உங்கள் குழந்தை உங்கள் குழந்தையா? - தேன் மிட்டாய் 22

By மருதன்

என் புத்தகம், என் பேனா, என் வீடு என்பதுபோல் ‘என் குழந்தை’ என்று நீங்கள் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். ‘இதென்ன புதுக் கதை கலீல் ஜிப்ரான், என் குழந்தையை என் குழந்தை என்றுதானே சொல்ல வேண்டும்?’ என்று நீங்கள் கேட்கலாம்.

‘நான் என் அப்பா, அம்மாவின் குழந்தை. என் அப்பா அவர் அப்பா, அம்மாவின் குழந்தை. எனக்குப் பிறந்த குழந்தை என்னுடையது. இது மிகவும் அடிப்படையான, மிகவும் இயல்பான ஓர் உண்மை அல்லவா? இதைத்தானே நாம் குடும்பம் என்கிறோம்’ என்று நீங்கள் வாதமும் செய்யலாம். அப்படித்தான் உலகமும் நம்பிக்கொண்டிருக்கிறது.

உங்களோடு ஒரு குழந்தை தங்கியிருக்கிறது. உங்கள் வீடு முழுக்கத் தவழ்கிறது. நீங்கள்தான் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள். நீங்கள்தான் வேளை தவறாமல் உணவு கொடுக்கிறீர்கள். அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பாமல் முழு நாளும் முழு இரவும் பார்த்துக்கொள்கிறீர்கள். ஆசை ஆசையாக ஆடைகளும் பொம்மைகளும் வாங்கி வந்து தருகிறீர்கள். சிணுங்கினால், அழுதால், அடம்பிடித்தால் குனிந்து சமாதானம் செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் அள்ளி அள்ளி அணைத்துக் கொள்கிறீர்கள்.

அந்தக் குழந்தையின் பெயர் நீங்கள் இட்டது. அந்தக் குழந்தையால் இப்போதைக்குப் படிக்க முடியாத ஆவணங்களில் இருப்பவை உங்கள் இருவரது பெயர்கள். ஒவ்வொருமுறை குழந்தை உங்களைப் பார்த்துச் சிரிக்கும்போதும் உங்கள் இதயம் பூரிக்கிறது. ‘இது என் குழந்தை, இது என் குழந்தை’ என்று பெருமிதம் கொள்கிறீர்கள்.

என் மூக்கு, என் வாய், என் கண், என் கன்னம், என் கன்னக்குழி. அப்படியே என்னை உரித்து வைத்திருக்கிறது. இது என்னுடைய பிரதிதானே என்று நீங்கள் கேட்கிறீர்கள். இல்லை என்பேன். இந்த உலகில் இதுவரை தோன்றிய எந்தக் குழந்தையும் பிரதியல்ல. ஒவ்வொன்றும் ஒரு புதிய உயிர். தோற்றத்தில் உங்களைப் போல்இருக்கலாம்.

உங்களைப் போல் நடக்கலாம், உங்களைப் போல் பாடலாம்,உங்களைப் போல் சிரிக்கலாம். ஆனாலும் அந்தக் குழந்தை நீங்கள் அல்ல. ஆ, என் கண்ணின் நிறம் என்று நீங்கள் உற்சாகத்தில் கத்தலாம். ஆனால், அவை உங்கள் கண்கள் அல்ல. வேறு யார் போலவும் இல்லாமல் புதிதாக உலகைப் பார்ப்பதற்காகத் தோன்றியிருக்கும் புதிய கண்கள் அவை.

யாருடைய தொடர்ச்சியும் அல்ல. யாருடைய நிழலும் அல்ல. ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய தொடக்கம். ஒரு புதிய உலகம். பிறந்தவுடனே வாய் திறந்து பேச முடியும் என்றால் ஒவ்வொரு குழந்தையும் நம்மைப் பார்த்து இப்படித்தான் பேசும். என்னிடம் எதுவும் இல்லை, எனக்கு எதையும் அளித்துவிடாதீர்கள்! நான் நானாக வளர விரும்புகிறேன்.

உங்கள் நம்பிக்கைகள், உங்கள் அச்சங்கள், உங்கள் கனவுகள், உங்கள் விருப்பு வெறுப்புகள், உங்கள் கடவுள்கள், உங்கள் கற்பனைகள் எதையும் எனக்கு அளித்துவிடாதீர்கள். நான் உங்கள் உலகில் தோன்றினேன் என்றாலும் நான் உங்கள் உலகைச் சேர்ந்தவனல்ல. நான் வேறோர் உலகைக் கற்பனை செய்துகொள்கிறேன். வேறோர் உலகில் வாழ்ந்துகொள்கிறேன்.

நான் உங்கள் மூலமாகப் பிறந்திருக்கிறேன். உங்களுக்காக அல்ல. என்னை வளர்ப்பதற்கு நன்றி. எனக்காக நீங்கள் செலவிடும் நேரம், பொருள், உழைப்பு அனைத்துக்கும் நன்றி. என்மீது நீங்கள் செலுத்தும் அன்புக்கு நன்றி. ஆனால், அந்த அன்பை ஒரு சங்கிலியாக மாற்றி என் கழுத்தில் சுற்றிவிடாதீர்கள். நான் இப்போது உங்கள் வீட்டில் தங்கியிருக்கிறேன். உங்கள் வீட்டின் நிழலும் கதகதப்பும் எனக்குத் தேவை.

ஆனால், எனது பயணம் வெளியேதான் ஆரம்பிக்கிறது. என்னை உங்கள் இடுப்பிலிருந்தும் தோளிலிருந்தும் கீழே இறக்கிவிடுங்கள். எனக்குக் கதகதப்பு போதாது, வெப்பமும் பெருமழையும் புயலும் பழக வேண்டும். நட்சத்திரங்களோடும் நிலவோடும் நான் உறங்க வேண்டும். விழுந்து, எழுந்து நானாகவே நடப்பதுபோல் முட்டி, மோதி நானே கற்க விரும்புகிறேன்.

நீங்கள் என் வில். அதற்காக என்னை எப்போதும் நீங்கள் ஏந்தி நிற்கக் கூடாது. நான் உயரே, உயரே செல்ல வேண்டுமானால் என்னை நீங்கள் உங்களிடமிருந்து விடுவிக்க வேண்டும். உலகை நோக்கிச் செலுத்த வேண்டும். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிறிய அம்பு. நாங்கள் பறப்பதற்காகவும் பாய்வதற்காகவும் பிறந்திருக்கிறோம். எங்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். எங்கள் வேகத்தைக் குறைக்காதீர்கள்.

எங்கள் பயணத்தை முன்கூட்டியே தீர்மானித்துவிடாதீர்கள். தடையின்றி, வானின் எல்லையைக் கடக்க விரும்புகிறோம் நாங்கள். அது சாத்தியமில்லை என்றோ அங்கெல்லாம் என்ன இருக்குமோ தெரியாது, போகாதே என்றோ தடுக்காதீர்கள். நான் எதிர்காலத்தின் ஒரு பகுதி. என் உலகை நான் அங்கே கட்டி எழுப்பப்போகிறேன். அது பெரியவர்களிடம் இருந்து பிரதி எடுக்காமல் நாங்களே எங்கள் கனவுகளைக் கொண்டு உருவாக்கப்போகும் உலகம்.

உங்கள் உலகில் வாழ்ந்தவரை நீங்கள் என் கரங்களைப் பற்றிக் கொண்டிருந்தீர்கள். இனி நீங்கள் என்னைப் பற்றிக்கொள்ளுங்கள். என் உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

(இனிக்கும்)

நேற்று என்பது இன்றைய நினைவு. நாளை என்பது இன்றைய கனவு. மென்மையும் இரக்கமும் பலவீனத்தின் அடையாளம் அல்ல; வலிமையின் அடையாளம். - கலீல் ஜிப்ரான், புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர்.

- marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்