‘AI computing is the future of computing’ - Jensen Huang, CEO & Co-Founder, NVIDIA
உலகின் முதல் மைக்ரோபுராசசரை இன்டெல் நிறுவனம் 1971-ம் ஆண்டு உருவாக்கியது. சென்ற நூற்றாண்டின் உலகின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று அது. ஏனென்றால், அதற்கு முன்பு வரை கணினி என்பது கனரக இயந்திரம் போல ஒரு முழு அறையை ஆக்கிரமித்திருக்கும்.
இன்டெலின் மைக்ரோபுராசசர் கண்டுபிடிப்புக்குப் பிறகு கணினியின் வடிவம் மாற ஆரம்பித்தது. கணினித் துறையில், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இன்டெல் நிறுவனத்தையே தற்போது ஒரு நிறுவனம் ஆட்டம் காண வைத்திருக்கிறது.
என்விடியா (NVIDIA). இன்றைய தேதியில் உலகின் மிக முக்கியமான நிறுவனமாக அடையாளப்படுத்தப்படுவது கூகுளோ, ஆப்பிளோ, மைக்ரோசாஃப்டோ அல்ல. என்விடியாதான். 2019-ம் ஆண்டு என்விடியா நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலராக இருந்தது. இன்று அதன் மதிப்பு 2 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோ ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் 2 டிரில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக இருந்துவந்தன. இந்நிலையில், தற்போது இந்தப் பட்டியலில் என்விடியா நிறுவனமும் இணைந்துள்ளது.
ஐந்தே ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் மதிப்பு 20 மடங்கு உயர்ந்து இருக்கிறது. அதுவே இன்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2019-ல் 230 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 180 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
கணினியின் புதிய பரிணாமம்: நாம் தற்போது நுழைந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் காலகட்டத்தில் இயந்திரக் கற்றல் என்றழைக்கப்படும் மிஷின் லேர்னிங்கும் ஆழ்கற்றல் என்றழைக்கப்படும் டீப் லேர்னிங்கும் மிக முக்கியமான கணினிச் செயல்பாடுகளாக உள்ளன.
சாட் ஜிபிடியை எடுத்துக் கொள்வோம். நாம் உள்ளீடு செய்வதை அலசி அதற்கேற்ற தரவுகளை பகுத்தாய்ந்து நமக்கு கண நேரத்தில் பதில் வழங்குகிறது. எண்ணிலடங்காதரவுத் தொகுப்பிலிருந்து குறிப்பிட்டத் தரவைப் பகுத்தெடுத்து, தேவைக்கு ஏற்ப அதை ஒழுங்கு படுத்தித் தருவது என்பது மிகப் பெரிய கம்ப்யூட்டிங் செயல்பாடாகும். இத்தகைய இயந்திரக் கற்றல், ஆழ்கற்றல் செயல்பாடுகளை வழமையான மைக்ரோ புராசசர்களால் மேற்கொள்ளவது மிகவும் கடினமானது. அதிதிறன் கொண்ட ஜிபியூ (Graphics Processing Unit) அவசியம்.
இத்தகைய அதிதிறன் கொண்ட ஜிபியூ சிப்களைத்தான் என்விடியா நிறுவனம் உருவாக்குகிறது. இதன் வழியாகவே, இன்று என்விடியா உலகின் முக்கியமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஜிபியூ ஜாம்பவான்: ஜென்சன் ஹுவாங், கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகிய மூவரும் மின் பொறியாளர்கள். ஜென்சன் ஹுவாங், இன்டெலின் போட்டி நிறுவனமான ஏஎம்டியில் சிபியூ வடிவமைப்பாளாராகவும், மற்ற இருவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
இத்துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட இம்மூவரும், சொந்தமாக நிறுவனம் தொடங்கி நடத்தத் திட்டமிட்டனர். அப்படியாக, 1993-ம் ஆண்டு அவர்கள் உருவாக்கிய நிறுவனம்தான் என்விடியா. வீடியோ கேம்களுக்கான கிராபிக்ஸ் கார்டுகளைத் தயாரிப்பதுதான் அவர்களது முதன்மையான இலக்கு.
இதனால், 3டி கிராபிக்ஸுக்கான சிப்களில் அவர்கள் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அவர்களது கிராபிக்ஸ் கார்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படிப்படியாக, வீடியோ கேம் துறையில் வலுவான இடத்தை என்விடியா பிடித்தது.
1990-களில் இன்டெல் நிறுவனம் சிபியூ சந்தையில் உச்சத்தில் இருந்தது. மைக்ரோசாஃப்ட்டும் இன்டெலும் இணைந்து ஒட்டுமொத்த கணினி துறையையே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால், என்விடியா நிறுவன மோஜிபியூ சார்ந்து மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி புதிய புதிய உருவாக்கங்களை மேற்கொண்டு வந்தது.
குறிப்பாக, 2006-ம் ஆண்டு என்விடியா நிறுவனம் CUDA நிரல் தளத்தை வெளியிட்டது. இதன் அறிமுகத்துக்கு முன்பு வரையில் ஜிபியூ-வுக்கான நிரல் எழுதுவது என்பது மிக மிக கடினமான பணியாக இருந்தது.
CUDA நிரல் தளம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப என்விடியா சிப்பின் செயல்திறனை மேம்படுத்த முடிந்தது. இது என்விடியாவின் ஜிபியூ பயன்பாட்டை கேமிங் தவிர்த்து பல தளங்களுக்கு எடுத்துச் செல்ல வழிவகுத்தது.
கூகுள் முதல் டெஸ்லா வரை: சிபியூ என்பது கணினியை இயக்கும் அடிப்படைப் பணியைச் செய்யக்கூடியது. சிபியூ வழியாகவே, மென்பொருள்கள் இயங்குகின்றன. ஜிபியூ என்பது கணினியில் மிகச் சிக்கலான கணக்கீடுகளை செய்யக்கூடிய அமைப்பு ஆகும். மிகச் சிக்கலான கணக்கீடுகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஒரே சமயத்தில் அவற்றை கணக்கீடும் பணியை ஜிபியூ செய்யும்.
இதுவரையிலான நம்முடைய கணினி பயன்பாட்டுக்கு சிபியூ போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போதைய செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில், கணினிச் செயல்பாட்டில் சிபியூ-வை விடவும் ஜிபியூவே பிரதானமானதாக உள்ளது. இந்நிலையில் என்விடியா சிப்களுக்கான முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்று நாம் பரவலாக உச்சரிக்கும் ஏஐ, கிரிப்டோ, கிளவுட் கம்ப்யூட்டிங், மெட்டாவர்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு என்விடியா நிறுவனத்தின் சிப்தான் அடிப்படையாக உள்ளது.
கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான் தொடங்கி டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார் வரையில் என்விடியா சிப்பே பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப செலவினத்தில் 40 சதவீதம் என்விடியா சிப்புக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனம் பல ஆயிரக்கணக்கான என்விடியா சிப்களைப் பயன்படுத்துகிறது. தற்போது உலகமெங்கும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்விடியா சிப் மூலமே ஏஐ கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன.
தற்சமயம் உலகளாவிய ஏஐ சிப் விற்பனையில் என்விடியா 90 சதவீதம் பங்கு வகிக்கிறது. முதலீட்டாளர்கள் என்விடியாவின் வளர்ச்சி சாத்தியத்தை உணர்ந்து அந்நிறுவனத்தில் முதலீட்டை குவித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 450 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் என்விடியாவுக்கு சரிசமமான ஜிபியூ தயாரிப்பு நிறுவனம் சந்தையில் இல்லை. உலகின் முதல் மைக்ரோபுராசசரை உருவாக்கிய இன்டெல் நிறுவனமோ, என்விடியாவின் வளர்ச்சியைக் கண்டு திகைத்து நிற்கிறது.
ஏஎம்டி நிறுவனம் களத்தில் இருந்தாலும், என்விடியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு போதுமான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இதனால், என்விடியாவின் சிப்களுக்கு தேவை மிகப் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. சொல்லப்போனால், ஏஐ சிப் தயாரிப்பில் தன்னிகரற்ற இடத்தில் என்விடியா உள்ளது. இந்தச் சூழலில் தொழில் நுட்ப தலைவர்களில் முக்கியமானவராக உருவெடுத்தி ருக்கிறார் என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங்.
இப்போதுதான் நாம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப யுகத்துக்குள் காலடி வைத்துள்ளோம். அதன் முழு பரிமாணத்தை வரும் ஆண்டுகளில்தான் நாம் பார்க்க உள்ளோம். கணினி யுகத்தை இன்டெல் முன்னகர்த்தியது போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப யுகத்தை முன் னகர்த்திச் செல்லும் எத்தனிப்பில் இருக்கிறது என்விடியா!
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago