க
னவை நிஜமாக்குபவர்களுக்கும் கனவை வெறும் கனவாகவே தொடர்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடே வெற்றிபெறும் மனப்பாங்கு. சிலர் இயல்பிலேயே தங்கள் திறமை மீது நம்பிக்கைகொண்டு எதுவும் முடியுமென்று வெற்றிபெறும் மனப்பாங்குடன் வலம் வருவார்கள். சிலரிடம் அதற்கு எதிர்மறையான மனப்பாங்குதான் வெளிப்படும். எப்படிப்பட்டவர்களும் வெற்றிபெறும் மனப்பாங்கை எளிய வழிமுறைகளைப் பின்பற்றி வளர்க்கலாம்.
பிடிக்காததும் பிடிக்கும்
விருப்பத்துடன் செய்யும் எந்தச் செயலும் சலிப்பையோ வெறுப்பையோ தராது. இதனால்தான் உங்களுக்குப் பிடித்த பாடத்தைப் படிப்பது எளிதாகத் தோன்றுகிறது, பிடிக்காத பாடம் வேப்பங்காயாகக் கசக்கிறது. பிடிக்காது என்பதற்காகப் படிக்காமல் இருக்க முடியாது. எனவே, முதலில் பிடிக்காததற்கான காரணத்தைக் கண்டுணர்ந்து அதைக் களைய வேண்டும். இதன்மூலம் பிடிக்காததைப் பிடித்ததாக மாற்றி எளிதாகப் படிக்கலாம்.
நேர்மறையாகச் சிந்தித்தல்
நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் கடினச் சூழ்நிலையைச் சாதிப்பதற்கான வாய்ப்பாகக் கருதுவார்கள். எதிர்மறையாகச் சிந்திப்பவர்கள் தங்கள் முன்னால் உள்ள வாய்ப்பைக் கடினச் சூழ்நிலையாகக் கருதுவார்கள். நேர்மறையாகச் சிந்திப்பதையும் நேர்மறையாகப் பேசுவதையும் நேர்மறையாகச் செயல்புரிவதையும் உங்களுடைய இயல்பாக மாற்றிக்கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு நம்மிடம் ‘முடியும், முடியாது’ என்ற இரண்டு எண்ணங்கள்தான் உண்டு. அவற்றில் ‘முடியும்’ என்ற எண்ணத்தை விருப்பத் தேர்வாக எப்போதும் அமைத்துக்கொள்ளுங்கள்.
நேர்மை நல்லது
மற்றவர்களிடம் நேர்மையாக இருக்க முயல்வதற்கு முன்னால் நம்மிடம் நேர்மையாக இருப்பது முக்கியம். நீங்கள் எவ்வாறு படித்தீர்கள் என்பது உங்கள் மனதுக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் சிரத்தையுடன் படிக்கிறீர்கள் என்று பெற்றோர்களை நம்பவைப்பதற்கு அறையில் விளக்கை எரியவைத்துக் கையில் புத்தகத்தை வைத்திருந்தால்போதும். ஆனால், அவர்களின் அந்த நம்பிக்கை ஒருபோதும் உங்களுக்கு மதிப்பெண்ணைப் பெற்றுத்தராது.
முழுமையான ஈடுபாட்டுடன் நன்றாகப் படிப்பது மட்டுமே மதிப்பெண்ணைப் பெற்றுத்தரும். எனவே, எந்தச் செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் நேர்மையாக நிறைவேற்றுவதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.
உணர்வுகளைக் கண்காணித்தல்
மனதில் எழும் உணர்வுகள் நிலையானவை அல்ல. எவ்வாறு சிறு வெற்றியில் துள்ளிக் குதிக்குமோ அதேபோன்று சிறு தோல்வியிலும் அது துவண்டு நம்மைக் கூட்டுக்குள் அடைத்துவிடும். எனவே, உணர்வுகளைக் கண்காணித்து அது பரவும் வேகத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் நம்மை நாம் அதிகம் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
முன்னேற்றத்தைக் கண்காணித்தல்
லட்சியமும் கனவும் ஒரே நாளில் சாத்தியமாகிவிடாது. அது தொடர் முயற்சியால் மட்டுமே நனவாகும். எனவே, அந்த முயற்சிகளால் நீங்கள் அடையும் முன்னேற்றங்களை தினமும் கண்காணிப்பதன் மூலம் உங்கள் பயணத்தை இலக்கிலிருந்து விலகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
சாக்குப்போக்கு வேண்டாம்
நேர்மையாக முயல்பவர் ஒருபோதும் சாக்குப்போக்கு சொல்லமாட்டார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பு என்பதால் அதன் முடிவுகளுக்கும் மகிழ்ச்சியுடன் தைரியமாகப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். மற்ற எந்தப் பண்பு இல்லாவிட்டாலும், நடப்பவற்றுக்குப் பொறுப்பேற்கும் இந்த ஒரு பண்பு உங்களின் வருங்கால வெற்றிக்குப் போதுமானது.
ஆரோக்கியமான நட்பைப் பேணுதல்
முக்கியத்துவம் வாய்ந்த நட்பைச் சரியான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். நேர்மறைச் சிந்தனை கொண்டவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். எதிர்மறை எண்ணம் எளிதில் பரவக்கூடியது. எனவே, அத்தகைய எண்ணம் கொண்ட நபர்களிடமிருந்து தள்ளியே இருங்கள். நண்பர்களை பொழுதுபோக்கிற்கானவர்களாக மட்டும் கருதாமல் நல்ல சிந்தனைகளையும் பண்புகளையும் வளர்த்துக்கொள்வதற்கானவர்களாகக் கருதுங்கள்.
தன்னடக்கம் காத்தல்
தோல்விக்கு முழுமையாகப் பொறுப்பேற்பது எந்தளவு முக்கியமோ அதே அளவுக்கு வெற்றிக்கும் முழுவதுமாக சொந்தம்கொண்டாடாமல் இருப்பதும் முக்கியம். சிறு வெற்றியாக இருந்தாலும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அந்த வெற்றியைக் காணிக்கையாக்குங்கள். தன்னடக்கம் மேன்மேலும் வெற்றி அளிக்கும்.
அனைவரும் வெற்றியாளர்கள்
வெற்றி என்பது ஒரு செயலின் முடிவில் பெறுவது அல்ல. அது அதற்கான முயற்சியில் உள்ளது. நீங்கள் எவ்வளவு உயரம் குதிப்பீர்கள் என்பதையும் எவ்வளவு வேகமாக ஓடுவீர்கள் என்பதையும் பிறரால் அளவிட முடியும். ஆனால், உங்கள் முயற்சியின் வீரியத்தை யாராலும் அளவிட முடியாது. அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சில நேரம் அது உங்களுக்கும் தெரியாத ரகசியம்.
உயிர் வாழ்வதைவிட மிகப் பெரிய வெற்றி எதுவுமில்லை என்பதால் இங்கு வாழும் அனைவரும் வெற்றியாளர்களே. சுவாசிப்பது உயிர் வாழ்வதற்கான முயற்சி என்பதால் முயற்சியற்ற மனிதர் இல்லை. எப்படி நாம் சுவாசிக்கும்போது உயிர் வாழ்வதைப் பற்றி எண்ணுவதில்லையோ அதே போன்று நம் முயற்சிகளின்போது அவற்றின் முடிவுகளைப் பற்றி எண்ணாமல் இருப்பதில்தான் வெற்றிபெறும் மனப்பாங்கு அடங்கியுள்ளது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago