நலமும் நமதே | மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் வழிகள்!

By த.சந்தியா

த. சந்தியா

பெண்களில் பலருக்கும் 45-55 வயதுக்குள் மாதவிடாய் நின்ற பிறகு அவர்களது உடலில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பது, இரவில் அதிகமாக வியர்த்தல் உள்ளிட்ட பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். இவற்றிலிருந்து விடுபட, மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் தங்கள் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். மாதவிடாய் நின்ற பின் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சில வழிகள்:

ஆரோக்கியமான உணவுப்பழக்கம்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களைச் சாப்பிட வேண்டும். புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவைச் சாப்பிடலாம். அதேநேரத்தில் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவு வகைகளை அதிகம் உண்ணக் கூடாது.

உடற்பயிற்சி: வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் லேசானது முதல் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்குங்கள். தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளையும் செய்ய முயலுங்கள்.

எடையைப் பராமரியுங்கள்: இதய நோயின் ஆபத்தைக் குறைக்க உங்கள் உடல் எடை குறியீட்டெண் (BMI) 18.5 முதல் 24.9க்குள் இருக்கும்படி உடல் எடையைப் பராமரியுங்கள்.


மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்: ஆழ்ந்த சுவாசம், தியானம், யோகா அல்லது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களைச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ரத்த அழுத்தம்: இதய நோய் அபாயத்தைக் குறைக்க உங்கள் ரத்த அழுத்தத்தையும் கொழுப்பின் அளவையும் தொடர்ந்து பரிசோதித்துப் பராமரிக்க வேண்டும்.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கள்: உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் வழக்கமான கண்காணிப்பு மூலம் நீரிழிவு தொடர்பான நோய்களைத் தடுக்கலாம்.

உடல்நலப் பரிசோதனைகள்: உங்கள் உடல்நிலை குறித்துத் தொடர்ந்து தெரிந்துகொள்ள, உங்கள் மருத்துவரிடம் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.


சரியான மருந்தைப் பின்பற்றுதல்: உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு அல்லது நீரிழிவு போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதே நல்லது. நாமாகவே வீட்டு முறை சிகிச்சையில் இறங்குவது நல்லதல்ல.

நன்றாக உறங்குங்கள்: தினமும் இரவு ஏழு முதல் ஒன்பது மணிநேரம் வரை தூங்க முயலுங்கள். நல்ல தூக்கம், இதய ஆரோக்கியத்தைப் பெருக்குகிறது.

பயிற்சி, இதழாளர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE