தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் தாட்டாம்பட்டிக்கு முன் இருக்கிறது அந்த ஆச்சரிய மடம்! மடம் என்றால் பெரிதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிய இடம்தான். திறந்தவெளியில் ஒரு கட்டிடம். அதற்கு எதிரில், சாலைக்கு இடப்பக்கம் கருப்பசாமிக்குச் சிறு கோயில். வலப்பக்கக் கட்டிடத்தில் முருகன், விநாயகர், அகத்தியர் உள்ளிட்டோருக்கான சிலைகள் இருக்கின்றன. அருகில், கிணறு.
இந்தக் கட்டிடத்தை ‘யானைக்குச் சுளுக்கெடுத்த மடம்’ அல்லது ‘யானைக்கு முடம் பார்த்த அகத்தியன் பண்டாரம் மடம்’ என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். யானைக்கே சுளுக்கா என்று ஆச்சரிய மடைந்தால் அது நியாயமானதுதான்.
18ஆம் நூற்றாண்டில் நவாப் மன்னர் ஒருவர், தமிழகத்தின் ஆலயங்களைக் காணவும் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் பயணம் மேற்கொண்டார். குற்றாலத்துக்குச் சென்றுவிட்டு, பாபநாசம் நோக்கித் தனது படைகளுடன் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தார்.
கீழாம்பூர் கிராமத்தைத் தாண்டி தாட்டாம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மன்னர் அமர்ந்துவந்த யானை, ஓர் இடத்தில் திடீரென்று படுத்துக்கொண்டது. யானையால் எழுந்துகொள்ள முடியவில்லை. என்ன ஏதென்று தெரியாத மன்னரும் அவர் ஆள்களும் யானையை எழுந்து நிற்க வைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். எதுவும் பலிக்கவில்லை.
» தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு
» பாடகர் லியாம் பெய்ன் 3-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
அக்கம்பக்கத்து ஊர்களில் இருந் தும் வைத்தியர்களை வரவழைத்துச் சிகிச்சை மேற்கொண்டனர். யானை அசைந்துகூடக் கொடுக்கவில்லை. மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடன் வந்தவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
மூன்று நாள்களாகிவிட்டன. மன்னர் ஊருக்கு வெளியே தங்கி இருக்கும் காரணம் தெரியாமல் கீழாம்பூர் மக்கள் விசாரிக்கத் தொடங்கினர். அவர் வந்த யானையின் நிலை பற்றி அறிந்த அவர்கள், உள்ளூரிலேயே பல கலைகளில் தேர்ச்சிபெற்ற, ’ஐயக்கிழவனார் நம்பியார்’ என்கிற சிறந்த வைத்தியர் இருக்கிறார், அவரால் யானையைச் சரிசெய்ய முடியும் என்று மன்னருக்குத் தகவல் அனுப்பினர்.
பெரிய பெரிய வெளியூர் வைத்தியர்களை அழைத்து வந்தும் அவர்களால் ஒன்றும் முடியவில்லை. இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என வேண்டா வெறுப்பாக அவரை அழைத்து வரச் சொன்னார் மன்னர்.
மன்னர் அழைப்பு என்பதால் ஓடோடி வந்தார் ஐயக்கிழவனார். யானை காதுகளை ஆட்டியபடி, சிறு குன்றுபோல ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி கிடந்தது. அதைச் சுற்றிச் சுற்றி வந்தவர், யானையின் தும்பிக்கை, முகம், முதுகு பகுதியைப் பார்த்தார். எதிலும் காயம் தெரியவில்லை. எல்லாம் சரியாகவே இருந்தன. பிறகு என்னாச்சு என்று யோசிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அதன் ஒரு கால் லேசாக வீங்கி இருப்பதைக் கண்டார். அதில் கையை வைத்ததும் யானை வெடுக்கெனக் காலை அசைத்ததை அறிந்தார்.
வைத்தியருக்கு இது சுளுக்குதான் என்பது தெரிந்துவிட்டது. மன்னருடன் இருந்தவர்களிடம் உடனடியாக யானையின் வீங்கிய காலுக்கு அருகே இடுப்பளவு ஆழத்துக்குக் குழி தோண்டச் சொன்னார். அவர்கள் குழி தோண்டினர். பிறகு பெரிய பாறாங்கல் ஒன்றைக் கொண்டுவருமாறு கேட்டார். எங்கிருந்தோ அதைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
பனைநார் கயிறின் ஒரு பகுதியில் யானையின் வீங்கிய காலையும் மற்றொரு பகுதியைப் பாறாங்கல்லிலும் கட்டினார்கள். இப்போது பாறாங்கல்லைக் குழிக்குள் தள்ளிவிட்டார் வைத்தியர். கல் இறங்கிய வேகத்தில் யானையின் கால் குழிக்குள் பட்டென்று இறங்க, சுளுக்குப் போய்விட்டது.
உடனடியாகத் தட்டுத்தடுமாறி எழுந்த யானை, காலை ஊன்றி நின்றது. வீங்கிய காலைத் தரையில் ஊன்ற முதலில் சிரமப்பட்ட யானை, பிறகு சகஜமாக நடக்கத் தொடங்கியது. இதைக் கண்ட மன்னருக்கு ஆச்சரியம். பல வைத்தியர்களால் செய்ய முடியாததை ஐயக்கிழவனார் சரிசெய்ததால் மகிழ்ச்சியான மன்னர், “இதற்குக் கைமாறாகக் கேட்டதைத் தருகிறேன், தயங்காமல் கேளும்” என்றார்.
பொருளாசை இல்லாத ஐயக்கிழவனார், இது போன்ற வைத்தியத் தொழிலுக்கு எனக்குப் பனைமட்டையும் புளியங்கொட்டைப் பசையும் முக்கியம். அவற்றைப் பயிர் செய்ய நிலம் இருந்தால் பலரைக் குணப்படுத்த முடியும் என்றார். உடனடியாக அவர் கண் எதிரில் இருந்த பல ஏக்கர் நிலத்தைக் காண்பித்து, “இதையெல்லாம் தருகிறேன்.
உங்கள் விருப்பப்படி விளைவித்துக்கொள்ளுங்கள்” என்ற மன்னர், அந்த இடத்துக்கு 'யானைக்கு முடம் பார்த்த மடம்' என்று பெயரிட்டார். பின்னர் அந்த நிலத்துக்கான செப்புப் பட்டயத்தையும் அளித்திருக்கிறார். அந்தப் பெயர் இப்போதுவரை நிலைத்து நிற்கிறது என்கிறார்கள் கீழாம்பூர்க்காரர்கள்.
யானைக்காகத் தோண்டிய குழிதான் பின்னர் கிணறு ஆனதாகவும் இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago