தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கிய மகன் - ஆலிவர் கிராம்வெல் | கல்லறைக் கதைகள் 9

By சி.ஹரிகிருஷ்ணன்

து 1660ஆம் ஆண்டு. உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்ட்டர் தேவாலயம். அங்குள்ள கல்லறையில் ஆத்மா ஒன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக, இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லசின் படை வீரர்கள் கல்லறைக்குள் புகுந்து, குறிப்பிட்ட ஒரு கல்லறையை மட்டும் இடித்துப் பெயர்த்து எடுத்தனர். கல்லறையின் உள்ளே இருந்த எலும்புக் கூட்டை வெளியே எடுத்துக் கிடத்தினர். தயாராகக் காத்திருந்த நீதிபதி ஒருவர், அந்த எலும்புக் கூட்டுக்கு மரணதண்டனை (?) விதிப்பதாகத் தீர்ப்பு கூறினார்.

அதைத் தொடர்ந்து, அந்த ராணுவக் குழுவுக்குத் தலைவன் போல இருந்த ஒருவன், தன் உடைவாளை உருவி, எலும்புக் கூட்டின் தலையை வெட்டி எறிந்தான். அதைத் தொடர்ந்து, அந்த எலும்புக்கூடு, மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலைக் களத்தின் அருகே வீசப்பட்டது. வெட்டி எடுக்கப்பட்ட தலை, ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலின் மாடியில் வெளியே தெரியும்படி வைக்கப்பட்டது.


கல்லறையில் புதைக்கப்பட்ட ஒரு சடலத்தைத் தோண்டியெடுத்து மரண தண்டனை விதித்து, உடலைச் சிதைக்கும் அளவுக்கு அப்படி என்ன வன்மம் அவர் மீது? அந்த உடலுக்குச் சொந்தக்காரர் யார்?

முடியாட்சியை முடித்துவைத்துவர்: அந்த உடலின் சொந்தக்காரர் பெயர் ஆலிவர் கிராம்வெல். இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்துக் குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்குள் கொண்டு வந்தவர். முடியாட்சியை மண்டியிடச் செய்து மக்களாட்சிக்கு வித்திட்டவர் என்கிற முறையில் ஆலிவர் கிராம்வெல் வரலாற்றில் நிலைத்த புகழுடன் விளங்கிவருகிறார்.

உலகெங்கும் வரம்பற்ற முடியாட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. அரசரின் ஆணையே சட்டமாக மதிக்கப்பட்டது. எதிர்த்துக் கேள்வி கேட்டால் மரண தண்டனைதான். ஐரோப்பியக் கண்டம் முழுவதும் அரசுரிமைக்கான போட்டிகளும் சமயப் பூசல்களும் நிறைந்திருந்தன. ஆனால், ஒரே ஒரு நாட்டில் மட்டும் அப்போது நாடாளுமன்றம் இருந்தது. அந்த நாடு இங்கிலாந்து. அங்கு மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் இருந்தது. அதில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்தனர்.

அரசருக்கு அளவற்ற அதிகாரங்கள் இருந்தாலும், புதிய வரிகளை விதிப்பதாக இருந்தாலும், புதிய சட்டங்களைப் போடுவதாக இருந்தாலும் அல்லது வேறு நாட்டோடு போரில் ஈடுபடுவதாக இருந்தாலும் இங்கிலாந்தின் அரசர் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று அவர்களின் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசருக்கு அதிகாரம் இல்லை: அரசர்களுக்கு இது பிடிக்கவில்லை. தன்னிச்சையாகச் செயல்பட, அவர்களுக்கு நாடாளுமன்றம் ஒரு தடையாக இருந்தது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கப் பல அரசர்கள் முயன்று பார்த்தார்கள். இதனால், பல காலக்கட்டங்களில் அரசர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே அவ்வப்போது பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.


இங்கிலாந்தில் உள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் கிராம்வெல் பிறந்தார். அவர் வசதியான குடியானவக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவதியில் இருந்தே சமூகச் சேவைகளில் ஆர்வம் கொண்ட அவர், 1628 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மன்னர் முதலாம் சார்லஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, தாமே நாட்டை ஆளத் தொடங்கியதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறிது காலமே பணியாற்றினார். அடுத்த 12 ஆண்டுகள் வரையில் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை.

1640ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்துக்கு எதிராகப் போர் நடத்துவதற்காக அரசருக்குப் பணம் தேவைப்பட்டது. அப்போதைய சட்டப்படி, வேறு நாட்டின் மீது படையெடுக்கவோ அல்லது நிதி திரட்டவோ நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். அந்தப் பணத்தைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தைச் கூட்டினார் மன்னர் சார்லஸ். மன்னரிடம் இருந்து அதிக அதிகாரங்களைப் பெற இதுதான் நேரம் என்று முடியாட்சிக்கு எதிரான பல வாக்குறுதிகளையும் பாதுகாப்புகளையும் அரசரிடமிருந்து நாடாளுமன்றம் கோரியது. ஆனால், நாடாளுமன்றத்திற்கு அடிபணிந்து நடக்க சார்லஸ் விரும்பவில்லை.

மக்களாட்சி மலர்ந்தது: இதனால், 1642 ஆம் ஆண்டில் அரசரின் ஆதரவுப் படைகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே போர் மூண்டது. கிராம்வெல் நாடாளுமன்றத்திற்கு ஆதரவளித்தார். அவர் ஹன்டிங்டனுக்குத் திரும்பி அரசருக்கு எதிராகப் போரிடுவதற்காகக் குதிரைப்படை ஒன்றைத் திரட்டினார். போர் நடந்த நான்கு ஆண்டுகளில் கிராம்வெல்லின் மகத்தான ராணுவத் திறமை வெளிப்பட்டுப் பாராட்டப்பட்டது. 1644, ஜூலை 2இல் நடந்த உள்நாட்டுப் போரிலும் 1645, ஜூன் 14இல் நேஸ்பியில் நடந்த இறுதிப் போரிலும் கிராம்வெல் மிக முக்கியப் பங்கு வகித்தார்.


புரட்சிக்கு வித்திட்டவர்: நான்காண்டுகள் நடைபெற்ற போர் 1646இல் முடிவுக்கு வந்தது. கிராம்வெல்லின் படையிடம் மன்னரின் படை தோற்றோடியது. மன்னர் சிறைப்பிடிக்கப்பட்டார். ஆனால், கொஞ்ச நாளிலேயே சிறையிலிருந்து மன்னர் தப்பியோடிவிட்டார். கிராம்வெல் தலைமையில் மக்களாட்சி அரசு அமைக்கப்பட்டது. மீண்டும் 1649இல் படையெடுத்து வந்த மன்னர் தோற்கடிக்கப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. அரசருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்திவந்தவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட்டனர்.

அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சார்லஸின் மகனான இரண்டாம் சார்லஸ் 1652இல் நடைபெற்ற போரில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டார். 1650 - 1658 காலக்கட்டத்தில் மூன்று நாடாளுமன்றங்கள் அமைக்கப்பட்டுக் கலைக்கப்பட்டன. எவ்வித அரசமைப்பும் வெற்றிகரமாகச் செயல்பட முடியாமல் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி கிராம்வெல், ராணுவ சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்.

லார்ட் ப்ரொடெக்டர் என்ற பெயருடன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளை 1653 முதல் 1658 ஆண்டு வரை நல்லாட்சி புரிந்தார் கிராம்வெல். சீரான முறையில் நிர்வாகத்தை நடத்திய, கிராம்வெல் 1658இல் மலேரியாக் காய்ச்சலால் இறந்தார். அவருக்குப் பின் அவரது மூத்த மகன் ரிச்சர்டு கிராம்வெல் பதவியேற்றார். ஆனால், விரைவிலேயே 1660இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் மன்னர் இரண்டாம் சார்லஸ்.


தன் தந்தை சார்லஸுக்கு மரண தண்டனை விதித்து அவரது தலையைத் துண்டித்தார் கிராம்வெல்லைப் பழிவாங்கும் நோக்கத்திலேயே, கிராம்வெல்லின் சடலத்தைத் தோண்டியெடுத்து இரண்டாம் சார்லஸ் மரண தண்டனையை நிறைவேற்றினார். கல்லறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கிராம்வெல் தலை, இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும், மக்களாட்சிக்கு கிராம்வெல் போட்டிருந்த அடித்தளத்தை மன்னரால் அசைக்கக்கூட முடியவில்லை. நாடாளுமன்றத்தின் உரிமையை அரசர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

பின்னர் 1688ஆம் ஆண்டு மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை நிலைநாட்ட முயன்ற இரண்டாம் ஜேம்ஸ் ரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அரசரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டு 'வரம்புடை முடியரசு', அதாவது நாடாளுமன்றத்துக்குக் கீழ்ப்பட்டவர் அரசர் என்பது நிலைநாட்டப்பட்டது.
பிற்காலத்தில் நடைபெற்ற அமெரிக்கச் சுதந்தரப் போர், பிரெஞ்சுப் புரட்சி போன்ற இதர புரட்சிகளுக்கெல்லாம் தத்துவ அரசியல் அடித்தளத்தைத் அமைத்துத் தந்தது ஆலிவர் கிராம்வெல் தலைமையில் நடைபெற்ற அரசியல் போராட்டமே!

>முந்தைய அத்தியாயத்தை வாசிக்க: பணயக் கைதியான அதிபர்: டாஸஸ் பாபடுபொலஸ் | கல்லறைக் கதைகள் 8

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்