பெண்கள் 360: போராட்டமும் ஓய்வும்

By ப்ரதிமா

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிச் சுற்றுவரை சென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், அதற்கான வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கும் முன்னரே அவரது எடை நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம்கள் அதிகமாக இருப்பதாகச் சொல்லி இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டியில் தோற்றாலும் வென்றாலும் பதக்கம் உறுதி என்கிற நிலையில் வெளியான இந்த அறிவிப்பு, வினேஷை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையுமே கலங்க வைத்தது. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சிலர் கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தனர். அவர்களில் வினேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான போராட்டங்களால் சோர்ந்திருந்த அவர் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு தகர்ந்தது. இதையொட்டி, ‘தொடர்ந்து போராட முடியாது’ என்கிற அறிவிப்புடன் மல்யுத்தத்தில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரும் என் மகன்தான்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் வென்றார். தன் மகனின் வெற்றி குறித்துப் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் குறித்துச் சொன்னவை இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடந்து பலரையும் நெகிழ வைத்தது. “என் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. தங்கப் பதக்கம் வென்றவரும் நம் மகன்தான்” என்று தெரிவித்திருந்தார். அர்ஷத் நதீமின் தாய் ரஸியா பர்வீன், “நீரஜ் சோப்ராவும் எனக்கு ஒரு மகன் மாதிரிதான். என் மகனுக்கு அவரும் ஒரு சகோதரனே” எனச் சொல்லியிருக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் எதிரணியில் விளையாடுகிறவர்கள் எதிரிகள் அல்ல என்பதைத் தங்கள் பக்குவமான சொற்களால் வெளிப்படுத்திய அம்மாக்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் ‘லாபட்டா லேடீஸ்’

உச்ச நீதிமன்றத்தின் 75ஆம் ஆண்டு விழாக் கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்ற ஊழியர்களிடையே பாலினச் சமத்துவம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத் துடன் ‘லாபட்டா லேடீஸ்’ இந்தித் திரைப்படம் ஆகஸ்ட் 9 அன்று உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்புத் திரையிடலாக இது அமைந்தது. பாலினச் சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கிரண் ராவ், தயாரிப்பாளர் ஆமீர் கான் ஆகிய இருவரும் திரையிடலில் பங்கேற்று ஊழியர்களிடையே கலந்துரையாடினர். நீதிமன்ற ஊழியர்களிடையே சமூகம் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திவருவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE