என்னுடைய எவர்கிரீன் எம்.ஜி.ஆர் பாடல் இது:
“கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும் நீ காட்டும் தோற்றம்..!”
இது பற்றி கடைசியில் கூறுகிறேன். முதலில் என் பழைய கட்டுரையைப் படித்துவிட்டு கேட்ட ஒரு நண்பரின் கேள்வி.
“மேலதிகாரிதான் வேலையின் மிகப்பெரிய அவஸ்தை. தப்பான ஆள் கிட்ட மாட்டிக்கிட்டா வாழ்க்கை அவ்வளவுதான். மோசமான பாஸ்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கற என் போன்றவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கக் கூடாதா?”
சுமூகமாக இல்லாத பணியாளர்- மேலதிகாரி உறவு ஒரு சிரமமான தாம்பத்யம் போலத்தான். பரஸ்பர வெறுப்பும், பழி வாங்குதலும், எதிராளியை மறைந்தும் மறையாமலும் தாக்கும் முயற்சிகளும், பார்க்காத நேரத்திலும் அதிகம் நினைக்கும் உறவாக அது உருப்பெறும்.
வேலையை விட்டு விலக இது பெரும்பான்மை காரணமாகவும், வேலையை விட முடியாத சூழ்நிலையில், வேலையில் ஏற்படும் எல்லாச் சுணக்கங்களுக்கும் காரணமாகவும் அமைகிறது.
மேலதிகாரியை வெறுத்து வேலையைவிடும் சவுகரியம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. பலருக்குப் பொருளாதார நெருக்கடிகளும் குடும்பச் சுமைகளும் உண்டு. இருக்கும் நிறுவனத்தை விட்டால் தனக்கு இந்த அளவிற்கு நல்ல வேலை கிடைக்காது என்று பலர் மவுனமாக பொறுத்துப் போகின்றனர்.
“என்ன வேலை செஞ்சாலும் திருப்தி கிடையாது. சதா திட்டு. அதுவும் எல்லாருக்கும் முன்னாலே.”
“ நாம பண்றதும் தப்பு என்பார். என்ன பண்றதுன்னும் சொல்ல மாட்டார். டார்ச்சர்.”
“எப்பவும் எல்லாரையும் வேவுக் பாக்கறதே வேலை.”
“எப்பவும் ஒரு டென்ஷன்லேயே இருக்கணும். எப்போ என்னாகுமோன்னு.”
“கிளம்பும் நேரம் பார்த்துத் தான் மீட்டிங் எனக் கூப்பிடுவார்.”
இப்படி பாஸ் பற்றிய வசைகள் நிறைய கேட்கிறோம். இவையெல்லாம் உண்மையென்றால் பாஸ் என்பவர் ஒரு கொடிய மிருக இனத்தைச் சேர்ந்தவரா?
உண்மையில் நல்ல பாஸ், கெட்ட பாஸ் என்று யாரும் இல்லை. நல்ல உறவு, (சீர்) கெட்ட உறவு என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாம்.
திருமண சிகிச்சைக்கு வருபவர்களிடம் நான் தவறாமல் சொல்வதுண்டு: மோசமான கணவன், மோசமான மனைவி என்று யாரும் கிடையாது. மோசமான உறவு என்பது மட்டும் தான் நிஜம்.
தனிப்பட்ட முறையில் இருவரும் நல்ல மனிதர்கள். ஆனால் அவர்களின் கூட்டு ஒரு ஒவ்வாத கூட்டு. இதுதான் உண்மை. அதே போலத்தான் பணியிடத்திலும்.
அதிகாரக் குவிப்பு மேலதிகாரியிடம் உள்ளதால் ஒரு பாதுகாப்பாற்றத் தன்மை இயல்பாகவே பணியாளருக்கு வரும். பரஸ்பர எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகும் பொழுது, இருவருக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. தவிர இது தினசரி வாழ்க்கை. அதனால் தினம் ஒருவரோடு மற்றொருவர் பணியாற்ற வேண்டிய கட்டாயம். அது ஒரு உதவியற்ற நிலையை உருவாக்குகிறது.
தனக்குக் கீழே பணியாற்றும் ஆளை மாற்றக் கோரும் உரிமை மேலதிகாரிக்கு உண்டு. ஆனால் தன் மேலதிகாரியை மாற்றக் கோரும் உரிமை பணியாளருக்குக் கிடையாது.
அரசு போன்ற அமைப்புகளில் தனக்கு இளையவர் மேலதிகாரியாக இருந்தால், அது பதவி உயர்வைப் பாதிக்கும். நிச்சயம் தனக்குப் பதவி உயர்வு கிடைக்காது எனும்போது பணியாளருக்கு ஒரு அலுப்பு தோன்றுகிறது.
இருவரில் யார் திறமையாளர் என்று வேறொரு போட்டியும் தொடர்ந்து உள்ளே நடக்கிறது. ‘இது கூட இந்த ஆளுக்கு தெரியலை!’ என்பது போன்ற தொடர்ந்த விமர்சனங்கள் இதனால்தான்.
சின்னப் பொறியை ஊதிப் பெரிதாக்குபவர்கள் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களும் அலுவலுகத் தொடர்புகளும். நம்மைக் கொம்பு சீவியும், சோதனை எலியாக ஆக்கவும் அவர்கள் தவறுவதில்லை.
பாஸைக் கேலிப் பொருளாக்கி, நம் சுற்றம், குடும்பம் என எல்லா நேரமும் பேசி வரும் மனிதர்கள் சில கற்பனை சுகங்களில் இளைப்பாறுதல் கொள்கிறார்கள். ஆனால், இந்த கேலிப்பேச்சு பல சுற்றுகளுக்குப் பின் சம்பந்தப்பட்ட நபருக்கே போய்ச் சேர்ந்துவிடும் அபாயம் நடக்கும். அது பழுதுபட்ட உறவை மேலும் சீர் கெடுக்கும்.
மேலதிகாரியுடன் இணக்கமான உறவு கொண்டோருக்கு அமைப்பில் நல்ல பெயர் இருக்காது. சொம்பு, ஆயில், மஸ்கா, ஆமாஞ்சாமி, காக்கா என பல பட்டப் பெயர்கள் கிடைக்கும்.
ஆனால் சாதுர்யமாக யோசித்துப் பார்த்தால் அனைவரிடம் நீங்கள் மோசமான பெயர் எடுத்தாலும், உங்கள் பாஸிடம் நல்ல பெயர் எடுத்தால் உங்கள் பணி வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆயிரம் பெண்களுக்கு உங்களைப் பிடித்து என்ன பயன்? மனைவிக்கு பிடிக்கணுமே!!
பாஸ் மிரட்சியில் உள்ளவர்களுக்கு என் பால பாடங்கள் இவை:
உங்கள் மேலதிகாரியின் பணி எதிர்பார்ப்புகள் என்ன என்று தெளிவாக தெரிந்து கொண்டு அதைத் தொடர்ந்து நிறைவேற்றுங்கள்.
உங்கள் பரஸ்பர எதிர்பார்ப்புகள் வேறுபட்டால் அதை அவரிடம்- அவரிடம் மட்டுமே- பேசி இடைவெளிகளை குறைக்கப் பாருங்கள். இயலாவிட்டால் அதை ஒரு நிதர்சனமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களை ஒரு சவுகரிய வட்டத்திற்கு வெளியே அழைத்துச்செல்லும் போதெல்லாம் மேலதிகாரியைத் தூற்றாமல் அதை ஒரு புதிய கற்றல் அனுபவமாகக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு இணக்கமான மேலதிகாரியைவிட ஒரு கறாரான ஆளிடம்தான் அதிகம் கற்பீர்கள், முன்னேறுவீர்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
“அந்த ஆளுக்குத்தான் நம்மை பிடிக்கவே இல்லையே..எப்படி இதையெல்லாம் செய்வது?” என்கிறீர்களா? அவசியம் என்றால் வசியம் பண்ண நமக்கா தெரியாது?
எனக்கும் மோசமான பணி அனுபவங்கள் உண்டு. ஆனால் இன்று அவற்றைத் திரும்ப நோக்கினால் நாம் எப்படி எல்லாவற்றையும் திரித்துப் புரிந்து கொள்கிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நமக்குப் பிடித்த மனிதரின் பலவீனங்களை மறைத்தும், நமக்கு பிடிக்காத மனிதரின் பலங்களை மறைத்தும் நாம் பார்க்கிறோம்.
ஒரு எதிரி என்றாலே அவரின் பலங்கள் முழுவதும் தெரியணும். நம் மேலதிகாரியின் நல்ல பண்புகள், ஆக்கபூர்வமான திறன்களை அலட்சியப்படுத்துவதால் நம் கற்றல் குறைபட்டதாகவே நிகழ்கிறது.
யோசியுங்கள் உங்களுக்குப் பிடிக்காத பாஸிடம் என்னென்ன நல்ல விஷயங்கள் உள்ளன என்று? நாற்காலி மாறி உட்கார்ந்து அவர் சுமைகள், சங்கடங்களை உணருங்கள்.
கடைசியாக ஒன்று, நீங்கள் ஒரு மேலதிகாரியாக (உங்களிடம் பணியாற்றுபவர்களிடம்) எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று யோசியுங்கள். நம் குறைபட்ட பார்வைகள் விலகும்.
சரி, எம்.ஜி.ஆர் பாடலுக்கு வருவோம். “கண்ணை நம்பாதே...!” என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்றே நினைத்து அவர் மேல் எனக்குள்ள அபிமானத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தேன். சென்ற வாரம்தான் தெரிந்தது அதை எழுதியது மருதகாசி என்று!
என் மனம் செய்யும் விளையாட்டு புரிந்தது. புலனறிவைவிட மெய்யறிவு எவ்வளவு முக்கியம்?
இப்பொழுது பாடலின் வரிகள் எனக்கு புதிய பொருளை உணர்த்துகின்றன:
“கண்ணை நம்பாதே, கண்ணை நம்பாதே!.
உன்னை ஏமாற்றும் நீ காட்டும் தோற்றம்- உண்மை இல்லாதது.
அறிவை நீ நம்பு. உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்- பொய்யே சொல்லாதது!”
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago