வேலை செய்பவருக்கு வேலை! வேலை செய்யாதவருக்கு ப்ரமோஷனா?

By ஆர்.கார்த்திகேயன்

எங்க கம்பனி பாலிஸி ” என்று ஒரு பஞ்ச் டயலாக் சொன்னார் நண்பர். “வேலை செய்யறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு ப்ரமோஷன் கொடு!” என்று சொல்லிச் சிரித்தார். அது எப்படி என்று கேட்டேன். “யார் வேலை செய்யறாங்க, யார் ஓ.பி அடிக்கிறாங்கன்னு யாருக்கும் தெரியாது சார். இதுல ஹெச். ஆர். கொண்டு வந்த அப்ரைசல் பலருக்கு “ஆப்பு”ரைசலாத்தான் ஆயிற்று!” என்றும் சொன்னார்.

ஹெச்.ஆர். என்பது ஒரு கம்பனியின் மனசாட்சி. அது அந்த நிறுவன நிர்வாகக் குழு கொண்டுள்ள விழுமியத்தின் பிரதிபிம்பம் என்றெல்லாம் சொன்னேன். நண்பர் அசரவில்லை. “புதுசா வேலைக்குச் சேரும் பசங்களுக்கு அப்ரைசல் பற்றிக் கொஞ்சம் வெளிச்சம் காட்டுங்களேன்” என்றார். இதோ அந்த வெளிச்சம்!

வேலைச் செயல்பாட்டை வைத்துத்தான் சம்பளம், பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் என நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. ஒருவரின் வேலையை மதிப்பீடு செய்வது அவருடைய உடனடி மேலதிகாரியின் வேலை. நிறுவனத் தேவைகளுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ப வேலைச் செயல்பாட்டின் அளவீடுகளை நிர்ணயம் செய்து அவற்றை மொத்தமாகப் பராமரிப்பது மனித வளத்துறை.

கையால் வேலை செய்து அதன் ஆக்கம் பவுதிக அளவில் வெளித் தெரியும்போது அங்கு செயல்பாட்டு நிர்வாகம் தெளிவாக நடக்கிறது. இத்தனை பாகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தெளிவான வரையறைகள் வைப்பதும் அவை செய்து முடித்தாயிற்றா என்று பரிசோதிப்பதும் எளிது.

ஆனால் ஒரு மேலாளரின் பணியை நேரம், ஆக்கம் எனப் பிரித்து அளவிடுவது மிகவும் கடினம். சில இடங்களில் சிறிது நேரம் வேலை செய்தாலும் அந்தப் பணி மற்ற பணிகளுக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். வேலையின் தன்மையைக் கண்டு அளவீடுகள் அமைக்க வேண்டியிருக்கும்.

காலந்தவறாமை ஒரு தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளிக்கு மிகவும் அவசியமான நிர்வாகத்திறன். காரணம் ஒரு ஆள் இல்லை என்றாலும் லைனில் சிக்கல் வரும். ஆனால், சரியான நேரத்திற்கு வருவதைவிடக் குறைந்த நேரத்தில் பிழை இல்லாமல் புரோகிராமிங் எழுதுவது ஐ.டி. புரோகிராமர்களுக்கு மிக முக்கியம். இப்படி செய்யும் வேலைக்கு ஏற்ப அளவுகோல்கள் மாறும். இதெல்லாம் மனித வளத்துறையின் வேலை.

பணியில் இருப்போர் செய்ய வேண்டியது என்ன?

எதிர்பார்ப்பை அறிதல்

முதலில், உங்கள் பணியில் நிர்வாகம் மற்றும் மேலதிகாரியின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை அறிய முயலுங்கள். நல்ல மனித வளக் கட்டமைப்பு பெற்ற நிறுவனங்கள், இதை வேலையில் சேரும்போதே விளக்கி எழுத்து வடிவில் ஒப்படைப்பார்கள். இருந்தும் குழப்பம் இருந்தால் உங்கள் உடனடி மேலதிகாரியிடம் சென்று பேசுங்கள். அவரைப் பட்டியல் இட்டுத்தரச் சொல்லுங்கள். இதுதான் இந்த ஆண்டிற்கான குறிக்கோள்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் புரிதலைச் சொல்லி அவர் சம்மதத்தைப் பெறுங்கள். இது மிகவும் முக்கியம்.

வேலையின் அளவீடுகள்

இரண்டாவது,உங்கள் வேலையைச் சரியான அளவீடுகளால் மதிப்பிட முடியுமா என்று பாருங்கள். இதையும் ஹெச்.ஆர் செய்திருக்கிறதா என்று பாருங்கள். எண்களான அளவீடுகள் முக்கியம். 0% விபத்து, 20% அதிக விற்பனை, ஆடிட்டில் 100/100 சரி, 10 புதிய கிளையண்டுகள், 10% செலவுக் குறைப்பு, 5 புதிய கிளைகள்.. இப்படி இருக்க வேண்டும். உங்கள் செயல்பாட்டை மீண்டும் கணக்கிடும்போது இந்த எண்கள்தான் உங்களுக்குப் பரிந்து பேச வேண்டும்.

காலாண்டு அப்ரைசல்

மூன்றாவது, ஆண்டு தோறும் தான் அப்ரைசல் வரும். ஆனால் நீங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் முன்னேற்றம் பற்றி உங்கள் மேலதிகாரியைக் கேட்கலாம். எது சரியில்லை என்று பாதியிலேயே தெரிந்துவிடும். மாற்றிக் கொள்ளவும் நேரம் இருக்கும். இந்த க்வார்டர்லி அப்ரைசலை விற்பனைத் துறைகள் முறையாகச் செய்வர். அதை எல்லாத் துறையினரும் செய்யலாம்.

துறை அளவில் செய்ய வைக்கும் அதிகாரம் உங்களிடம் இல்லை. என்றாலும் உங்கள் அளவில் செயல்பாடுகள் எப்படி, முடிவுகள் சரியா, வேறு எதிர்பார்ப்புகள் முளைத்திருக்கின்றனவா என்றெல்லாம் விவாதிக்கலாம். 30 நிமிடங்கள் நேரம் வாங்கி பாஸிடம் பேசி விடுங்கள். உங்கள் பாஸிடம் உங்களுக்கு கிடைக்கும் பிரத்யேக நேரத்தைப் பயன்படுத்தி இதை விவாதியுங்கள். இது உங்களின் முக்கிய நேர முதலீடு.

சுமுக உறவு

நான்காவது, எவ்வளவு அறிவியல் பூர்வமாக அமைத்தாலும், அப்ரைஸல் எனும் அட்சரத்தைப் பயன் படுத்தப் போவது உங்கள் பாஸ். அதனால் அவருடன் சுமுக உறவு முக்கியம். இதற்காகக் காக்கா பிடிக்க வேண்டாம். வேலையில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

விருப்பு, வெறுப்பு பாராமல் பணித் திறன்களையும், தொழில் முடிவுகளையும் வைத்துத் தான் அப்ரைஸல் செய்ய வேண்டும். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி சில தனிப்பட்ட காரணங்கள் ஸ்கோர்களை ஏற்றவும் இறக்கவும் செய்யும். அதனால் கண்டிப்பாக உங்கள் மேலதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவது அவசியம்.

வேலை டயரி

கடைசியாக ஒரு சிறு பழக்கத்தைப் பரிந்துரைக்கிறேன். ஒரு டயரியில் உங்கள் வேலை சார்ந்த தகவல்களையும், உங்கள் வேலை பற்றிய எதிர்பார்ப்புகள், விவாதங்கள் ஆகியவற்றைப் பதிவுசெய்து வையுங்கள். இந்தத் தகவல்கள் உங்களுடன் நித்தம் உள்ளன என்பதே உங்கள் பெரும் பலமாகும்.

பணியில் குறுகிய காலத்தில் முன்னேறியவர்கள் அனைவரும் தங்கள் வேலையின் வீரியத்தை நிறுவனம் முழுவதும் அறியச்செய்தவர்கள். குறிப்பாக மேல் தட்டு நிர்வாகத்தினரிடம்.

ஒவ்வொரு வேலையும் உங்கள் கையொப்பம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

மேலும்