அதன் கொழகொழப்பான கழுத்தை வாஞ்சையோடு தடவியபடி கேட்டாள் ஆலிஸ்: “உனக்கு என்னைப் பிடிக்குமா?”
“ஏன் இப்படியொரு கேள்வி?” என்று நிமிர்ந்து பார்த்தது முயல்.
“இல்லை, எல்லாரும் என்னைத் திருத்திக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அது சரியில்லை, இது சரியில்லை. நீ அப்படிச் செய்திருக்க வேண்டும், இப்படிச் செய்திருக்கக் கூடாது. நீ ஏன் முயலைத் துரத்திக்கொண்டு ஓடினாய்? உன்னை யார் குழிக்குள் இறங்கச் சொன்னது? பெண் பிள்ளையாக இருந்துகொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா? அப்படி எல்லாம் செய்யலாமா? அம்மா, அப்பா தொடங்கி யார் என்றே தெரியாதவர்கள் வரை எல்லாரும் ‘நை நை’ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆலிஸ், நீ நல்ல குழந்தை என்று யாராவது சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதனால்தான் கேட்கிறேன். உனக்காவது என்னைப் பிடிக்குமா?”
முயல் ஒரு நொடி யோசித்தது. மறு நொடி தீர்மானமாகத் தன் தலையை இடதும் வலதுமாக ஆட்டியது. “மன்னிக்கவும் ஆலிஸ். எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.”
» புதுச்சேரியில் செப்.17-ல் மிலாடி நபி பொது விடுமுறை: அரசு அறிவிப்பு
» குண்டடம் அருகே டூவீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டிடத் தொழிலாளி உட்பட 2 பேர் உயிரிழப்பு
ஆலிஸ் அதிர்ந்து போனாள். “என்னது, உனக்கும் என்னைப் பிடிக்கவில்லையா? உன்னை எவ்வளவு கொஞ்சுகிறேன்! கடைசியில் நீயும் இப்படிச் சொல்லிவிட்டாயே! போ, இனி என்னிடம் பேசாதே.”
அவள் கண்களில் இருந்து குபுகுபு என்று கண்ணீர் வழிந்து ஓட ஆரம்பித்தது.
முயல் தனது முன்னிரு கால்களால் அவள் தொடையைத் தட்டிக்கொடுத்தது. “உனக்கே உன்னைப் பிடிக்காதபோது, மற்றவர்களுக்கு எப்படி உன்னைப் பிடிக்கும்?”
“என்னது எனக்கே என்னைப் பிடிக்கவில்லையா? நான் அப்படிச் சொன்னேனா?”
“சொல்ல வேண்டுமா என்ன? பார்த்தாலே தெரிகிறதே. நீ ஏன் மற்றவர்களுக்கு உன்னைப் பிடித்திருக்க வேண்டும் என்று காத்திருக்கிறாய்? நீ ஏன் மற்றவர்களின் சொற்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்? யாரும் என்னைத் திட்டக் கூடாது, எல்லாரும் என்னைக் கொஞ்ச வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறாய்? உலகம் சொன்னால்தான் நீ நல்ல குழந்தையாக மாறுவாயா? உன்னை நாலு பேருக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்? ஏன் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவாயா? இப்படி ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தால் உன்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?”
“என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?”
“என்னைப் போல் மாறு என்கிறேன். என்னை ஏன் எல்லாருக்கும் பிடிக்கிறது தெரியுமா? என்னை ஏன் எல்லாரும் ஆசையாகத் தூக்கி, தூக்கி வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா? எனக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதனால், மற்றவர்களுக்கும் என்னைப் பிடிக்கிறது. அப்படியானால் என்னைப் பிடிக்காதவர்களே இந்த உலகில் இல்லையா என்று கேட்டால் நிச்சயம் இருப்பார்கள்.
எனக்கு அவர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. நீ ஏன் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டிருக்கிறாய்? சின்ன அதிர்வு கேட்டாலும் ஏன் அச்சத்தோடு துள்ளிக் குதிக்கிறாய்? உடைந்து விழும் அளவுக்கு ஏன் இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறாய் என்று குத்திக்காட்டவும் கேள்வி கேட்கவும் நிச்சயம் பலர் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய சொற்கள் எனக்குத் தேவையில்லை. என் காதுகள் நீளமானவை. ஆனால், எல்லாருடைய சொற்களையும் நான் உள்ளே அனுமதிப்பதில்லை.”
“நீ முயல். நான் சிறுமி. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று உன்னைப் போல் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து என்னால் வாழ முடியுமா என்ன?”
“ஏன் முடியாது? ஒரு சிறுமி இதை எல்லாம்தான் செய்ய வேண்டும், இதை எல்லாம் செய்யக் கூடாது என்று உன் உலகம் போட்டுவைத்திருக்கும் விதிகளை நீ ஏன் ஏற்க வேண்டும்? உனக்கு உன்னைப் பிடிப்பதைவிட மற்றவர்களுக்கு உன்னைப் பிடிப்பது முக்கியம் என்று ஏன் நீ நினைக்க வேண்டும்? உன்னை நீ ஏற்பது முக்கியமா, மற்றவர்கள் ஏற்பதா? உன் மீது உனக்கு உறுதியான நம்பிக்கை இல்லாதபோது, மற்றவர்கள் எப்படி உன்னை நம்புவார்கள்? உன்னை நீ நேசிக்காதபோது, மற்றவர்களின் நேசத்தை எப்படிப் பெறுவாய்?”
“என்னை நானே நேசிக்க ஆரம்பித்தால், தலைக்கனம் கூடிவிடாதா?”
முயல் ஆலிஸை வருடிக்கொடுத்தது. “உன்னை நீயே வழிபட ஆரம்பித்தால்தான் தலைக்கனம் கூடும். ஆலிஸை ஆலிஸைத் தவிர வேறு யாராலும் முழுக்கப் புரிந்துகொள்ள முடியாது. ஆலிஸை ஆலிஸ் தவிர வேறு யாராலும் நேசிக்க முடியாது. நீ குறைகளோடும் போதாமைகளோடும் வாழும் உயிர் என்பதை நன்கு அறிவாய்.
அந்த அறிதலோடு சேர்த்து உன்னை நீ நேசிக்க வேண்டும் என்கிறேன். ஐயோ, நான் ஒரு சின்னஞ்சிறு சிறுமி, நான் எப்படி முயலைத் துரத்திக்கொண்டு குழிக்குள் இறங்க முடியும் என்று நீ தயங்கி இருந்தால் ஓர் அற்புத உலகை இழந்திருப்பாய். நல்லவேளை நீ அப்படிச் செய்யவில்லை. அதுதான் ஆலிஸ். அந்தத் துறுதுறுப்பான ஆலிஸை நீ நேசிக்க வேண்டும்.
அப்போதுதான் பல அற்புத உலகங்களில் நீ கால் பதிக்க முடியும். உன் துணிவை நீ நேசிக்க வேண்டும். யாரும் உன்னைத் திருத்தவோ மாற்றவோ நீ அனுமதிக்கக் கூடாது. நான் இப்படித்தான் இருப்பேன். இப்படி இருந்தால்தான் நான் ஆலிஸ் என்று அவர்களுக்கு நீ பதில் அளிக்க வேண்டும். எனக்கு அழும் ஆலிஸைப் பிடிக்காது. தயங்கும் ஆலிஸைப் பிடிக்காது. மற்றவர்களைக் கண்டு அஞ்சும் ஆலிஸைப் பிடிக்காது. தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அழகிய ஆலிஸைத்தான் எனக்குப் பிடிக்கும். உனக்கு?”
“ஆம், எனக்கும் என்னைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.”
முயல் ஒரே தாவாக தாவி வந்து தோளில் அமர்ந்ததோடு ‘பச்சக்’ என்று ஒரு மென்மையான முத்தத்தையும் ஆலிஸின் கன்னத்தில் பதித்தது. “என்னை மட்டுமல்ல, உன்னையும் பிடித்திருக்கிறது” என்று கிசுகிசுத்தாள் ஆலிஸ்.
‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ நாவல் 159 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த லூயி கரோல் இதை எழுதியிருக்கிறார். இதுவரை 175 மொழிகளில் வெளிவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago