நள்ளிரவில் உறக்கத்தின் நடுவில் விழிக்கும்போதுகூட செல்போனைப் பார்க்கும் பழக்கம் உருவாகிவிட்டது. எப்போதும் உலகத்தோடு, செய்திகளோடு, மற்றவர்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். தனியாக இருந்தாலும் மனம் சம்பந்தமுள்ளதையோ சம்பந்தமற்றதையோ அசைபோட்டுக்கொண்டே இருக்கிறது. 24 மணிநேரத் தொலைக்காட்சியும் செல்போனும் நம்மையும் அறியாமலேயே நம்மை ஓர் ஊடகமாக்கியுள்ளன. நாம் நம்முடன் எப்போதாவது ஆசுவாசமாக உட்கார முடிகிறதா? முற்றிலும் வெளி உலகத்தோடு தொடர்பின்றி மனஅமைதி யோடு நம்மால் 15 நிமிடங்கள் உட்கார முடியுமா?
முற்றிலும் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட இந்த உலகம் மிகச் சமீபத்தில்தான் தோன்றியது. கண்ணுக்குத் தெரியாமலேயே நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் இந்த வலையில் நாம் நம்மைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். இயற்பியலாளரும் நாவலாசிரியருமான ஆலன் லைட்மேன், நமது விழித்திருக்கும் மனதில் பாதிப் பகுதியைச் சும்மா இருப்பதற்கும் நம்மைப் பிரதிபலிப்பதற்கும் ஒதுக்க வேண்டும் என்கிறார்.
நிச்சலனம், அந்தரங்கம், சாவகாசம், சுயபிரதிபலிப்பை மேம்படுத்துவதன் மூலம் நமது அகத்தின் சுயத்துக்கு மரியாதை அளிப்பது அவசியம் என்கிறார். அப்படிச் செய்யாமல்போனால் நமது படைப்புத்திறன் மழுங்கி பதற்றமே வாழ்க்கையாக ஆகிவிடும் என்கிறார்.
கல்வியாக தற்கண உணர்வு
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் ‘மைண்ட்ஃபுல் ஸ்கூல்ஸ்’, ‘மைண்ட்புல் எஜுகேஷன்’ என்ற பெயர்களில் தற்கண உணர்வுக் கல்வி வலியுறுத்தப்படுகிறது. 2015-ம் ஆண்டில் மன-உடல் கல்வியாளரான ஸ்டேசி சிம்ஸ் ‘மைண்ட்ஃபுல் மியூசிக் மொமண்ட்ஸ்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் நான்கு நிமிடங்கள் செவ்வியல் இசையைக் கேட்கச் செய்தார். இது பள்ளி மாணவர்களிடம் நல்ல விளைவுகளை உருவாக்கியது. வேலை பார்க்கும் இடங்களில் அரை மணி நேரம் அமைதியாகத் தனித்திருக்கும் சூழலையும் உருவாக்கலாம் என்கிறார் ஆலன் லைட்மேன்.
ஆறிலிருந்து 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்குத் தினசரி பள்ளி நேரத்தில் 10 நிமிடங்கள் இதற்கு ஒதுக்கலாம். இந்த அவகாசத்தில் அவர்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதலாம். அந்தந்த வாழ்க்கை முறை, கலாச்சாரம், சமூகப் பின்னணிக்கு ஏற்ப பள்ளிகளில் இந்த அமைதி நேரத்தை அமைக்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு சுயபரிசீலனை பாடமென்ற ஒன்றைக் கொண்டுவந்து, அவர்களது வாழ்க்கை, வாழ்க்கை இலக்குகள் சார்ந்து வாசிப்பு, எழுத்து, செயல்முறைப் பயிற்சிகளை ஊக்குவிக்கலாம்.
வேலை இடங்களில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி தியானம், சுயபிரதிபலிப்பு, அமைதியாக உட்கார்ந்திருப்பதை ஊக்குவிக்கலாம். அந்த அறையில் ஸ்மார்ட்போன்களுக்கோ கணினிக்கோ அனுமதியளிக்கக் கூடாது. மதிய உணவுக்காக விடப்படும் நேரத்தையொட்டி அந்த நேரத்தை வைத்தல் கூடாது.
அமைதியான உலகம்
வீடுகளில் ஸ்மார்ட்போன்கள், கணினிகள், தகவல் தொடர்பு கருவிகளை உபயோகிக்காமல் இருக்கும் அவகாசத்தை அவ்வப்போது உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆலன் லைட்மேன். பொது இடங்களில் கட்டாயமாக டிஜிட்டல் கருவிகளுக்கு இடமற்ற மண்டலங்களை உருவாக்க வேண்டும். சுயபரிசீலனையும் அமைதியும் கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு இதுபோன்ற சூழல் அவசியம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல; நமக்கும் அந்த அமைதி அவசியம் என்று அவர் வாதிடுகிறார்.
மனத்தின் பழக்கங்களை மாற்றுவது சவாலானதுதான். ஆனால், சற்று முயன்றால், கொஞ்சம் உறுதிப்பாடு இருந்தால் சாத்தியம்தான். ஒரு நாளில் எதுவுமே செய்யாமல் இருப்பதற்கு ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்குவோம். பால்கனியிலோ படுக்கையறையின் ஜன்னலருகிலோ உட்கார்ந்து வேப்பமரக் கிளையில் அமர்ந்திருக்கும் காகத்தை உளப்பூர்வமாகக் கவனிப்பதும் தியானத்துக்கு ஒப்பானதுதான்.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இரையை எடுத்துக்கொண்டு போகும் எறும்புகளைப் பத்து நிமிடம் பாருங்கள். இப்படியான பயிற்சிகளின் மூலம், நாம் நமக்கு ஒரு பரிசை அளிக்கிறோம். இது நமது பணித் திறனையும் மனிதர்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் மேம்படுத்த உதவும். இந்த அமைதியின் வாயிலாக ஆக்கபூர்வமான ஆற்றல் வெளிப்பட அதிக சாத்தியமுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago