ஆயிரம் வாசல் 09: பங்கேற்பாளர்களாக மாறும் மாணவர்கள்!

By சாலை செல்வம்

பள்ளி வளாகத்தில் இருந்து மரக்கன்றுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று தங்களுடைய வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடத்திலும் நடுகிறார்கள் அந்த மாணவர்கள். நட்ட மரத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறார்கள். தாங்கள் வளர்த்த மரங்களை ஒளிப்படம் எடுத்து அதைப் பற்றி எழுதுகிறார்கள். இந்தத் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுடைய மரங்களின் எண்ணிக்கை, வளர்ச்சி, அவை பராமரிக்கப்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது அந்தப் பள்ளி. இவ்வாறு க்ரியா பள்ளியின் 450 முதல் 500 மாணவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தலா 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்திருக்கின்றன.

எங்கெங்கு காணினும் பசுமை!

திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் செயல்பட்டுவருகிறது ‘க்ரியா சில்ரன்ஸ் அகாடமி’. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மையமாக இப்பள்ளி செயல்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதால் ‘க்ரியா’ (Crea+tive) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பசுமையாகக் காட்சியளிக்கும் பள்ளி வளாகம். அதிலும் ஒரு பகுதி மரங்கள் அடர்ந்த காட்டைப் போன்று இருக்கிறது.

விரும்பும்போது தங்கள் வீட்டில் இருந்து சேகரித்துவரும் விதைகளை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நடலாம். இந்த முயற்சியால் பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்ட செடிகள் பள்ளி மைதானம் முழுக்க மரங்களாக நிமிர்ந்தெழுந்து நிற்கின்றன. அடுத்ததாகப் பள்ளி வளாகத்துக்கு வெளியே மாணவர்களின் வீட்டுச் சுற்றுப்புறத்திலும் மரக்கன்றுகளை நடுவதாகத் தங்களுடைய திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.

“மரங்களின் மகிமையை மாணவர்கள் கண்கூடாக உணர புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ரேணுகா ஃபார்முக்கு அவர்களை அழைத்துச்சென்றோம். அங்கு, 50 ஏக்கரில் வளர்த்திருக்கும் 2,000 மரங்களைக் கொண்ட பண்ணையைப் பார்வையிட்டார்கள். இதுபோல அரசு வாழை ஆராய்ச்சி மையத்துக்கும் அழைத்துச் சென்றோம். அங்கு அவர்கள் மரங்களின் தன்மை, பலன்கள் போன்றவற்றைப் பார்த்ததோடு, அது பற்றி நிறைய கேள்வி கேட்டு உரையாடவும் செய்தார்கள்” என்கிறார் பள்ளியின் தாளாளர் கிறிஸ்டி சுபத்ரா.

மர நண்பர்கள்

பள்ளியில் அரச மரம் ஒன்று இந்த ஆண்டு பட்டுப்போகும் நிலையில் இருந்ததைக் கண்டு, மரத்தை மீட்கும் வேலையில் இறங்கினார்கள் மாணவர்கள். கூடி நின்று கவனிப்பது, நீரூற்றுவது, மரத்துடன் பேசுவது, வீட்டிலிருந்து சாணி கொண்டுவந்து பதியம்போடுவது போன்ற செயல்பாடுகளால் அந்த மரம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

“இந்த நிகழ்வு மாணவர்களுக்கு அளித்த உத்வேகத்தால், ‘மர நண்பர்கள்’ என்ற புதிய மாணவர் குழுவை உருவாக்கினோம் . ‘மர நண்பர்’களின் செயல்பாடுகள் பறவைகளை அவதானித்தல், வானியல் சார்ந்த செயல்பாடுகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பயணித்தல் என்பதாக விரிவடைந்துவருகிறது” என்கிறார்.

‘மறு பயன்பாடு, குறைந்த பயன்பாடு, மறுசுழற்சி’ என்ற சுற்றுச்சூழல் கோட்பாட்டை மையமாகக்கொண்டு, கைவினை வகுப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன. தென்னை நார்க் கழிவு, வாழை நார், கல், மண், பயன்படுத்திய காகிதங்கள் ஆகியவற்றைச் சேகரித்துக் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கைவினைப்பொருட்கள் பாடப் பகுதிகளுக்குத் தொடர்புடையதாகவும் பின் அவை காட்சிப்படுத்தக்கூடியவையாகவும் மாற்றப்படுகின்றன.

மாணவர்களின் உடல் மேம்பாட்டுக்காகப் பாடல், யோகா, விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றின் மூலமாக மாணவர்களுக்கிடையே வன்முறைப் போக்கு குறைந்திருப்பதாகச் சொல்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி.

8CH_ChristySubathra கிறிஸ்டி சுபத்ரா

இதை முன்னிட்டும் சமூக நிகழ்வுகளுடன் மாணவர்களை தொடர்புபடுத்தவும் ஒவ்வொரு வாரமும் ‘வாரம் ஒரு செயல்பாடு’ என்ற திட்டத்தை இப்பள்ளி அமல்படுத்தி இருக்கிறது. விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் முதல் நீட் தேர்வுப் பிரச்சினைகள்வரை சமூக நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளவும், தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், பார்வையாளர் நிலையிலிருந்து மாறிப் பங்களிப்பைச் செலுத்தவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.

ஆங்கில வழி மெட்ரிக் பள்ளியான இதில் சமச்சிர் கல்வித் திட்டம் பின்பற்றப்படுகிறது. அதேநேரத்தில் தமிழ் மொழிப் பாடத்துக்கு கூடுதுல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் உள்ளிட்டத் துறைகளை ‘ஸ்டீம்’ (STEAM) என்ற திட்டத்தின் கீழ் செயல்வழிக் கல்வியாக கற்பிக்கிறார்கள். “ஒரு பாடத்தை எடுத்து செயல்வழியில் அதன் பகுதிகளைப் பிரித்து ஆராய்ந்துப் படிப்போம். உதாரணத்துக்கு, உயிரணு பற்றிய பாடத்தை படிக்கும்போது ஆய்வுக்கூடத்தில் உயிரணுவின் வளர்ச்சி, அதன் அழிவை பார்த்தறிவது, வீடியோ பார்ப்பது, காயம்பட்டால் என்ன ஆகிறது என்பதை உற்று நோக்க சொல்வது, உயிரணு தொடர்பான புதியக் கண்டுபிடிப்புகளுக்கு முன் அவற்றை எப்படி புரிந்து செயல்பட்டோம் என பின்னோக்கி நகர்வது போன்ற முறைகளை கையாள்கிறோம்.

இயற்கை வளம், வறட்சி உள்ளிட்ட பாடங்களை வெறும் அறிவியல் பாடமாகப் புகட்டாமல் இலக்கியம், சூழலியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்பிக்கிறோம். மழை பொழிவு, மழையின்மைக்கான காரணங்களை சமூக அறிவியல் ஆசிரியர் கையாள்வது, மழைக் கதைகள், மழைப் பாடல்கள் மழையில் நனைந்த அனுபவத்தை எழுதுவதை மொழி ஆசிரியர்கள் கையாள்வது என பாடத்தைப் பிரித்துக்கொள்வோம். இப்பாட்த்திட்டத்தின் மூலமாக ஆசிரியர் ஒன்றுகூடுதலும் உரையாடுவதும் செயல்பாடுகளை செய்யவேண்டிய நேரங்களைத் திட்டமிடுவதும் நடக்கும். தேவைப்படும் இடங்களில் ஓவிய, கை வினையாசிரியர்களின் உதவியைப் பெறுவோம்” என்கிறார் தலைமை ஆசிரியர்.

பாடப் புத்தகக் கல்வியோடு பசுமைச் செயல்பாடுகள், சமூக மாற்றத்துக்கான உரையாடல்கள், குழு விளையாட்டுகள் ஆகியவற்றின் மூலமாகப் பொறுப்பான நாளைய சமூகத்தை வளர்த்தெடுக்க முயல்கிறது இந்தப் பள்ளி.

பள்ளி பற்றி அறிய: http://www.creaschool.in/,
தொடர்புக்கு: 8072836736, 9442560489


கட்டுரையாளர்: கல்விச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்