டோபமைன் செய்யும் மாயாஜாலம்! | சக்ஸஸ் ஃபார்முலா -19

By நஸீமா ரஸாக்

ஒரு மாதமாக சச்சு செய்த பிராஜெக்ட்டை , அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளர் திருப்பி அனுப்பிவிட்டார் என்று சோர்வாக இருந்தார். அவரே சரியாகிவிடுவார் என்று நானும் தொந்தரவு செய்யாமல் இருந்தேன்.

அலுவலகத்திலிருந்து விடுதி அறைக்கு வந்ததும் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தார். எதிலும் அவருக்கு ஆர்வமோ உற்சாகமோ இல்லாமல் இருந்தார்.

“சச்சு, ஏன் சாப்பிட வரல?”

“எனக்குப் பசிக்கல நஸீ, நீ போய்ச் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்தார்.

பத்து மணிக்கு ஸ்விகியில் ஆர்டர் போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்.

மறுநாள் அவரை விடுமுறை எடுக்கச் சொன்னேன். அவருக்கு பிடித்த மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். பலூன் சுடும் விளையாட்டு என்றால் ஒரு குழந்தையாக மாறிவிடுவார். விளையாடினார். கடல் அலையில் காலை நனைத்து, சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம்.

“தேங்க் யூ நஸீ, மனசு லேசா இருக்கு”.

“டோபமைனுக்கு நன்றி சொல் சச்சு”என்று ஆரம்பித்தேன்.

வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் டோபமைனைச் சரியாக வைத்திருக்க வேண்டும். அதை வெளியே எங்கும் தேட வேண்டாம். நமது மூளைக்குள் சுரக்கும் ஒருவிதமான ஹார்மோன்தான் அது. டோபமைன் குறைந்தால் கார்டிஸால் அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். கார்டிஸாலைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் டோபமைன் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டோபமைன் வெறும் ஹேப்பி ஹார்மோன் மட்டுமல்ல. இது நம் ஊக்கம், கற்றல், இலக்கு நோக்கிய நடத்தையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டோபமைன் சரியான அளவில் சுரக்கும்போது, நாம் ஆற்றல் நிரம்பியவர்களாகவும் கவனமாகவும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகவும் இருப்போம்.

Nature Reviews Neuroscience இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டோபமைன் மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் ஊக்கம், அறிவாற்றல் கட்டுப்பாட்டையும் பாதிக்கிறது.

சவாலான வேலைகளைச் செய்து கிடைக்கும் வெகுமதிகளின் போதும், பிடித்த சின்ன சின்ன விஷயங்கள் செய்யும் போதும் டோபமைன் அதிகரிக்கும்.

அதைப் போலவே மாரத்தான் ஓடுவது, தன்னார்வலர்களாகச் செயல்படுவது, மலை ஏறுவது, மீன் பிடிப்பது, கோலம் போடுவது, சுடோகு விளையாடுவது என்று பெரும் பட்டியல் மூலம் டோபமைனை அதிகரிக்க முடியும். மன நிறைவு கிடைக்கும் இடத்தில் வெகுமதியை எதிர்பார்க்க மாட்டோம். வெகுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த இடத்தில் கிடைக்கும் நிராகரிப்பு டோபமைன் சுரப்பதை வேகமாகக் குறைத்துவிடும்.

ரீல்ஸ் பார்ப்பதால், சிப்ஸ் அல்லது பாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் தற்காலிகமான டோபமைன் கிடைத்த உணர்வு இருக்கும். ஆனால், அது சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். டோபமைனை வளர்க்க 10 வழிகளைப் பார்ப்போம்.

1. உடல் பயிற்சி செய்வது உடல் நலத்துக்கு மட்டுமல்ல டோபமைன் அதிகம் சுரக்கவும் உதவுகிறது. எதுவும் செய்ய நேரம் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள்.

2. உடற்பயிற்சியைப் போலவே உணவுப் பழக்கங்களும் நமக்கு உதவும். புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளில் டைரோசினைக் அதிகமாக இருக்கிறது . ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. நாம் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் தூக்கம் முக்கியமல்லவா? சரியான தூக்கம் இருந்தால் டோபமைன் சரியாக வேலை செய்யும். இரவில் குறந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிற பழக்கத்தைக் கொண்டுவாருங்கள்.

4. தியானம் செய்தால் டோபமைன் அளவு அதிகரித்து கவனத்தை மேம்படுத்தும். முதலில் 5 நிமிடங்களில் ஆரம்பித்து பின்பு கால அளவை அதிகரிக்கலாம்.

5. நாம் செய்யும் வேலை எத்தனை சிறியதாக இருந்தாலும் இலக்கை அடையும்போது, டோபமைன் அதிகரிக்கிறது. ஆகையால் பெரிய திட்டங்களைச் சிறிய, கையாளக்கூடிய பணிகளாகப் பிரித்து, சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடத் தயாராகுங்கள்.

6. படைப்பாற்றல் டோபமைன் உற்பத்தியைத் தூண்டுகிறது. உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

7. டோபமைனைக் குறைக்கும் செயல்களிலிருந்து உங்களைத் தள்ளிவைத்துக் கொள்ளுங்கள்.
அதிகப்படியான சமூக வலைத்தளங்களில் உலாவுவது, காணொளிகளைப் பார்ப்பது, வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற செயல்கள் அதில் அடங்கும்.

8. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவு செய்யுங்கள். குடும்பமாகச் சுற்றுலா செல்வது. நண்பர்களோடு சேர்ந்து பிடித்த விஷயத்தைச் செய்வது பலனைத் தரும்.

9. இயற்கை ஒளி, இயற்கையுடன் செலவிடும் நேரம் டோபமைன் அளவை அதிகரிக்கக்கூடும்.

10. புதிய திறன்களை வளர்ப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது டோபமைனை அதிகரிக்கும்.

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடுவது டோபமைனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மூளையின் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

நான் மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றதன் காரணம் சச்சுவுக்குப் புரிந்தது. டோபமைனைச் சரியாகக் கவனிக்க கற்றுக் கொண்டால், உங்களை அது ஒரு சக்திமானாக மாற்றிவிடும் என்பது நிஜம். முயன்று பாருங்கள்.

(தொடரும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம்: சுத்தமான சுற்றுச்சூழல் வெற்றியைத் தரும் | சக்ஸஸ் ஃபார்முலா - 18

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

இணைப்பிதழ்கள்

11 days ago

மேலும்