1970-களில் இந்தியா தனக்கென்று சொந்தமாக ஒரு போர்க் கப்பலை வடிவமைத்து உருவாக்க திட்டமிட்டது. அதுவரையில், இந்தியா அதன் அடிப்படை ராணுவக் கட்டமைப்புக்கு பிரிட்டன் மற்றும் ரஷ்யாவை பெரிதும் சார்ந்து இருந்தது. போர்க் கப்பலை சொந்தமாக உருவாக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு பெரிய அனுபவமும் கிடையாது.
அதில் பெரும் முதலீடு செய்யும் அளவுக்கு நிதிச் சூழலும் அப்போது இல்லை. எனினும், நம்பிக்கையின் அடிப்படையில் களம் இறங்கியது. போர்க் கப்பலை வடிவமைக்கும் பொறுப்புக்கு இந்திய கடற்படை தேர்ந்தெடுத்த நபர் மோகன் ராம். மோகன் ராம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஐஐடி காரக்பூரில் கடற்படை கட்டடவியலில் பட்டம் பெற்று 1959-ம் ஆண்டு இந்திய கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியில் இணைந்தார். படிப்படியாக, கப்பல் வடிவமைப்பில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றார். அவர் திறன் மீதான நம்பிக்கையில், நாட்டின் முதல் போர்க் கப்பலை வடிவமைக்கும் பொறுப்பை இந்திய கடற்படை அவருக்கு வழங்கியது.
மோகன் ராமின் தலைமையிலான அணி, 1974-ல் கோதாவரியை வடிவமைக்கும் பணியில் இறங்கியது. 1983-ல் அக்கப்பல் வெற்றிகரமாக பயன்பாட்டுக்கு வந்தது. அவரது இந்தப் பங்களிப்புக்காக இந்திய ராணுவம் அவருக்கு விஷிஸ்த் சேவா பதக்கம் வழங்கி கவுரவித்தது.
» சின்னாலகோம்பையில் 3 தலைமுறைகளாக அடிப்படை வசதிகளின்றி அவதி - பழங்குடியின மக்கள் புகார்
» ஆஸ்திரேலியாவில் பெண் படுகொலை: குழந்தையுடன் இந்தியா தப்பிய கணவருக்கு போலீஸ் வலை
இந்தியாவை செதுக்கிய முக்கியமான 100 ஐஐடி மாணவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படும் மோகன் ராமின் பங்களிப்பு கடற்படையோடு முடிந்துவிடவில்லை. கார்ப்பரேட் உலகுக்கும் நீண்டது.
கடற்படையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அவர், மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்ட முகுந்த் ஸ்டீல் நிறுவனத்திலும், தமிழ்நாட்டின் டிவிஎஸ் நிறுவனத்திலும் இணைந்து, நஷ்டத்திலிருந்த அந்நிறுவனங்களை லாபப் பாதைக்கு மீட்டெடுத்தார். அவரது இந்த அனுபவம் ‘A Captain in Corporate Wonderland’ நூலாக சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதை முன்னிட்டு கேப்டன் மோகன் ராமுடன் உரையாடினேன்....
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஐஐடி மாணவர்களில் ஒருவராக நீங்கள் அடையாளப்படுத்தப்படுகிறீர்கள். உங்கள் ஐஐடி பயணம் எப்படித் தொடங்கியது? - நான் பிறந்தது கோவை. ஆண்டு 1936. அப்பா வழக்கறிஞர். நடுத்தரக் குடும்பம்தான். மொத்தம் 10 குழந்தைகள். நான்தான் மூத்தவன். என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் ஆஸ்துமாவில் கடுமையாக அவதிப்பட்டேன்.
பார்ப்பதற்கு குச்சி மாதிரி ஒல்லியாக இருப்பேன். இதனால், பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, மேற்படிப்புக்குச் செல்லாமல் ஒருவருடம் என் உடலையும் என் ஆங்கிலத்தையும் மேம்படுத்த செலவிட்டேன். இதனிடையே கல்லூரிப் படிப்புக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஐஐடி குறித்து விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன்.
விண்ணப்பித்தேன். இந்தியாவின் முதல் ஐஐடி மேற்குவங்க மாநிலம் காரக்பூரில் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள்தான் ஆகி இருந்தன. அப்போது நுழைவுத் தேர்வு கிடையாது. அங்கு எனக்கு இடம் கிடைத்தது. ஐஐடியில் கடற்படை கட்டடக்கலை பிரிவைத் தேர்ந்தெடுத்தேன்.
அந்தத் துறை குறித்து எனக்கு அந்த சமயத்தில் எந்தப் புரிதலும் கிடையாது. கடலில் வேலைபார்த்தால் ஜாலியாக இருக்கலாம் என்பதுதான் அப்போது என்னுடைய எண்ணம். ஆனால், ஐஐடி எனக்கு ஒரு புதிய கனவை உருவாக்கித் தந்தது.
யோசித்துப் பார்த்தால், இந்தியாவின் வளர்ச்சியில் ஐஐடியின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்று சிலர் அரசியல் ரீதியாக ஜவஹர்லால் நேருவை விமர்சிக்கின்றனர்.
ஆனால், ஐஐடி போன்ற ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க எத்தகைய முன்னோக்கிய சிந்தனை வேண்டும்? ஐஐடி உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் இந்தியா இன்று என்னவாக ஆகி இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கோதாவரியை வடிவமைக்கும் வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்தது? போர்க் கப்பல் வடிவமைப்பில் இந்தியாவின் முதல் முயற்சி அது. எத்தகைய சவால்கள் உங்கள் முன் இருந்தன? - ஐஐடி முடித்த பிறகு இரண்டு வாய்ப்புகள் என் முன் இருந்தன. ஒன்று, அமெரிக்காவில் உள்ள எம்ஐடியில் முனைவர் பட்டம் மேற்கொள்ள உதவித் தொகையுடன் இடம் கிடைத்திருந்தது. மற்றொன்று இந்திய கடற்படையில் பொறியியல் பிரிவில் வேலை கிடைத்திருந்தது.
எம்ஐடியில் இடம் கிடைப்பது என்பது மிகப் பெரிய வாய்ப்பு. என் அப்பாவுக்கு நான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது விருப்பம். நேருவின் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். நாட்டுக்குப் பங்களிப்பு வழங்கும் எண்ணத்தில், இந்திய கடற்படையில் இணைய முடிவெடுத்தேன்.
நான் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே இந்திய கடற்படை, என்னை போர்க் கப்பல் வடிவமைப்பு குறித்து ராயல் நேவியில் பயின்றுவர பிரிட்டன் அனுப்பியது. 1959 - 1963 வரை 4 ஆண்டுகள் அங்கு கழிந்தது. கப்பல் என்பது ஒரு சிறிய நகரம். அதுவும் போர்க் கப்பல் கட்டமைப்பு என்பது அனைத்து பொறியியல் பிரிவுகளையும் உள்ளடக்கியது.
அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு அங்குலமாக பார்ப்பது என்பது தனித்துவமான அனுபவம். ராயல் நேவியில் நான் பயின்று வந்ததால், இந்திய கடற்படையில் எனக்கு வடிவமைப்பு சார்ந்து முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. அப்படித்தான், கோதாவரியை வடிவமைக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டது.
அதுவரையில் நாம் சொந்தமாக போர்க் கப்பலை வடிவமைத்ததில்லை. இதனால், புதிதாக வடிவமைப்பு மேற்கொள்வது மிகப் பெரும் சவாலாக இருந்தது. Jane’s Fighting Ships என்ற புத்தகம் இத்துறையில் பிரபலமானது. பல்வேறு போர்க் கப்பல்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு அது. அதை அடிப்படையாகக் கொண்டு கோதாவரியை வடிவமைத்தோம்.
கப்பலின் மேல்தளத்தில் ரஷ்ய ஆயுதங்களும், கீழ் தளத்தில் ஐரோப்பிய ஆயுதங்களையும் பொருத்தினோம். பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இத்தகைய ஒரு வடிவமைப்பை அப்போது யாரும் கற்பனை செய்யவில்லை. இதனால், கோதாவரி சர்வதேச அளவில் பேசுபொருளானது.
முக்கியமான மத்திய அரசுப் பொறுப்பிலிருந்து விலகி தனியார் துறையை நோக்கி நீங்கள் சென்றதற்கு என்ன காரணம்? - இந்திய கடற்படையில் 21 ஆண்டுகள் பணியாற்றியதைத் தொடர்ந்து, மத்திய அரசின் மசாகன் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வடிவமைப்புத் துறையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அங்குள்ள நிர்வாகச் செயல்பாடு எனக்கு பெரும் சங்கடத்தைத் தந்தது. வேறுசில தனிப்பட்டக் காரணங்களும் இனி இங்கு தொடர வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கியது. இதனால், பணியிலிருந்து விலக முடிவு செய்தேன்.
