தொ
ல்லியல் என்ற துறை குறித்த அறிமுகத்தையும் முக்கியத்துவத்தையும் தமிழகத்தில் எளிய மக்களுக்குக் கொண்டுசேர்த்தவர் முனைவர் இரா. நாகசாமி. ஓவியம், தொல்லியல், புராதனக் கட்டிடக் கலை, இலக்கியம், கல்வெட்டெழுத்து, கோயில் சடங்குகள், தத்துவம் எனப் பல துறைகளில் வல்லுநராகப் பல பங்களிப்புகளையும் செய்த இவருக்கு 87 வயது. இந்திய அரசு அளிக்கும் மூன்றாவது உயரிய கவுரவமான பத்ம பூஷண் விருது இவரது சாதனைகளுக்குக் கிடைத்தது முக்கியமான அங்கீகாரமாகும். புனைவுகளே வரலாறாகவும் பெருமிதமாகவும் ஆகும் காலகட்டத்தில் உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது வரலாறுஎன்று நம்பும் அறிஞர்களில் ஒருவர் நாகசாமி.
முதன்முறையாக மாநிலத்துக்கென்று உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொல்லியல் துறை இயக்குநராக 35 ஆண்டுகள் பணியாற்றிய நாகசாமி, மலிவு விலை தொல்லியல் கையேடுகளை வெளியிட்டு அத்துறையை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் பிரபலப்படுத்தினார். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கு அழைத்துச் சென்று தொல்லியல் பாதுகாப்பு, சுத்தப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுப் பயணங்களை நடத்தினார். தமிழகத்தின் முக்கியமான இடங்கள் குறித்து ‘நியூஸ் ரீல்’ தாளில் அச்சடிக்கப்பட்ட கையேடுகளைப் பத்து பைசா விலையில் வெளியிட்டார்.
கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வு
முதல் நூற்றாண்டைச் சேர்ந்த புகழூர் சேரர் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் முறையான ஏற்பாடுகள் இவரது பணிக் காலத்திலேயே தொடங்கின. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழர்கள் அரண்மனை இருந்த இடத்தையும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையையும் அதே நூற்றாண்டைச் சேர்ந்த தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையையும் பாதுகாத்து, பிரபலப்படுத்திய பெருமையும் இவரைச் சேரும்.
தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கல்வெட்டுகளை உலகமறியச் செய்தார். கரூர், அழகன்குளம், கொற்கை ஆய்வுகளைச் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை அகழாய்வு செய்தார். திருமலை நாயக்கர் மகாலில் இன்றும் பொதுமக்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் ஒலி, ஒளிக் கண்காட்சியைத் திட்டமிட்டுத் தொடங்கியவர் இவர்தான். கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வை பூம்புகாரில் தொடங்கிவைத்த முன்னோடி இவர்.
தென் இந்திய வெண்கலச் சிற்பக் கலை சார்ந்து அகமும் புறமும் அறிந்த நிபுணராகக் கருதப்படுபவர் ஆர். நாகசாமி. இங்கிலாந்துக்குத் திருடுபோன புகழ்பெற்ற பத்தூர் நடராஜர் சிலையை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர லண்டன் உயர் நீதிமன்றத்தில் நிபுணராக அவர் அளித்த சாட்சியம் இன்றும் கலை ஆர்வலர்களால் நினைவுகூரப்படுகிறது.
ஊர்களின் வரலாற்றில் ஆர்வம்
வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலப் பொருட்கள் திரட்டப்பட்ட பூண்டி தொல்லியல் அருங்காட்சியகம், வட ஆற்காடு இஸ்லாமிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 12 அருங்காட்சியங்களை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டெழுத்து பயிலகத்தைத் தொடங்கி கல்வெட்டெழுத்து மற்றும் கலையில் (epigraphy and art) முதுநிலை பட்டயப் படிப்பை உருவாக்கினார்.
இன்று உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழாவை அறிஞர் கபில வாத்ஸ்யாயனுடன் நிறுவினார். இன்றும் அதன் நிறுவனச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.
தொல்லியல் துறை சார்ந்து 120 நூல்களை எழுதியுள்ளார். தமிழில் ஓவியப் பாவை, மாமல்லை, உத்தரமேரூர், சிவபக்தி ஆகிய முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Master pieces of South Indian Bronzes’, ‘Mahabalipuram (Monumental Legacy)’ ஆகிய நூல்கள் உலக அளவில் இவர் பெயர் சொல்பவை.
இவர் சமீபத்தில் எழுதி வெளியான, ‘விஷ்ணு டெம்பிள்ஸ் ஆஃப் காஞ்சிபுரம்’ ஆங்கில நூல் மூலம் இவர் சிறந்த ஒளிப்படக் கலைஞராகவும் தெரியவருகிறார். “பழங்காலத்தில் கிராமங்களும் நகர்புறங்களும் அடைந்த வளர்ச்சி குறித்து எனக்கு ஆய்வு செய்வதில் விருப்பம் உண்டு. அதன் அடிப்படையில் ஒரு சிறு கிராமம், காலனிய ஆட்சிகாலம்வரை வளர்ந்த கதையை இந்த நூலில் ஆய்வு செய்துள்ளேன்.” என்கிறார்.
காஞ்சியை அடுத்து கும்பகோணம் குறித்து ஆராய்ந்து வரும் நாகசாமி, தமிழகத்தில் எழுத்து ஆவணங்கள் ஏராளமாகத் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சமூகம், பொருளாதாரம், கட்டிடக் கலை, கலைகள் ஆகியவை எப்படி வளர்ச்சியடைந்தன என்பதைச் சான்றாதாரங்களுடன் விளக்க முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இவர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago