பஞ்சம், வறுமை, மருத்துவ வசதியின்மை, மூடநம்பிக்கைகள் பரவியிருந்த ஒரு காலகட்டத்தில், பிரசவங்களின்போது பெண்கள் அதிகம் இறந்துபோவதைப் பார்த்து மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர் மனம் வருந்தினார். பெண் மருத்துவர்கள், தாதியருக்கு மருத்துவக் கல்வி அளிக்க வேலூர் நகரத்தில் அவர் தனது கனவையும் அர்ப்பணிப்பையும் மூலதனமாக்கி உருவாக்கிய வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தற்போது நூற்றாண்டு கண்டிருக்கிறது.
3,000 படுக்கைகள், தினசரி 9,000 நோயாளிகள் வருகை, மருத்துவம், தாதிப் பணி, இதர மருத்துவத் துறைகள் சார்ந்து 175 முதுநிலைப் படிப்புகள், பி.எச்டி., ஆண்டுதோறும் 2,500 மாணவர்கள் சேர்க்கை என்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி விரித்திருக்கும் கிளைகள் ஏராளம்.
இந்தியாவின் முதல் நரம்பியல் மையம்
நரம்பியல், நரம்பியல் அறுவைசிகிச்சைக்கான தனிப் பிரிவு இந்தியாவில் இங்கேதான் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. 1949-ல் ஜேக்கப் சாண்டி, பல்வேறு தடைகளைத் தாண்டி இப்பிரிவை உருவாக்கினார். நரம்பியல் அறுவைசிகிச்சைக்கான முறையான பயிற்சித் திட்டம் 1958-ல் இங்கே தொடங்கப்பட்டது. இங்கிருந்துதான் சிறப்புத் தகுதியும் நிபுணத்துவமும் கொண்ட பல நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இந்தியா முழுவதும் சென்று புகழ்பெற்றனர். ஜேக்கப் சாண்டியின் மகன் மாத்யூ சாண்டி இவர்களுடன் 1980-ல் இணைந்தார். அப்போதுதான் நுண் நரம்பியல் அறுவைசிகிச்சை (மைக்ரோ-நியூரோ சர்ஜரி) பிரிவு தொடங்கப்பட்டது. மற்ற நரம்பியல் அறுவைசிகிச்சைத் தொழில்நுட்பங்களும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன.
அறுவைசிகிச்சை, வெளிநோயாளிகள் சிகிச்சை மட்டுமின்றி ஆய்வுப் பணிகளுக்கும் தொடர் ஊக்கம் அளிக்கப்படுகிறது. சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் எழுதி சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகளே இதற்குச் சான்றுகள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நரம்பியல் அறுவைசிகிச்சை சார்ந்த சிறந்த பங்களிப்புகளைச் செய்தவர்கள் இவர்கள். ஜேக்கப் சாண்டி உருவாக்கிய ‘நியூராலஜி சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்களாக இதுவரைப் பொறுப்பேற்றவர்களில் ஐந்து பேர் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.
மருத்துவ மாணவர்களின் கனவு வளாகம்
இந்திய அளவில் சிறந்த பத்து மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தொடர்ந்து உயரத்தில் இருக்கும் இந்தக் கல்லூரியில் ஒருவர் பயிற்சி பெறுவதென்பது உலகளாவிய அளவில் இன்றும் கனவாகவே பார்க்கப்படுகிறது. இங்கே பயிற்சி பெறும் ஒரு மாணவருக்கு மருத்துவத் திறன் மட்டுமல்ல; சிறந்த மனிதாபிமானமும் பயிற்றுவிக்கப்படுகிறது. நோயாளிகளிடம் பரிவுடன் நடந்துகொள்ளும் நெறிமுறைகள் குறித்து வாரந்தோறும் மூத்த மருத்துவர்களுடன் கலந்தாலோசனை நடக்கும்.
மூத்த மருத்துவர்களும் பேராசிரியர்களும் தங்கள் பணியில் ஏற்பட்ட நெருக்கடியான சூழல்நிலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். தாங்கள் செய்த தவறுகளையும் பொறுமையை மீறிய சம்பவங்களையும் மாணவர்களிடம் கூறி, அதுபோன்ற சந்தர்ப்பங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பொறுமை இழக்கக் கூடாது என்பதையும் எடுத்துச்சொல்வார்கள்.
கட்டாய கிராம சேவைப் பயிற்சி
கல்லூரிக்கு வெளியேயும் எல்லா நிலைகளில் உள்ள மக்களின் ஆரோக்கிய நிலை, சமூகப் பொருளாதாரச் சூழல்களைத் தெரிந்துகொள்வதற்கான நிகழ்ச்சிகளும் உண்டு. மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று கட்டாயம் பணியாற்ற வேண்டுமென்பது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது. ‘கம்யூனிட்டி ஒரியன்டட் மெடிசின்’ என்ற பெயரில் கனியம்பாடி மண்டலத்துக்கு அருகே மூன்று வாரம் தங்கி மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள்.
பாகயத்தைச் சேர்ந்த ‘கம்யூனிட்டி ஹெல்த் அண்ட் டெவலப்மெண்ட’ மருத்துவமனையின் ஒருங்கிணைப்பில் இந்தப் பயிற்சி நடைபெறும். அதுபோலவே ‘ரூரல் யூனிட் ஃபார் ஹெல்த் அண்ட் சோஷியல் அபேர்ஸ்’ (RUHSA), கே.வி. குப்பத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான தொழில் பயிற்சிக் கல்லூரி ஒன்றை நடத்திவருகிறது.
எளிய ஆரம்பம், பிரம்மாண்ட வளர்ச்சி
சொந்த நிலமின்றி வாடகைக் கட்டிடங்களில் எளிய முறையில் வேலூரில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்வி பயன் கருதாத எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உழைப்பில் இன்று 49 பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பயிற்சிகளை அளித்து வருகிறது. இங்கே படித்துச் செல்லும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே குறிப்பாக, கிராமங்களுக்குச் சென்று சேவை செய்பவர்கள் அதிகம் என்கிறார் இக்கல்லூரியின் முதல்வர் அன்னா பி. புலிமூட்.
ஏற்றத்தாழ்வுகளும் ஏழ்மையும் வறுமையும் நிலவும் ஒரு சமூகத்தில் மருத்துவரின் கடமை என்ன என்பதை நினைவுகூரும் முன்மாதிரிக் கல்லூரியாகத் திகழ்வதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதித்திருக்கும் முதன்மை முத்திரை.
26CHSRS_VELORE11 ஐடா சோபியா ஸ்கடர் சி.எம்.சி.யின் புகழ்பெற்ற மாணவர்கள்
விநாயக் சென் – குழந்தை நல மருத்துவர், மனித உரிமை செயல்பாட்டாளர், ஜோனாத்தன் மன் விருது பெற்றவர்.
கே.ஏ.ஆப்ரகாம் – இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
சுரேஷ் டேவிட் – எமர்ஜன்சி சிகிச்சையில் முன்னோடி
நாகருர் கோபிநாத் – இதய அறுவைசிகிச்சை நிபுணர், பத்மஸ்ரீ விருதுபெற்றவர்.
எத்தனை மருத்துவர்கள்?
உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒன்றுக்கும் குறைவாகவே மருத்துவர் இருக்கிறார்.
ஆஸ்திரேலியா - 3.374 : 1000
பிரான்ஸ் - 3.227 : 1000
பிரேசில் - 1.852 : 1000
பாகிஸ்தான் - 0. 806 : 1000.
இந்தியா - 0.62:1000
ஆப்கானிஸ்தான் - 0.304 : 1000
சி.எம்.சி.யின் சாதனை மைல்கற்கள்
# இந்தியாவின் முதல் நர்சிங் கல்லூரி – 1946
# தொழுநோயாளிகளுக்கு முதல் மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை – 1948
# தெற்கு ஆசியாவில் முதல் நரம்பியல் அறிவியல் பிரிவு – 1948
# இந்தியாவில் முதல் வெற்றிகரமான ஓபன் ஹார்ட் அறுவைசிகிச்சை – 1961
# இந்தியாவின் முதல் மறுவாழ்வு நிறுவனம் - 1966
# இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை – 1971
# எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை – 1986
# இந்தியாவின் முதல் கரோடிட் பைபர்கேஷன் ஸ்டென்டிங் நடைமுறை நிகழ்த்தப்பட்டது – 1996
# உலகின் முதல் டிரான்ஸ்செப்டால் கரோடிட் ஸ்டென்டிங் நடைமுறை – 1996
# உலகின் முதல் டிரான்ஸ்ஜகுலர் மிட்ரால் வால்வுலோபிளாஸ்டி நடைமுறை – 1996
# இந்தியாவின் முதல் ஏ.பி.ஓ. இன்கம்பேடபிள் ரீனல் டிரான்ஸ்பிளாண்ட் சிகிச்சை நடைபெற்றது- 2009
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago