சேதி தெரியுமா?: காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம்

By கனி

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, காவிரி பிரச்சினைக்காகத் தமிழக அரசு சார்பில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

27CHGOW_SATYABRATA_SAHOOrightதமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ பிப்ரவரி 22 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானி செயல்பட்டுவந்தார். இந்நிலையில்.

புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது, சென்னைப் பெருநகரக் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவிவகித்துவரும் சத்யபிரதா சாஹூ, விரைவில் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பதவியேற்கஇருக்கிறார்.

 

மனித உரிமைகள், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தா?

‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பு, 2017-18-ம் ஆண்டுக்கான ‘உலகில் மனித உரிமைகளின் நிலை’ என்னும் தலைப்பில் பிப்ரவரி 22 அன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

159 நாடுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, உலகத் தலைவர்கள் ஒரு பக்கம் மனித உரிமை மீறலைத் தூண்டிவிடுவதாகவும், மறுபக்கம் மனித உரிமை மீறலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

உலக நாடுகளில் பல்வேறு விதங்களில், மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மனித உரிமை, கருத்து, பேச்சு சுதந்திரத்துக்குக் கடந்த ஆண்டில் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக இந்த அறிக்கை குற்றம்சாட்டியிருக்கிறது. பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் கொலைகள், பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் சம்பவங்களை இந்திய அரசு வெளிப்படையாக ஆதரித்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஊழல் மலிந்த நாடுகள் இந்தியாவுக்கு 81-வது இடம்

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், 2017-ம் ஆண்டின் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் இருக்கிறது. பூஜ்ஜியம் முதல் 100 வரை மதிப்பெண் அடிப்படையில் இந்த ஊழல் நாடுகளின் பட்டியல் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா 40 மதிப்பெண்தான் பெற்றிருக்கிறது. உலகின் 180 நாடுகள் கலந்துகொண்ட ஆய்வில், 100-க்கு 89 மதிப்பெண் பெற்று நியூசிலாந்தும் 100-க்கு 88 மதிப்பெண்கள் பெற்று டென்மார்க்கும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. சிரியா (14 மதிப்பெண்), தெற்கு சூடான் (12), சோமாலியா (9) ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டு, இந்தப் பட்டியலில் இந்தியா 79-வது இடத்தில் இருந்தது.

 

கனடா பிரதமரின் இந்தியப் பயணம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் குடும்பத்தினருடன் பிப்ரவரி 17 அன்று அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பிப்ரவரி 23 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையே தொழில், மின்சாரம், மருத்துவச் சேவை, தகவல் தொழில்நுட்பம், அறிவியல், பாதுகாப்பு, ராணுவத் துறைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாடுகளுக்கிடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கனடா பிரதமர் இந்தியாவுக்கு வந்து, ஆறு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தாமதமாக அவரைச் சந்தித்ததுக் குறித்துச் சர்ச்சைகள் எழுந்தன.

மாநிலங்களவையில் 58 இடங்களுக்குத் தேர்தல்

மாநிலங்களவையில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 58 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல்-மே மாதங்களில் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் மார்ச் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் உத்திரபிரதேசம் (10), பிஹார் (6), மகாராஷ்டிரா (6), மத்தியப் பிரதேசம் (5), மேற்கு வங்காளம் (5), கர்நாடகா (4), குஜராத் (4), ஆந்திரப் பிரதேசம் (3), தெலங்கானா (3), ஒடிஷா (3), ராஜஸ்தான் (3), ஜார்க்கண்ட்(2), சட்டீஸ்கர்(1), ஹரியாணா(1), இமாசல பிரதேசம்(1), உத்தராகண்ட்(1) ஆகிய இடங்களை நிரப்புவதற்கு இந்த மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், கேரள ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திரகுமார், டிசம்பர் 20, 2017 அன்று தனது பதவியை ராஜினாமா செய்ததால், அவரது இடத்தை நிரப்பவும் மார்ச் 23 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும்.

 

அமெரிக்க ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி பயிற்சி?

10 லட்சம் ஆசிரியர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்க அமெரிக்க அரசு நிதி வழங்கத் தயாராகிவருவதாக வெள்ளை மாளிகை தரப்பில் பிப்ரவரி 22 அன்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவின் பள்ளியில் பிப்ரவரி 14 அன்று துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவர் நிக்கோலஸ் க்ரூஸ் கைது செய்யப்பட்டார். பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்துப் பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி பயிற்சி அளிக்கப்படும் என்ற அதிபர் டிரம்பின் கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

 

பாம்பு போல செல்லும் ரோபோட்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், பாம்புகளைப் போல ஊர்ந்துசெல்லும் மென் ரோபோட்டை உருவாக்கியிருக்கின்றனர். இந்த மென் ரோபோட்டைப் பற்றிய தகவல்கள் ‘சயின்ஸ் ரோபோட்டிக்ஸ்’ இதழில் பிப்ரவரி 22 அன்று வெளியானது. ஜப்பானிய ‘பேப்பர் கட்டிங்’ உத்தியான ‘கிரிகாமி’யைப் பயன்படுத்தி இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தியைப் பயன்படுத்திப் பல்வேறு வகையான மென் ரோபோட்களை உருவாக்கலாம் என்று ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். மென் ரோபோட்களைக் கண்காணிப்பு, தேடல், பாதுகாப்பு, மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்