'நிலைத்தன்மை'  வெற்றியின் ரகசியம் | சக்ஸஸ் ஃபார்முலா - 8

By நஸீமா ரஸாக்

கடந்த மூன்று மாதங்கள் செய்துவந்த  உடற்பயிற்சியைத்  தொடர்ந்து செய்ய முடியவில்லை என்று  சச்சு அலுத்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தன்னைப் பற்றி ஒரு விதமான எதிர்மறை உணர்வும் குற்ற உணர்வும் சேர்ந்து அவரை அலைக்கழித்துக்கொண்டிருந்தன.

“நஸீ, மத்தவங்களால சுலபமா பண்ண முடிவது, என்னால ஏன் பண்ண முடியல?”

“சச்சு, சுலபமா யாருக்கும் எதுவும் கிடைக்காது.எல்லாவற்றுக்குப் பின் ஒரு சூட்சுமம் இருக்கும். அது தெரிந்து,புரிந்து கொண்டால் எல்லாம் சாத்தியம். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு, வெற்றியாளர்கள் புத்திசாலிகளா, உழைப்பாளிகளா?”

“கண்டிப்பா புத்திசாலிகள்தான்!”

“அதுதான் இல்ல. வரலாறு முழுக்க இலக்கை நோக்கித் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் அதிகமாக ஜெயித்ட்திருக்கிறார்கள்.”

உழைப்பு என்று நான் இங்கே சொல்கிறது,தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டே இருப்பது. இதை நாம் பழக்கம் பற்றிப் பேசும் போது பார்த்தோம். ஆங்கிலத்தில் Consistency என்று சொல்லலாம். அது இல்லையென்றால் எவ்வளவு பெரிய புத்திசாலியானாலும் ஜெயிக்க முடியாது. ஆனால், உழைப்பில் Consistency இருந்துவிட்டால் ஜெயிப்பது நிச்சயம்.

உதாரணத்திற்கு ஜப்பான் எழுத்தாளர் ஹருகி முரகாமி பற்றிப் பலருக்குத் தெரியும்.அவருடைய புத்தகங்கள் உலகப் புகழ் பெற்றவை.கிட்டத்தட்ட ஐம்பது மொழிகளில் அவர் எழுத்துகள் அச்சாகியுள்ளன. அவர் இலக்கியம் படித்தவர் அல்ல. ஆனால், எழுத ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தினமும் காலை நான்கு மணிக்கு  எழுந்திருக்கும்  பழக்கம் உள்ளவர். நான்கிலிருந்து ஆறு மணி வரை எழுத்து மட்டுமே. அந்த நேரத்தில் வேறு எதுவும் இல்லை. அவர் பழக்கத்தில் கொண்டு வந்த நிலைத்தன்மை (Consistency) தான் அவர் எழுத்தை உச்சாணியில் வைத்துள்ளது. அவர் வெற்றிக்குப் பின் இருக்கும் சூட்சுமம் நம் அனைவராலும் செய்ய முடியும் அதற்கு மனத் திடம்தான் முக்கியமானது.

சச்சுவால் தொடர்ந்து ஏன் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை? எப்படி நிலைத்தன்மையைப் பழக்கத்தில் கொண்டுவருவது?  

1.இலக்கை நோக்கிச் செய்யப்படும் செயல்கள், பயன் கிடைக்கும் வரை செய்ய வேண்டும். உடம்பைக்  கட்டுக்கோப்பாக  வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால்,வாரத்திற்கு ஐந்து நாள்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

2. கண்மூடித்தனமாகத் தினமும் இதைச் செய்வேன் என்று இல்லாமல், காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக்கான நேரம் என்று ஒதுக்கி விட வேண்டும்.

3. சில நாள்கள் ஏதாவது ஒரு காரணத்தால் வழக்கமான செயல்கள் தடைப்படும். அது இயல்பு. மீண்டும் நம் பழக்கத்திற்கு வர வேண்டுமென்றால் சில நினைவூட்டல்கள் இருக்க வேண்டும். செய்ய வேண்டியவற்றைச்  சிறு சிறு வாக்கியங்களாக அல்லது  வார்த்தைகளாகக் கண்ணில் படும்படி எழுதி வைப்பது உதவும். வேலை செய்யும் இடத்தில், அதிகமாக வீட்டில் புழங்கும் இடங்களில் வைப்பது சிறந்த நினைவூட்டல்களாக இருக்கும்.

4. ஒரு செயலைச் செய்துதான் ஆக வேண்டுமா என்றோ, அல்லது செய்ய முடியுமா என்றோ நீங்கள் ஆராய்ந்த பின், அந்தச் செயலில்  ஈடுபடுவது நிலைத்தன்மைக்கு உதவும்.

5. அவ்வப்போது உங்கள் செயலைப் பாராட்டி நீங்களே உங்கள் தோள்களைத் தட்டிக் கொள்ளுங்கள். யாராவது வந்து ஊக்கம் தருவார்கள் என்று எதிர்ப்பாக்காதீர்கள்.

6. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், எவ்வளவு செய்தாலும் சில சமயம் நாம் நினைப்பது போல் செய்ய முடியாமல் சில சறுக்கல்கள் இருக்கும். அதைக் கடந்து மீண்டும் செயலில் ஈடுபட வேண்டும்.

7. அவ்வப்போது ஒரு சின்ன இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். நண்பர்களைச் சந்திப்பது போன்ற பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள். அது உங்களை நீண்ட காலம் செயலில் தொடர்ந்து ஓட வைக்கும்

 8. தவறுகளும் சறுக்கல்களும் இருந்தால்தான் கற்றல் இருக்கும். அதை ஏற்றுக் கொண்டு மீண்டும் நிச்சயம் செய்த பாதையில் தொடருங்கள். அதுதான் மிக அவசியம்.

 9.  பொறுமையாக இருங்கள். புதிதாக ஆரம்பித்த எதுவும் உங்கள் நாளின் அங்கமாக மாற 3 வாரங்களாவது தேவைப்படும். 

10.  எதிர்மறை எண்ணங்களைக்  கடந்து, எது நடந்தாலும் உங்கள் செயலைத் தொடருங்கள். அது மட்டுமே உங்களை வெற்றியாளனாக்கும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார்.

> முந்தைய அத்தியாயம்: நீங்களும் ஸ்மார்ட்டாக ஆகலாம்! | சக்ஸஸ் ஃபார்முலா - 7

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE