அதிபரின் திருடுபோன கைகள் - ஜுவான் பெரோன் | கல்லறைக் கதைகள் 6

By சி.ஹரிகிருஷ்ணன்

ஜுவான் டொமிங்கோ பெரோன்! அர்ஜெண்டினா மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத பெயர். ஒரு காலத்தில் அர்ஜெண்டினா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனாலும், சமமான, ஏற்றத்தாழ்வற்ற சமூகமாக இல்லை. 1945 வரை ராணுவத்தினர் மற்றும் பணக்காரர்களின் ஆதரவைப் பெற்ற குறிப்பிட்ட சிலரின் கையில்தான் அதிகாரம் இருந்தது.

புதிய இயக்கம்: ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்த பெரோன், ராணுவ ஆட்சியில் தொழிலாளர் நலத் துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1944ஆம் ஆண்டு மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சரான பெரோன் கலந்துகொண்டார். இதே நிகழ்ச்சியில் நடிகையான இவாவும் கலந்து கொண்டார். இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. விரைவில் காதலர்களானார்கள். இருவரும் சேர்ந்துவாழத் தொடங்கினர். பெரோனுக்கு 48 வயது. இவாவுக்கு வயது 24.

ஏற்கெனவே ஏழை எளிய மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்த இவாவுக்கு அரசியலில் ஆர்வம் வந்தது. உடனே தொழிற்சங்கங்களை ஆரம்பித்தார். தொழிலாளர்கள் கையில்தான் சகல அதிகாரங்களும் வசதிகளும் இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில், ஜுவான் டொமிங்கோ பெரோன் புதியதொரு இயக்கத்தைத் தொடங்கினார். அவரது கொள்கைகள் ‘பெரோனிசம்’ எனப்பட்டன.

அதிரடி கைது: கிட்டத்தட்ட பொதுவுடைமைச் சிந்தனைகளை அடியொற்றியே அவரது கொள்கைகளும் இருந்தன. இதனால், அவருக்குப் பின்னால் அர்ஜெண்டினா தொழிலாளர்கள் மட்டுமல்ல, மக்களும் திரண்டனர். தொழிலாளர்கள், ஏழை மக்களிடம் பெரோனின் புகழும் இவாவின் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்தன. இருவரும் தொழிலாளர்கள் நலனுக்காகக் கடுமையாக உழைத்தனர். அதனால், இவர்கள் மேல் ராணுவமும் தொழிலதிபர்களும் மிகவும் கோபம் கொண்டனர். விரைவில் பெரோன் கைது செய்யப்பட்டார். இந்தக் கைதுக்கு எதிராக, மூன்றரை லட்சம் தொழிலாளர்களை இணைத்தார் இவா. அவர்கள் அனைவரும் பெரோனுக்கு விடுதலை கேட்டுப் போராட்டம் நடத்தினர். ஆறு நாள்களுக்குப் பிறகு விடுதலையானார் பெரோன். இதன் மூலம் இவாவின் மீதான பெரோனின் அன்பு அதிகமானது. இவாவைச் சட்டப்பூர்வமாகத் திருமணம் புரிந்துகொண்டார்.

தேடிவந்த அதிபர் பதவி: 1946இல் நடந்த தேர்தலில் மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பெரோன் அர்ஜெண்டினாவின் அதிபரானார். தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம், சலுகைகள், வேலை நேரத்தில் நியாயமான அணுகுமுறை என எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன. ஆனால், அர்ஜெண்டினாவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டது. இதற்கு ‘பெரோனிசம்’தான் காரணம் எனத் தொழிலதிபர்கள் நினைத்தனர். எனவே, அவர்கள் பெரோனை ஆட்சியிலிருந்து இறக்கக் கடுமையாக முயற்சித்தார்கள். அவர்களுக்குச் சில அரசியல் இயக்கங்களும் துணைபோயின. எதிர்பாராத விதமாக பெரோனின் மனைவி இவா 1951இல் புற்றுநோயால் மரணம் அடைந்தது பெரோனுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்தது.

ஆட்சி கவிழ்ப்பு: 1952 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பெரோன் தனது பழைய செல்வாக்கின் காரணமாக வெற்றி பெற்றார். ஆனால், முன்பு போல் ஆட்சி செய்வது அவ்வளவு சுலபமாக இல்லை. நாடெங்கும் ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. அவற்றை அடக்கும் சக்தி பெரோனுக்கு இல்லை. இதனைக் காரணமாக வைத்துத் தேசியப் பாதுகாப்புப் படையினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பெரோனைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. எனவே, பெரோன் 1955ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பி பராகுவேவுக்குச் சென்றார். பிறகு ஸ்பெயினில் தஞ்சமடைந்தார்.

பெரோனின் இயக்கம் வலதுசாரி, இடதுசாரி என இரண்டாகப் பிளவுபட்டது. 1973 வரை பெரோனின் இயக்கம் தலைதூக்க முடியவில்லை. நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தால் மீண்டும் தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டது. பெரோன் நாடு திரும்பினார். 1974ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் பெரோன் மரணமடைந்தார்.

கைகள் மாயம்: போனஸ் அயர்ஸில் உள்ள லா சகாரிடா இடுகாட்டில் பெரோன் புதைக்கப்பட்டார். ஜூன் 10, 1987இல் அவரது கல்லறை சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட அவரது கைகளையும் வாள் உள்பட அவரது உடைமைகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். யார் இதைச் செய்தது என்பது மர்மமாகவே இருந்தது.
பெரோனை அவமரியாதை செய்யும் நோக்கத்துடன்தான் கல்லறை உடைக்கப்பட்டு அவரது கைகளும் உடைமைகளும் எடுத்துச் செல்லப்பட்டன என்று பரவலாகப் பேசப்பட்டது.
பெரோனின் கைகளும் உடைமைகளும் திருடு போய் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரானிஸ்ட் உறுப்பினர்கள் சிலருக்குக் கடிதம் ஒன்று வந்தது. அதில், ‘எட்டு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்தால்தான், கைகளையும் பொருள்களையும் திருப்பிக் கொடுப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை அந்த உறுப்பினர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இனிமேல் இதுபோலத் தவறுகள் நடக்காமல் இருக்க, பெரோனின் உடலையும் உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு முடிவு செய்தது. சான் விசன்டின் புறநகர்ப் பகுதியான போனஸ் அயர்ஸில், பெரோன் முன்பு கோடைக்கால இருப்பிடமாகப் பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு அருங்காட்சியம் செயல்பட்டுவந்தது. அந்த அருங்காட்சியகத்தில் பெரோனின் உடலை வைத்துப் பாதுகாப்பது என முடிவெடுக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அருங்காட்சியகத்துக்கு அவரது சமாதி மாற்றப்பட்டது.


அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அருங்காட்சியகப் பகுதியைச் சென்றடையும் வரை வன்முறைகளைத் தவிர்க்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது. இருப்பினும், விழாவுக்கான அனுமதி குறித்த வன்முறையில் பெரோனிஸ்ட் தொழிற்சங்கம் ஈடுபட்டதில் சிலருக்குக் காயமேற்பட்டது. ஒருவழியாக அவரது உடல் அருங்காட்சியகத்தில் உள்ள பிரத்யேகச் சமாதியில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

மகள் அல்ல: பெரோனுக்கு முறைகேடாகப் பிறந்தாகக் கூறப்படும் மார்த்தா ஹோல்காடோ, தான் பெரோனின் வாரிசு என்றார். பெரோனின் உடல் இடமாற்றம் செய்யப்பட்டதால் அவரது சடலத்திலிருந்து எடுக்கப்படும் மாதிரி மூலம் டி.என்.ஏ., ஆய்வு செய்ய ஹோல்காடோவிற்கு வாய்ப்பு கிடைத்தது. 15 ஆண்டுகளுக்குப் பின், நவம்பர் 2006இல் வெளியான ஆய்வு முடிவில் அவர் பெரோனின் மகள் அல்ல என்று தெரியவந்தது. ஹோல்காடோ கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜூன் 7, 2007இல் இறந்தார்.

> முந்தைய அத்தியாயம்: கொடுங்கோல் மன்னன் தைமூர்... பேரைக் கேட்டாலே சும்மா அதிரும் | கல்லறைக் கதைகள் 5

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE