ஸ்விஸ் எனும் சொர்க்கம் 2: பேருந்துப் பயணமும் லொசான் சந்தையும்

By ஜி.எஸ்.எஸ்

லொசான் நகரில் பேருந்தில்தான் ரிப்போன் சந்தைக்குப் பயணமானோம். “மூன்று கிலோமீட்டர்தானே, நடந்தே சென்று விடலாம்” என்று நான் சொன்னபோது, “பேருந்து அனுபவம் வேண்டாமா?” என்று கேட்டார் மகன். சுவிட்சர்லாந்தில் பேருந்துப் பயணம் என்பது சுகமானது. சாலைகள் தூசில்லாமல் இருக்கும் என்பதால், இருக்கைகளும் பளிச்.

ஒரு செயலியைத் திறன்பேசியில் தரவிறக்கம் செய்து, அதன் வழியே நாம் நிற்கும் பேருந்து நிலையத்தில் எந்தெந்த வழித்தட பேருந்துகள் எப்போது வந்து சேரும் என்கிற விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். சொன்ன நேரத்தில் சரியாகப் பேருந்தும் வந்துசேர்கிறது. ஒருவேளை சில நிமிடங்கள் தாமதமானாலும் அந்த விவரமும் செயலியில் வெளியாகிறது. ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் மரத்தால் செய்யப்பட்ட (பனிப் பிரதேசம் என்பதால்) பெஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தன.

பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. வெளியிலிருந்து பொத்தானை அழுத்தினால் கதவுகள் திறக்கின்றன. பெரும்பாலானோர் ‘பாஸ்’ வைத்திருப்பதால், பேருந்துகளில் நடத்துநர் இருப்பதில்லை. பயணிகளின் வசதிக்காகப் பேருந்தின் உள்ளே ஆங்காங்கே சில பொத்தான்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. யாரேனும் இறங்க வேண்டுமென்றால், அந்தப் பொத்தானை அழுத்தினால் போதும், அப்போது ஒரு விளக்கு எரியும், அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நிற்கும். ஒருவேளை, யாரும் அந்தப் பொத்தானை அழுத்தவில்லை என்றாலோ பேருந்து நிறுத்தத்தில் யாரும் ஏறவில்லை என்றாலோ பேருந்து நிற்காமல் செல்லும். சில பேருந்துகள் ஆங்காங்கே மின்சாரத்திலும் ஓடுகின்றன.

பேருந்து பயணங்களின்போது பரிசோதகர்களை அரிதாகவே பார்க்க முடிந்தது. ஆனால், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் 100 ஸ்விஸ் ஃப்ராங்க் (9,000 ரூபாய்) அபராதமாக வசூலிக்கப்படுகிறது. பல பேருந்துகளில் சைக்கிளைக் கொண்டுசெல்ல அனுமதி உண்டு. நாய் போன்ற செல்லப் பிராணிகளையும் எடுத்துச் செல்லலாம். ஆனால், அதற்கென வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

லொசானிலுள்ள சனிக்கிழமை சந்தையில் வித்தியாசமான பொருள்களைக் காண முடிந்தது. இந்தச் சந்தை வீதிகளில் சிலர் தங்களது இசைத் திறமையைக் காட்டி இரந்து வாழ்கிறார்கள். நாங்கள் அங்கு சென்றிருந்தபோது மணல் கலைஞர் ஒருவர் நாயை உருவாக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்க்கும் வரை, அது நிஜ நாயைப் போலவே தோற்றமளித்தது. மேலும் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழு நடனம் ஆடிக்கொண்டிருக்க, அருகே தான்சானியா உணவுப் பொருள்களும் விற்பனைக்கு இருந்தன. ‘ககேரா’ எனும் தான்சானியாவின் வட மேற்குப் பகுதியைச் சேர்ந்த சிறு விவசாயிகள் அந்தப் பகுதியில் விளைவிக்கும் காபியை, லொசான் சந்தையில் விற்றுக் கொண்டிருந்தனர்.

(பயணம் தொடரும்)

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com

முந்தைய அத்தியாயம்: ஸ்விஸ் எனும் சொர்க்கம் 1: அழகிய லொசான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE