ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 11
இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் தென் மாநிலங்களும் வட மாநிலங்களும் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஏறத்தாழ ஒரே நிலையில் இருந்தன. ஆனால், இன்று தென் மாநிலங்களின் வளர்ச்சி சில ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளது. அதுவே வட மாநிலங்களின் நிலைமை ஆப்பிரிக்க நாடுகளோடு ஒப்பிடத்தக்க அளவில் பின்தங்கி உள்ளது.
இரண்டு பிராந்தியங்களும் ஒரே நாட்டுக்குள்தான் இருக்கின்றன. எனில், வட மாநிலங்கள் பின்தங்கி இருக்கும் நிலையில் தென் மாநிலங்கள் மட்டும் எப்படி வளர்ச்சி அடைந்தன? தென் மாநில அரசுகளின் சமூக நோக்கு திட்டங்களாலேயே இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்கிறார் டேட்டா சயின்டிஸ்ட் ஆர்எஸ் நீலகண்டன்.
அவரது ‘South vs North: India’s Great Divide’ (‘தெற்கு vs வடக்கு: இந்தியாவின் பெரும் பிளவு’, தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்) நூல், தென் மற்றும் வட மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாட்டை தரவுகளுடன் அலசுகிறது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கான காரணங்களை பட்டியலிடுவதோடு மத்திய, மாநில அரசுகள் இடையிலான அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வையையும் அந்நூல் முன்வைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 2022-ம் ஆண்டு வெளியான இந்நூல், இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.
மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறித்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசு அதன் வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசு 32 சதவீதம் அளவிலேயே நிதியை மாநிலங்களுடன் பகிர்கிறது. தவிர, இந்த நிதிப் பகிர்விலும் சமமின்மை நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை தென்மாநிலங்கள் முன்வைத்துள்ளன.
மத்திய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 29காசுகள் மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது என்ற விமர்சனத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. அதுவே, உத்தர பிரதேசம் செலுத்தும் 1 ரூபாய்க்கு ரூ.2.73, பிஹாருக்கு ரூ.7.06 நிதிப் பகிர்வாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நியாயமான முறையில் நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கியுள்ளன.
இது ஒரு பக்கம் என்றால், “நிதி ஆணையத்தின் பரிந்துரைபடிதான் வரி பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதை ஏற்றுகொள்ளாமல், தென் மாநிலங்கள் பிரிவினையை உருவாக்கும் நோக்கில் போராட்டம் நடத்துகின்றன” என்று அம்மாநிலங்களின் போராட்டத்தை மத்திய அரசு விமர்சிக்கிறது. உண்மையில், தெற்கு - வடக்கு இடையே என்னதான் பிரச்சினை? நீலகண்டனுடன் உரையாடினேன்....
‘தெற்கு vs வடக்கு’ புத்தகத்தை எழுத எது தூண்டுகோலாக இருந்தது?
2017-ம் ஆண்டு 15-வது நிதி ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக, அதன் திட்டங்கள் சார்ந்த வரைவு வெளியிடப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தென் மாநிலங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
காரணம், 1970-களில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்டதென்மாநிலங்கள் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவில்லை.
உதாரணத்துக்கு 1971 - 2011 வரையிலான காலகட்டத்தில் மக்கள்தொகை அதிகரிப்பு தமிழ்நாட்டில் 75 சதவீதமாகவும், கேரளாவில் 56 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், ராஜஸ்தான், ஹரியாணா, பிஹார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரிப்பு 142 சதவீதம் முதல் 166 சதவீதமாக இருந்தது.
இந்நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின்படி, நிதிப் பகிர்வு மேற்கொண்டால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு அது பாதகமாகவே அமையும். இது தொடர்பாக நான் அந்த சமயத்தில் கட்டுரை ஒன்று எழுதினேன். அது தேசிய அளவில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு தரவைப் பின் தொடர்ந்தால், அது நம்மை நாம் எதிர்பாராத இடங்களுக்குக் கூட்டிச் செல்லும். முதலில் நிதிப் பகிர்வு சார்ந்த தரவுகளைத்தான் நான் தேடினேன்.
ஆனால், அது என்னை கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் எந்த நிலையில் உள்ளது, ஏன் அவை அந்த நிலையில் உள்ளன என நாம் அதுவரையில் கவனம் செலுத்திராத இடத்துக்கு அழைத்து வந்தது. அந்தப் பயணம்தான் இந்தப் புத்தகம்.
தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கும் வரியை, மத்திய அரசு உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு செலவிடுகிறது. இந்த நடைமுறை சரியானது இல்லை என்ற வாதத்தை நீங்கள் இந்நூலில் முன்வைக்கிறீர்கள். இதே வாதத்தை நாம் மாவட்ட அளவுக்கு எடுத்து வருவோம். தமிழ்நாட்டில் ஈரோடு தொழில் வளர்ச்சி மிகுந்த ஒரு மாவட்டம். அம்மாவட்டத்திலிருந்து கிடைக்கும் வரியைக் கொண்டு தமிழ்நாடு அரசு பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தை மேம்படுத்த செலவிடுகிறது. இப்போது ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர், “எங்கள் மாவட்டத்திலிருந்து பெற்ற வரியை ஏன் அரியலூருக்குச் செலவிடுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்ப முடியும் இல்லையா? -
இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது அவசியம். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்களை தமிழ்நாட்டோடுதான் அடையாளப்படுத்துவர். தமிழர் என்ற உணர்வு அதில் பிரதானமாக உள்ளது. இதை நாம் குழுமம் என்று சொல்லலாம். இதன் காரணமாக, நாம் ஏனைய மாவட்டங்களை நம் அங்கமாகவே உணர்கிறோம். குடும்பம், தெரு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு இந்த வரிசையில்தான் நம் குழும உணர்வு இயங்குகிறது. இதில், சாதி, மதம், இனம், மொழி என பல விஷயங்களும் உள்ளடங்கும்.
தமிழ்நாட்டில் எதாவது ஒரு மோசமான நிகழ்வு நடந்தால், அது குறித்த நம்முடைய வருத்தம் அதிகமாக இருக்கும். உத்தர பிரதேசத்தில் நடந்தால், வருத்தத்தின் தீவிரம் சற்று குறையக் கூடும். இதுவே, ஆஸ்திரேலியாவிலோ, டென்மார்க்கிலோ நடந்தால், நம்முடைய வருத்தம் இன்னும் குறைவாக இருக்கும். என்ன காரணம்? தமிழ்நாட்டை நாம் நம்முடைய முதன்மைக் குழுவாக உணர்கிறோம்.
அதுதான் ஈரோட்டிலிருந்து பெறும் வரியைக் கொண்டு அரியலூரை மேம்படுத்த செலவிடுவதற்கும், தமிழ்நாட்டிலிருந்து பெற்ற வரியைக் கொண்டு உத்தர பிரதேசத்தை மேம்படுத்த செலவிடுவதற்கும் உள்ள வித்தியாசம் ஆகும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி கொடுக்கக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. நம்முடைய வரிப்பணம் எப்படி செலவிடப்பட வேண்டும் என்று முடிவு செய்வதில் நமக்கும் உரிமை வேண்டும். அதுதான் ஜனநாயக முறை.
மொழி, இன உணர்வு அடிப்படையிலான துணை தேசியவாதம் தென்மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருப்பதாக கூறுகிறீர்கள். குஜராத்தை எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் போன்று துணை தேசியவாதம் அங்கு கிடையாது. ஆனால், குஜராத் பொருளாதார ரீதியாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
குஜராத்தின் பொருளாதாரம் நன்றாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அந்தப் பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாடாக மாறவில்லை. குழந்தை இறப்பு, பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம், ஊட்டச்சத்து, மருத்துவர்கள் - மக்கள் விகிதாச்சாரம், மருத்துவமனை படுக்கை எண்ணிக்கை உள்ளிட்டவற்றில் அது பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
குஜராத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அதிகம். இரண்டு மடங்கு மக்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். அவர்களின் ஊதியமும் அதிகம். இதுவே குஜராத்தை எடுத்துக் கொண்டால், அம்மாநிலத்தில் மேம்பட்ட தொழில் கட்டமைப்பு இருந்தாலும், அதன் பலன் அங்குள்ள சாமானிய மக்களைச் சென்றடையவில்லை. இதற்கு, அங்கு துணை தேசியவாதம் இல்லாததும் ஒரு காரணம் என்று சொல்ல முடியும்.
துணை தேசியவாதம், மக்களை ஒரு பொது இலக்கு நோக்கு பயணிக்கச் செய்கிறது. மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். ‘நம்ம தமிழ்நாட்டு பிள்ளைங்க கல்வி கற்று முன்னேற வேண்டும்’ என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு உணர்வு நிலையாகவே உள்ளது.
‘நம்ம பிள்ளைங்க’ என்ற உணர்வு துணை தேசியவாதம் வழியே உருவாகிறது. உத்தர பிரதேசம், பிஹாரில் கடந்த 20 ஆண்டுகளாக மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், அங்கு மாணவர் சேர்க்கை மேம்படவில்லை. காரணம், அங்கு ‘நம்ம பிள்ளைங்க’ என்ற சமூக உணர்வு உருவாகவில்லை.
கொள்கை உருவாக்கம், நிதிப் பகிர்வு, அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்து மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து வருவதாக தென்மாநிலங்கள் மட்டுமல்லாது மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. தற்போதைய பொருளாதார காலகட்டத்தில் மாநிலங்களுடனான அதிகாரப் பகிர்வு சார்ந்து மத்திய அரசு செய்ய வேண்டிய மாற்றம் என்ன?
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் சார்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய வேறுபாடு நிலவுகிறது. எல்லா மாநிலங்களையும் ஒரே கொள்கைக் கொண்டு நிர்வகிக்க முடியாது. அப்படி செய்வது முன்னேறிய மாநிலங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தக்கூடியதாகவே அமையும். எனவே, மாநிலங்கள் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்பை மத்திய அரசுவழங்க வேண்டும்.
மேலிழுந்து கீழாக (Top Down) இல்லாமல், கீழிலிருந்து மேலாக (Bottom Up) நாடு நிர்வகிக்கப்பட வேண்டும். அதுவே, மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை சரி செய்து, இந்தியாவை சமத்துவமிக்க வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். மத்திய அரசிடம் அதிகாரப் பகிர்வு கோருவது போல், மாநில அரசும் அதன் கிராமப் பஞ்சாயத்து வரை அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
- riyas.ma@hindutamil.co.in
ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 10 - டீ கடை ரூ.150 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய கதை - ‘சாய் கிங்ஸ்’ நிறுவனர்கள் ஜஹபர் சாதிக், பாலாஜி சடகோபன் பேட்டி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago