ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... - 16 | குடும்பத்துக்காக பெண்கள் வேலையை தியாகம் செய்ய தேவையில்லை!: பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் ‘Overqualified Housewives’ நிறுவனர் சங்கரி சுதர் பேட்டி

By முகம்மது ரியாஸ்

பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் நோக்கில் ‘Overqualified House
wives’ தளத்தை நடத்தி வருகிறார் சங்கரி சுதர் (31). இந்தியாவில் திருமணத்துக்குப் பிறகு, குடும்பச் சூழல் காரணமாக பெண்கள் வேலையை கைவிடும் நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர். இத்தகைய பெண்களுக்கு, அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் பணியாற்றும்படியான வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் சேவையில் ஈடுபட்டுள்ளது சங்கரி சுதரின் ஸ்டார்ட்அப்.

“இந்திய நகர்ப்புறங்களில் வெறும் 5.4 சதவீதப் பெண்களே திருமணத்துக்குப் பிறகு
வேலைக்குச் செல்கின்றனர். இந்தச் சூழலை மாற்ற வேண்டும் என்பதுதான் என் நிறுவனத்தின் இலக்கு. அந்த வகையில் என்னுடைய நிறுவனத்தை நான் ஓர் இயக்கமாகவே கருதுகிறேன்” என்று கூறும் சங்கரி, தனது தனித்துவமான முன்னெடுப்பால் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

அவரது ஸ்டார்ட் அப் பயணம் என்ன, இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்புச் சூழல் எப்படி இருக்கிறது என்பன குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து…

திருமணமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கென்று ஒரு தளம். எப்படி இந்த ஐடியா உங்களுக்கு உதயமானது?

என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி. படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும் என்று என் பெற்றோர் சொல்லி வளர்த்தனர். இதனால், நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற கனவோடு தீவிரமாகப் படித்தேன். சென்னையில் உள்ள எம்ஐடியில் கணினி பொறியியல் படித்தேன். பிறகு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

2017-ல் காதல் திருமணம் செய்துகொண்டேன். கரோனா காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொண்டோம். அதன் பிறகு என் வாழ்க்கை பெரும் மாற்றத்தை சந்தித்தது.
என் பெற்றோர் உடல்நலம் குன்றியவர்கள். குழந்தையை கவனித்துக்கொள்ள அவர்களால் சென்னைக்கு வர முடியவில்லை. கணவர் தரப்பிலும் கிட்டத்தட்ட அதே சூழல். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தனி ஒருத்தியாக குழந்தையை கவனித்துக்கொண்டு வேலையிலும் ஈடுபடுவது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக வேலையை விடும் நிர்பந்தத்துக்கு உள்ளானேன்.

வேலையை விட்ட பிறகு குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்ள முடிகிறது என்ற திருப்தி இருந்தாலும், சிறு வயது முதல் நன்றாக படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற கனவில் படித்து வந்த என்னால், திருமணம், குழந்தை என்ற காரணத்தால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் சும்மா இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் கனவு என் கண் முன்னாலேயே சிதைவதைப் பார்த்தேன்.

என்னுடைய மனக் குமுறலை லிங்கிடு இன் தளத்தில் எழுத ஆரம்பித்தேன். பல பெண்கள் என்னைத் தொடர்புகொண்டு தாங்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்வதாக பகிர்ந்தனர்.
குழந்தையையும் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியது என்பது திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்வதில் பெண்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால். இந்தக் காரணங்களால்தான் பெரும்பாலான பெண்களை வேலையை விடுகின்றனர். அப்படியெனில், வீட்டிலிருந்தபடி, ஏதுவான நேரத்தில் செய்யக்கூடிய வேலைகள் இருந்தால் இத்தகைய பெண்களால் வேலை செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது, ஏன் பெண்கள் வீட்டில் இருந்தபடி வேலை
பார்ப்பதற்கான வாய்ப்பை நாமே உருவாக்கித் தரக்கூடாது. அப்படி உதயமானதுதான் overqualified housewives.

இந்த ஐடியாவை எப்படி நிறுவனமாக மாற்றினீர்கள்? அந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்...

என்னுடைய நிறுவனத்தை உருவாக்குவதில் லிங்கிடு இன் தளம் முக்கிய பங்கு வகித்தது. அதில் நான் பெண்களின் வேலை வாய்ப்பு சார்ந்து எழுதிய பதிவுகள் பலரைச் சென்றடைந்தன. பல நிறுவனங்களின் கவனத்தையும் அந்தப் பதிவுகள் ஈர்த்தன. இதன் தொடர்ச்சியாக, என்னை அணுகிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களால் பகுதிநேர வேலை வழங்க முடியும் என்று கூறின.

ஒரு பக்கம், சில பெண்களுக்கு வீட்டிலிருந்தபடி மேற்கொள்ளும் வகையிலான வேலை தேவைப்படுகிறது. மற்றொருபுறம், நிறுவனங்களுக்கு தங்கள் பணிகளை முடித்துத் தரக்கூடிய நல்ல ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்த இரு தரப்பையும் இணைக்கும் பாலமாக நிறுவனத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தேன். நான் செயல்பட ஆரம்பித்த பிறகு நிறைய வாய்ப்புகள் உருவாகி வந்தன.

2022 ஆகஸ்டில் Overqualified Housewives தளத்தை ஆரம்பித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்தளத்தில் 28 ஆயிரம் பெண்கள் பதிவு செய்துள்ளனர். 800 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்துள்ளோம். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கி பெரிய ஐ.டி. நிறுவனங்கள் என சிறிதும், பெரிதுமாக 700 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.

என்ன மாதிரியான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருகிறீர்கள்?

ஐ.டி., மனித வளம், கண்டன்ட் ரைட்டிங், டிசைனிங், கஸ்டமர் சர்வீஸ், இ-காமர்ஸ் மேனேஜ்மெண்ட் என வீட்டிலிருந்தபடி பார்க்கும் சாத்தியமுள்ள வேலைகளில் பிரதானமாக கவனம் செலுத்துகிறோம்.

திருமணத்துக்குப் பிறகு வேலை தேடும் பெண்களில் இருதரப்பினர் உண்டு. ஒன்று,
என்னைப் போல் குடும்பச் சூழல் காரணமாக சில காலம் வேலையிலிருந்து விலகி இருந்து
மீண்டு தேட முயல்பவர்கள். இன்னொரு தரப்பினர், பட்டம் பெற்றிருப்பர். ஆனால், வேலைக்கே செல்லாதவர்கள். இரண்டாம் வகையினருக்கு திறன் மேம்பாடு அவசியமாகிறது என்பதை உணர்ந்தேன். இத்தகைய பெண்களுக்கு, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை ஏற்படுத்தித் தருவதற்காக திறன் மேம்பாட்டு வகுப்புகளையும் தற்போது வழங்கத் தொடங்கியுள்ளோம்.

எங்கள் தளத்தில் பெண்கள் பதிவு செய்ய கட்டணம் கிடையாது. அவர்களுக்கு வேலை கிடைத்த பிறகு, அவர்களது ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டணமாக பெறுவதை நடைமுறையாகக் கொண்டுள்ளோம்.

ஒரு சமூகமாக பெண்களின் வேலை வாய்ப்பு சார்ந்து நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய அணுகுமுறை என்ன?

சூழல் நிர்பந்தம் என்பதைத் தாண்டி கலாச்சார ரீதியாகவே பெண்கள் வேலைக்குச் செல்வ
தற்கு நம் சமூகத்தில் தடைகள் நிலவுகின்றன. சில ஆண்கள், “நான்தான் நன்றாக சம்பாதிக்
கிறேனே. பிறகு ஏன் என் மனைவி வேலைக்குப் போக வேண்டும்?” என சொல்வதுண்டு. நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு வேலை என்பது வருமானத்துக்
கானது மட்டுமல்ல. அவள் தன் ஆளுமையை உணர்வதற்கான களம் அது. என்னைப் பொருத்தவரையில், ஒரு குடும்பம் மேம்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும்.

சில பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை நன்கு செலவழித்து படிக்க வைப்பார்கள். ஆனால், அந்தப் பெண் 25 வயதை நெருங்கிவிட்டால் அவளுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது ஒரே குறிக்கோளாக மாறிவிடும். பெண்ணை ஒரு திருமணப்
பண்டமாக அணுகும் போக்கு நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. உண்மையில், பெண்ணை ஒரு ஆளுமையாக உருவாக்குவதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.
இன்னமும் நாம் பெண் கல்வி குறித்து பேசும் இடத்தில்தான் இருக்கிறோம். பெண்களுக்கான வேலைவாய்ப்பு உரிமை குறித்து நாம் தீவிரமாக விவாதிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்ள பெண்கள் தங்கள் அளவில் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?

முதலில், குடும்பத்துக்காக தியாகம் செய்ய வேண்டும் என்ற மனநிலையிலிருந்து வெளியே
வர வேண்டும். இத்தகைய மனநிலையே பல பெண்களை முடக்கி வைத்திருக்கிறது. அதேபோல், பெரும்பாலான பெண்கள் தங்கள் திறனை முன்வைக்க தயங்குகின்றனர். நம் சிந்தனையை, கருத்தை, திறனை வெளிப்படுத்த நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது. தயக்கம்
நம்மை முடக்கிவிடும். நம்மை நாம் வெளிப்படுத்தும்போதுதான் நம்மால் முன்னகர்ந்து செல்ல முடியும்.

- riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

மேலும்