தனியார் துறை என்பது லாபம், நஷ்டம் கணக்கு சார்ந்து செயல்படக்கூடியது. இந்தச் சூழலுக்கு ஏற்ப எப்படி உங்களை தகவமைத்துக்கொண்டீர்கள்? - என்னுடைய பலமாக நான் 2 விஷயங்களை கருதுவதுண்டு. ஒன்று, இனோவேஷன். மற்றொன்று, புதியன கற்றல். முகுந்த் நிறுவனத்திலும் சரி, டிவிஎஸ் நிறுவனத்திலும் தயாரிப்பு நடைமுறை சார்ந்து சவால்கள் எழுந்தபோது நான் முன்வைத்த ஐடியாக்கள் மிகப் பெரும் பலனை கொடுத்தன.
கடற்படையிலும், என்னுடைய ஐடியாக்களின் வழியாகவே நான் அறியப்படுபவனாக இருந்தேன். வளர்ச்சிப் பாதையில் நாம் பயணிப்பதற்கு புதிய ஐடியாக்களை உருவாக்குவது மிகவும் முக்கியம். சொல்லப்போனால், புதிய புதிய ஐடியாக்கள்தான் உலகத்தை முன்னகர்த்திச் செல்கிறது.
அதேபோல், “எனக்கு இதைப் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா” இந்தக் கேள்வியை நான் வாழ்க்கை முழுவதும் கேட்டு வந்துள்ளேன். ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை. முகுந்த் நிறுவனத்தில் இணையும் வரை எனக்கு ஸ்டீல் தயாரிப்பு குறித்து எந்தப் புரிதலும் கிடையாது. ஆனால், ஸ்டீல் தயாரிப்பு முறை பற்றி கடைநிலை ஊழியர்களிடமிருந்தும் கற்றுக்கொள்பவனாக இருந்தேன். இந்த இரண்டு பண்புகள் கார்ப்பரேட் சூழலை எதிர்கொள்ள எனக்கு உதவின.
உங்கள் கார்ப்பரேட் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் எது? அதை எப்படி சமாளித்தீர்கள்? - 1990 பிப்ரவரி 26. நான் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவராக பெறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மிகப் பெரும் வன்முறை வெடித்தது. நான் சென்ற பேருந்துக்கு தீவைக்க முயன்றனர். தவறுதலாக எனக்கு முன் சென்ற பேருந்து எரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் கையில் உருட்டுக் கட்டைகள், ஆசிட் பாட்டில் என டிவிஎஸ் வளாகம் வன்முறைக் களமாக மாறியது.
என்னால் அந்த வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு நிறுவனத்தை மூட உத்தரவிட்டேன். நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் முடங்கியது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை டிவிஎஸ் வேணு ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறுவனம் திறக்கப்பட்டது. 2,000 ஊழியர்கள் திரண்டிருந்தனர். நான் பேசினேன், “நம் நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருக்கிறது. இனி பிழைக்குமா என்பதே சந்தேகம்.
ஆயிரக்கணக்கான குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் மூடப்பட்டால் என்ன ஆகும்? வன்முறை எண்ணத்தை விட்டுவிட்டு உழைக்கும் எண்ணத்தில் வாருங்கள். 3 ஆண்டுகளில் இதை மீண்டும் பொன்விளையும் பூமியாக மாற்றிக்காட்டுகிறேன்” என்றேன்.
சொன்னபடி மூன்று ஆண்டுகளில் டிவிஎஸ் நிறுவனத்தை பொன்விளையும் பூமியாக மாற்றினேன். நிறுவனம் கடும் நஷ்டத்திலிருந்து லாபப் பாதைக்கு மாறியது. இந்தக் காலகட்டத்தில்தான், டிவிஎஸ் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றான ஸ்கூட்டி மாடலை அறிமுகம் செய்தோம்.
இந்தப் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட நிர்வாகப் பாடம் என்ன? - நாம் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பதைவிட பல மடங்கு திறமையைக் கொண்டிருக்கிறோம். அந்தத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வருவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகப் பார்க்கிறேன். சிறந்த தலைவர்தன் ஊழியர்களின் தனித்திறனை அடையாளம் கண்டு அதை முழுமையாக வெளியே கொண்டுவரச் செய்ய வேண்டும். தலைவர் என்பவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அவருள் பயம் இருந்தாலும், அதை வெளிப்படுத்தக்கூடாது.
அது ஒட்டுமொத்த குழுவையும் பாதிக்கும். பல சமயங்களில் நான் பயத்தை உணர்ந்துள்ளேன். ஆனால், ஒருபோதும் அதை நான் வெளிக்காட்டவில்லை. நகைச்சுவை உணர்வு மிகவும் அவசியம். நிறுவனத்தில் நகைச் சுவை உணர்வு இருந்தால் ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள். அனைத்துக்கும் மேலாக, எல்லோரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அதுதான் நல்ல தலைமைக்கு அழகும்கூட!
- riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago