்லிட்டு இருந்தாங்க. இவங்க சொன்னதெல்லாம் உண்மையோன்னு தோண ஆரம்பிச்சுருச்சு.”
“இவ்வளவுதான் விஷயமா? ஃபேஸ்புக்ல நீ இருக்க இல்ல?”

“நான் என்ன சொல்றேன் . நீ என்ன கேட்கிற நஸீ?”

“காரணமாதான் கேட்டேன் சச்சு. சமூக ஊடகங்களின் மூலம் கிடைக்கும் விருப்பக்குறிகளும் பகிர்வுகளும் நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அதன் தொடர்ச்சிதான் வெளிப்புற அங்கீகாரத்திற்கான தேடல் முன்னெப்போதையும்விட அதிகரித்து இருக்கிறது.

நாம் யார் என்பதைச் சுயமதிப்பீட்டைக் கொண்டு அல்ல, மற்றவர்களின் அங்கீகாரத்தைக் கொண்டு தீர்மானிக்கிறோம். மற்றவர்கள் நம்மை எப்படி நினைத்து இருக்கிறார்கள் என்பதற்கு அதிக மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அதன் பிள்ளையார் சுழியாக ஃபேஸ்புக் விருப்பக்குறி என்று சொல்லலாம். அது அதோடு நின்றுவிடுவதில்லை. நாம் என்ன செய்தாலும் யாராவது புகழ வேண்டும், உலகமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தெரியாத யாரோ ஒருவரிடம் இருந்து கிடைக்கும் அங்கீகாரத்தை நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். நம் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு வார்த்தை யார் சொன்னாலும் நம் உலகம் இருண்டு விடுகிறது. சொன்னவர் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சமூக வலைதளத்தில் உலவிக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் வார்த்தைகள்கூட நம்மைப் பாதித்துவிடுகின்றன.

அங்கீகாரம் என்கிற மாய உலகில் மாட்டிக் கொண்டு, நம் உண்மையான நலம் விரும்பிகளிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கிறோம். எது உண்மை என்கிற புரிதலோ அல்லது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தையோ எதுவும் கிடையாது.

மற்றவர்களைத் திருப்திப்படுத்த நமது நடத்தையை மட்டுமல்ல, நம்பிக்கைகளையும் மாற்றிக்கொள்கிறோம். இது நமது உண்மையான தன்மையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டாலும் அது பெரிதல்ல என்கிற மன நோய் வந்துவிடுகிறது. தொடர்ந்து அங்கீகாரம் தேடுவது நமது சுய நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கிறது .

உண்மையான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் அது கண்டிப்பாகச் சமூக ஊடகங்களில் கிடைக்காது என்கிற தெளிவு வேண்டும். இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில் அங்கீகாரத்துக்கு முக்கியத்துவம் தேவையற்றது. உண்மையான அங்கீகாரம் சரியான இடத்திலிருந்து சரியான மனிதர்கள் மூலம் வரும். அதற்கு நாம் செய்ய வேண்டியது உண்மையாக நம் இலக்கை நோக்கி உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் விருப்பக்குறி வர வேண்டும், கரகோஷம் வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிரந்தரமான எதையும் உங்களுக்குக் கொடுக்காது. ஒருநாள் மட்டும் பிரபலமாக இருந்து எல்லாம் முடிந்துவிடும். வெற்றிக்கு அது தேவையற்ற விஷயமும்கூட.

அங்கீகாரம் என்னும் மாயைத் தெளிய பத்து வழிகள்.

1. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலாக, உங்கள் சொந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்.

2. மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் குறைக்க, சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும்.

3. வெறும் பாராட்டுகளுக்குப் பதிலாக, உங்கள் வளர்ச்சிக்கு உதவும் தேவையான கருத்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

4. சவால்களையும் தோல்விகளையும் உங்கள் மதிப்பின் பிரதிபலிப்புகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளாகப் பாருங்கள்.

5. உங்களை நீங்களே விமர்சிக்கும்போது, அந்த எண்ணங்களை நிறுத்தி, அவற்றை நேர்மறையான, யதார்த்தமான சிந்தனைகளால் மாற்றுங்கள்.

6. தினமும் சிறிது நேரம் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஆராயுங்கள். குறிப்பேடு எழுதுவது அல்லது தியானம் செய்வது இதற்கு உதவும்.

7. சிறிய வெற்றிகளையும் கொண்டாடுங்கள். உங்கள் சாதனைகளின் பட்டியலை வைத்திருங்கள்.

8. உங்களை ஒரு நல்ல நண்பராக நடத்துங்கள். உங்கள் தவறுகளை மன்னித்து, உங்கள் முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள்.

9. தொடர்ந்து அங்கீகாரம் தேடுவது நமது சுய நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சச்சு, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். அங்கீகாரங்களைத் தேடிப் போனால் நம்மை இழப்போம் என்கிற ஒற்றை வரியைப் பிடித்துக் கொள்ளுங்கள். கவனச் சிதறல்கள் இல்லாமல் வெற்றியை நோக்கி நிதானமாகப் பயணம் செய்யும் சூட்சுமம் கிடைத்துவிடும்.

(தொடரும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

முந்தைய அத்தியாயம்: வெற்றியை ஈர்க்க வேண்டும், துரத்தக் கூடாது! | சக்ஸஸ் ஃபார்முலா - 21

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்