ஆயிரம் வாசல் 03: பாடல் வழி வரும் பாடங்கள்

By சாலை செல்வம்

நதிகளே நம் ஜீவனம்

நதிகளே உயிர்க் காரணம்

மலையில் பிறந்து கொடியில் தவழ்ந்து

ஓடிவரும் ஜீவாம்ருதம்

நதியில் நனைந்து மலையில் புரண்டு, மலைவாழ் மக்களின் நாட்டுப்புற இசை மணம் கமழ காதுகளை வந்தடைகிறது அந்தப் பாடல். இது செவிக்கு இசை என்றால் கண்களுக்கு விருந்தளிக்கின்றன காகித ஓவியம், துணியில் வரையப்பட்ட ஓவியம், இலைகளில் தீட்டப்பட்ட ஓவியம் ஆகியவற்றாலான வகுப்பறைச் சுவர்கள், பள்ளி வளாகச் சுவர்கள். இன்னும் திரும்பிய திசை எல்லாம் நீரோவியம், இயற்கை வண்ணம், பென்சில் ஓவியம், கோட்டோவியம் என நுண்கலைக் கல்லூரியை நினைவூட்டுகிறது அந்தப் பள்ளி.

சாப்பிட மட்டும் பள்ளிக்கு வந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடும் அங்கன்வாடி குழந்தைகளைப் பள்ளியிலேயே தங்கவைக்க வேண்டும். குழந்தைகள் அப்படித் தங்க வைக்கப்பட்டால் அவர்களுடைய அம்மாக்களால் வேலைக்கும் செல்ல முடியும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இதை நடைமுறைப் படுத்த என்ன செய்வதென்று கோயம்புத்தூர் ஆனைக்கட்டி மலைவாழ் பகுதியில் அங்கன்வாடி பள்ளிகளை நடத்திவந்த அர்ஷா வித்யா குருகுல அமைப்பில் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில், சென்னையில் மழலையர் பள்ளி நடத்திவந்த பிரேமாவிடம் தங்கள் அங்கன்வாடி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க அந்த அமைப்பு கோரியது.

சென்னையில் இருந்து மாதம் இரு முறை ஆனைக்கட்டிக்குச் சென்று பயிற்சியளிக்கத் தொடங்கினார் பிரேமா. ஏற்கெனவே பள்ளி நடத்திய அனுபவமும் ஆங்கில மொழிப்பாடமும் இசையும் கற்பிக்கும் திறனும் அவருக்கு இருந்தது. ஆனாலும் மலைவாழ் மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கும் முயற்சியில் தானும் நிறையக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் பிரேமா. அந்த அனுபவம்தான் பின்னாளில் ‘வித்யாவனம்’ பள்ளியைத் தொடங்க அவரை உந்தித்தள்ளியது.

Prema Rangachary பிரேமா பழங்குடிகளுக்குச் சர்வதேசக் கல்வி

ஆனைக்கட்டியிலேயே அந்தப் பள்ளியைத் தொடங்கினார் பிரேமா. ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை இலவசமாகக் கல்வி அளிக்கும் ஆங்கிலப் பள்ளி அது. பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் மத்திய அரசு அங்கீகாரத்துக்கு முயற்சிக்கப்பட்டது.

அதுவும் கிடைக்காமல் போகவே, ஐ.ஜி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் அக்குழந்தைகள் பயின்று வருகிறார்கள். சர்வதேசப் பாடத்திட்ட முறையான ஐ.ஜி.எஸ்.சிக்கு தனி பாடப் புத்தகம் கிடையாது. பாடத்திட்டம் மட்டுமே அடிப்படை. அதனால் பதில்களை மனப்பாடம் செய்து எழுத முடியாது. பாடப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கில மொழி அறிவும் அவசியம்.

“இப்படிப்பட்ட தேர்வுக்கு மலைவாழ் குழந்தைகளைத் தயார் செய்வது சாத்தியமா என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். ஈடுபாடும் உழைப்பும் இருக்கும்போது சாத்தியம் என்பதுதான் என் பதில். அந்த முறையை நாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்காவிட்டாலும் அதற்கேற்ப எங்கள் முறையை மாற்றியமைத்துச் செயல்படுகிறோம். மலைவாழ் மக்களின் மொழி, பண்பாட்டை முன்னிறுத்தியே இப்பள்ளியை நடத்திவருகிறோம்” என்கிறார் பிரேமா.

ஒவ்வொரு வகுப்பறையும் ஆய்வுக் கூடமாகவும் கலைக் கூடமாகவும் காட்சியளிப்பதை இந்தப் பள்ளியில் காணமுடிகிறது. இங்குப் பணியாற்றும் ஆசிரியர்களில் 40 சதவீதத்தினர் மண்ணின் மைந்தர்கள். அதேபோல இப்பள்ளியில் படித்துவரும் 300 மாணவர்களில் 60 சதவீதத்தினர் பழங்குடிக் குழந்தைகள்.

“சர்வதேச அளவிலான ஐ.ஜி.எஸ்.இ. கிரேடிங் முறையில் எங்கள் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். காரணம், கற்றலுக்கான நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தும்போது கற்றல் தானாக நடைபெறுவதுதான்” என்கிறார் பள்ளி நிர்வாகி ஸ்ரீகாந்த்.

கலைகளின் சங்கமம்

துளிர் பருவத்தின் எல்லா வளர்ச்சித் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் மாண்டிசோரி வகுப்பறை ஆரம்பக் கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இடைநிலை வகுப்புகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள், தலைப்புப் பிரிவுகளின் கீழ் கற்பிக்கப்படுவதில்லை. பாடத்தின் கருப்பொருளை மையமாக வைத்து தலைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. உதாரணமாக ஆறு, பறவைகள், மண், தென்னை, தவளை, இயற்கைப் பேரிடர், கலை, காலம், நெல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்தையும் இணைத்துக் கற்பிக்கும் முறை கையாளப்படுகிறது.

Srikanth ஸ்ரீகாந்த் right

தமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களும் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற புத்தகங்களும் பள்ளி நூலகத்தில் உள்ளன. தினந்தோறும் நூலகத்துக்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தையும் இங்குள்ள மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வழக்கமாகப் பள்ளியில் இசை ஆசிரியரைப் பொறுத்து இசை வகுப்பு இருக்கும், இல்லாமலும் போகும். வித்யாவனத்தில் இசை வகுப்பு பல்வேறு இசைக் கருவிகளை உள்ளடக்கிய இசை ஆய்வகமாகவே காட்சியளிக்கிறது. காரணம் இங்குள்ள இசைக்கூடத்தை இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வடிவமைத்திருப்பதுதான். அவருடைய அம்மாதான் பள்ளி நிறுவனரான பிரேமா.

“ஏறக்குறைய எல்லாப் பாடங்களிலுமே பாடல் இணைந்து இருக்கும். பெரும்பாலான பாடல்கள் எங்கள் மலை மக்களின் பாரம்பரிய இசையை மையமாகக் கொண்டு அமையும். மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து எழுதிப் பாடிய பாடல்கள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘கீரைப்பாடல்’” என்று பாடிக்காட்டுகிறார் பள்ளியின் இசை ஆசிரியை சித்ரா. அதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. மொத்தத்தில் பயிற்சி, அனுபவம், ஈடுபாடு, கலை ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது ‘வித்யா வனம்’.

கட்டுரையாளர், கல்வி செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
வித்யா வனம் பள்ளியைத் தொடர்புகொள்ள: www.vidyavanam.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்